Thursday, December 02, 2010

"குயிலும் - மயிலும்...!"

செல்லம்மாவின் கரம் பிடித்தவன்
"செல்லமாய்" கண்ணம்மா....!

வாழ்க்கை சிறையில்....
துணைக் கைதியாய் செல்லம்மா...!
சிந்தனை சிறைக்குள்....
ஆயுள் கைதியாய் கண்ணம்மா....!

உறவுகள் தந்த ...
இரவல் வாழ்க்கை செல்லம்மா...!
நினைவுகள் தந்த ....
நிச வாழ்க்கை கண்ணம்மா...!

கற்பனைக்கு ...
கடிவாளம் கேட்டவள் செல்லம்மா...!
கற்பனைக் குதிரைக்கு....
சிறகு தந்தவள் கண்ணம்மா...!

விழிகளில் உறக்கம் செல்லம்மா
விழிகளின் கனவு கண்ணம்மா
உறவுகளின் பரிசு செல்லம்மா
உணர்வுகளின் உயிர் கண்ணம்மா

ஓய்வெடுக்கும் கட்டில் செல்லம்மா
ஓங்கி நிற்கும் கம்பீரம் கண்ணம்மா
வாங்கி வந்த வாழ்க்கை செல்லம்மா
வாழ்க்கைத் தந்த வரம் கண்ணம்மா

பசியும், தாகமும் சொன்னவள் செல்லம்மா
பாரும், பாட்டும் சொன்னவள் கண்ணம்மா
விதியின் வலிமை சொன்னவள் செல்லம்மா
வாழ்வின் இலட்சியம் சொன்னவள் கண்ணம்மா

தெள்ளிய நீரோடை செல்லம்மா
கவிதை காட்டாற்று வெள்ளம் கண்ணம்மா
நல்லுதவி செய்தவள் செல்லம்மா
தெள்ளுத் தமிழ் செய்தவள் கண்ணம்மா

வறுமையில் செம்மை சேர்த்தவள் செல்லம்மா
வாழ்க்கையில் செம்மை சேர்த்தவள் கண்ணம்மா

பாரதியின்.,
வாழ்க்கையில்.....,
கால்தடம் பற்றியவள்..... செல்லம்மா.
காதல் தடம் பதித்தவள் .... கண்ணம்மா.


12 comments:

Chitra said...

தெள்ளிய நீரோடை செல்லம்மா
கவிதை காட்டாற்று வெள்ளம் கண்ணம்மா
நல்லுதவி செய்தவள் செல்லம்மா
தெள்ளுத் தமிழ் செய்தவள் கண்ணம்மா


.....தெளிவான ஒப்பீடு. நல்லா எழுதி இருக்கீங்க.

எஸ்.கே said...

ஆமாம் செல்லம்மாள் எவ்வளவு கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தியிருப்பார்!

Ramesh said...

செமயா எழுதியிருக்கீங்க... செல்லம்மாவின் பாடு எவ்வளவு திண்டாட்டமாய் இருந்திருக்கும்.. கற்பனைப் பாத்திரத்துக்கு உயிர் இருப்பதாய் நினைத்த பாரதி.. தன்னுடன் இருந்த உயிரை மதிக்காமல் விட்டுவிட்டாரோ? என்ற கோபம் எனக்கு எப்போதும் உண்டு... பெண்ணை தனக்குச் சமமாய் நடக்க வைத்து கூட்டிச் சென்றதிலேயே அவளை முழுதாய் மதித்ததாய் நினைத்துவிட்டாரோ? எனக்கு பாரதியார் கவிதைகள் பிடிக்கும்.. ஆனால் பாரதியாரைப் பிடிக்காது...

'பரிவை' சே.குமார் said...

அருமையா இருக்கு நண்பா... செல்லம்மா கண்ணம்மா ஓப்பீடாய் கவிதை அருமை....உங்களிடம் இருக்கும் இந்த அழகியலுடன் கவிதை எழுதும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு... மற்ற பதிவுகளை இன்று படிக்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

நண்பர் ரமேசுக்கு... பாரதி கண்ணம்மாவுடன் காதல் கவிதை புனைந்திருந்தாலும் செல்லம்மாவை நல்லாத்தானே வைத்திருந்தார்... தன் மனைவியை அவர் கொடுமை செய்யவில்லையே....

அருண் பிரசாத் said...

அட அருமையான ஒப்பீடு ... கலக்கல்

Unknown said...

@சே.குமார் அவர்களுக்கு

ஒரு மனைவியைக் கணவன் கொடுமைப் படுத்தாமல் இருப்பதே அவருக்கு அவரது கணவன் கொடுக்கும் சிறந்த வாழ்க்கையாக நீங்கள் நினைக்கிறீர்களா?

http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_115850897217288741.html

இந்த இணைப்பை கொஞ்சம் படித்து வாருங்கள்.. நண்பரே..

Ramesh said...

@சே.குமார்

மனைவியை நல்லா வைத்திருந்தார் என்று சொல்லாதீர்கள்.. ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப் படுத்தாமல் இருந்தாலே அவன் அவளை நன்றாக வைத்திருந்தான் என்று அர்த்தமா?

http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_115850897217288741.html

இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கள் நண்பரே...

செல்வா said...

//உறவுகள் தந்த ...
இரவல் வாழ்க்கை செல்லம்மா...!
நினைவுகள் தந்த ....
நிச வாழ்க்கை கண்ணம்மா...!/

கன்னமா , செல்லம்மா அப்படின்னு படிக்கும் போது இனிமையா இருக்கு அண்ணா ..!!

தமிழ்க்காதலன் said...

@ அன்பு சகோதரி சித்ரா,
நன்றி.

@ எஸ்.கே.
நன்றிங்க.

@ பிரியமுடன் ரமேஷ்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

@ சே.குமார்
நண்பா கருத்துக்கு நன்றி.

@ பதிவுலகில் பாபு
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ செல்வகுமார்
தம்பிக்கு என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

@அருண்பிரசாத்
உங்களின் அன்புக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

காயத்ரி வைத்தியநாதன் said...

செல்லம்மா...?? கண்ணம்மா..??

வாழ்வில் இடம்பெற்றவளைவிட, சிந்தையில் இடம்பெற்றவள் கற்பனையாயினும் கண்ணம்மா பாக்கியசாலி...ஒருவர் வாழ்வில் இடம்பெறுவது சாதாரண விசயம்..சிந்தையில் இடம்பெறுவதுதான் வரம்..அருமை கவிஞரே...பாரதி படித்திருந்தால் உங்கள் எழுத்தைக் கண்டு அவரே பொறாமை கொண்டிருப்பார்…