Friday, June 24, 2011

"ஊதியம்"


என்னை நானே விலைபேசி
விற்கும் முயற்சி.


தன்மானத்திற்கு பேசப்படும்
விலை.


உயிரை அடகு வைத்து
வயிறு வளர்க்கும் தொழில்.


இதயத்தை அடகு வைத்து
இலக்கு நோக்கும் பயணம்.


அவமானம் விற்றுக் கிடைத்த
வெகுமானம்.


வியர்வைத் துளிக்கு கிடைத்த
சன்மானம்.


எனக்கு நானே செய்து கொள்ளும்
தற்கொலை.


மனதின் காயங்களுக்கு காலத்தின்
மருந்து.


உழைப்புச் சுரண்டலுக்குப் பின்னிட்ட
பிச்சை.


வருந்தி வருந்தி வாங்கிய வாழ்க்கையின்
எச்சம்.


எல்லாம் தொலைத்துப் பெற்ற
ஏகாந்தம்.


சுயம் தொலைத்த சோகத்தில் கிடைத்த
சுகம்.


மனமின்றி கையொப்பம் இட்டபடி
நான்.


மறுபடி மறுபடி கேள்வி கேட்டபடி
என் மனம்.
  
இதற்குதான் பிறந்தாயா...?
இதற்காகதான் வாழ்ந்தாயா...?




எதுவுமற்ற வெறுமையில் கனக்கிறது
கணங்கள்....!!


கனமில்லாமல் சிரிக்கிறது சட்டைப்பையில்
ஒருமாத ஊதியம்.

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சாட்டையடி கவிதை...

Prabu Krishna said...

எல்லோருடைய வாழ்க்கையும் இப்படியே....

கூடல் பாலா said...

நல்லா வச்சி வாங்கிட்டீங்க .

தமிழ்க்காதலன் said...

வாங்க கவிதை வீதி சௌந்தர், வணக்கம். உங்க தொடர் வருகைக்கும், அடர் வாசிப்புக்கும் மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

தமிழ்க்காதலன் said...

வாங்க பிரபு, உங்கள் வருகையும், கருத்தும் ஊக்கமளிக்கின்றன. தொடருங்கள்... உங்கள் வாசிப்பை.

தமிழ்க்காதலன் said...

எமது வலைப்பூவுக்கு முதல் வருகைத் தரும் கூடல் பாலா, வாங்க. உங்களை வரவேற்கிறேன். முதல் கருத்தையே முத்தாய்ப்பாய் தந்தமைக்கு நன்றி.

arasan said...

வாழ்வின் ஒரு நிலையை கூறி விட்டிர்கள் ..
நல்லதொரு கவிதை ,.,. வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

Super kavithai boss

rajamelaiyur said...

Super kavithai boss

Kayathri said...

இதற்குதான் பிறந்தாயா...?
இதற்காகதான் வாழ்ந்தாயா...?

---தங்கள் வினா நியாயமானதுதான்.

இன்று பல பேர் அப்படித்தான் இருக்கிறோம்...ஏன் பிறந்தோம், எதற்குப்பிற்ந்தோம் என்று அறியாமலே வெறும் வேலைப் பார்ப்பதும், நல்ல சம்பளம் வாங்குவது மட்டும்தான் வாழ்க்கை என்ற அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...