Tuesday, December 14, 2010

"தலை நிமிருமா"....?


"தமிழா"...! என்றேன்.
எவர் தலையும் நிமிரவில்லை.
"தலைவா"...!! என்றேன்.
எவன் தலையும் குனியவில்லை என் பக்கம்.

"ஐயரே"..என்றேன்.   
"ஏன்டா அம்பி"..! என்றவாறே வந்தார் சிலர்.

"செட்டியார்" என்றேன்.
நாட்டுக் கோட்டையிலிருந்து நடந்து வந்தார் சிலர்.
காரைக்குடி கடந்தேகி வந்தார் பலர்.
வாணிக செட்டியார் வரிந்து கட்டி நின்றார்.

"முதலியார்" என்றேன்.
முறுக்கும் நூலோடு முனைப்பாக வந்தார் பலர்.
"கவுண்டர்" என்றேன்.
கோயம்புத்தூர் இடம் பெயர்ந்து வந்தது.

"வன்னியர்" என்றேன்.
வகைதொகையாய் அணிவகுத்தார் பலர்.
"தேவர்...பள்ளர்....பறையர்....
கள்ளர்" ...என பலப்பலவாறே சாதி வைத்து,
சங்கம் வைத்து ...,
கட்சி நடக்கும் காரணம் கண்டேன்.

இங்கே.....
அந்தணன் இருக்கிறான்.
செட்டியார் , முதலியார் இருக்கிறான்.
கவுண்டன், வன்னியன் இருக்கிறான்.
பள்ளர், பறையர், கள்ளர் இருக்கிறான்.

கடவுளே ....!
ஒரு தமிழன் இல்லை.

குலம் சொல்லிக் கூப்பிட்டால் மட்டும்
திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சமூகம்
"திருந்தி" இருக்கிறது.

தமிழும், தமிழுணர்வும் சமூகத்தை
தட்டி எழுப்ப உதவாது என்பதால்தான்,
"தலைவர்கள்" என சொல்லிக் கொள்ளும் தலைகள்
தங்கள் கட்சிக்கு ஆள் பிடிக்க
சாதி வைத்தார் . சாதிக்கொரு சங்கம் வைத்தார்.
சங்கங்களில் தன் கட்சியை அங்கம் வைத்தார்.
சமூக அமைதிக்கு பங்கம் வைத்தார்.
பெரியார் அண்ணா பெயர் சொல்லி,
அந்த பெரியாரையும் இழித்து வைத்தார்.

கொள்கைக்கு முரண் பட்டு நிற்பதே
கொள்கை என்பார்.
தலைகள் பல சேர்த்துக் கொள்வார்.
தகாத இடங்களில் கூட்டம் செய்வார்.
கோட்டைக்கு போகவே உன்முன்
ஓட்டு வேட்டைக்கு வருவார்.

"இலையா" என்பார்.
எதிர்த்த வீட்டில் "கதிரா" என்பார்.
"கனியா" என்பார்.
"கழனி சேர்" அணியா என்பார்.
"ஏர்" அணியா ? அது ஏற்ற அணியா ? என்பார்.
"கை" என்பார்.
கையில் "பை" என்பார்.
"பையில் காசு" என்பார்.
எதிரணி எனக்கு தூசென்பார்.

"புலி" என்பார் பத்து சீட்டு கொடுத்தால்....
"பசுங்கிளி" என்பார்.
"பம்பரம்" விடுவார். பக்கத்து வீட்டில் பட்டியலிடுவார்.
"இலையில்" சோறு என்றால் "இன்னும் இன்னும்" என்பார்.

உறவென்பார், நட்பென்பார்,
பின்னொரு நாள் பகை என்பார்.
பிரிந்து பிரிந்து கூடி....
பிரபஞ்சம் "தான்" என்பார்.

கோட்டை ஒன்றே குறிக்கோள்.
உன் ஓட்டு வேட்டை ஒன்றே கொள்கை.
மற்றெந்த மாற்றமில்லை.
இவர்களில் பாரீர்...!

கும்பிட்டு நிற்பார்.
குனிந்தும் நிற்பார்.
தேவைக்கேற்ப பணிந்தும் நிற்பார்
பாதங்களில் "சரணம்" என்பார்.
"சேர் படிந்த கால்களை"
"பொற்பாதம்" எனப் பொய்யுரைப்பார்.
உனக்கு தொண்டாற்ற தனக்கொரு வாய்ப்பு கேட்பார்.
அவ்வளவு "உயர்ந்த உள்ளம்" கொண்டோர்.
திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய்
திருதிருவென நீ முழிக்கும் போதே
உன் கையில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு
உன்னை விழிப் பிதுங்க செய்வார்.

தேர்தல் களத்தில் காட்டும் கண்ணாமூச்சிகளின்
மயக்கம் தெளியும் முன்னே..
மறுபடி தேர்தல் ....
மறுபடி மறுபடி தேர்தல்.

நீ "விழித்தெழ" மாட்டாய்.
அப்படியே நீ விழித்தாலும்,
பிரிந்து நின்று ஓட்டு வாங்கி,
செயித்தவரேல்லாம் சேர்ந்துக் கொள்வார்.
"கூட்டணி" என்பார்.
செத்தது "சனநாயகம்".
செயித்தது "பணநாயகம்".

உனக்கான உரிமைக்கும், சுதந்திரத்துக்கும்
நீ போராடாதவரை...., இங்கே
நடப்பது "சனநாயகமல்ல".

இங்கே எவனும் "தமிழனாய்" இல்லை.
எதை சொன்னால் நீ எழுவாயோ
அதைச் சொல்லி ஆளுகிறான் உன்னை.

இத்தனை ஆயிரம் தமிழர்கள் இலங்கையில்
மாண்டபோதும் இங்கே எவன்
தமிழனுக்காய் , தமிழுக்காய் எழுந்து நின்றவன்..?

உலக அரங்கில் கேட்பாரற்றுப் போன
கூட்டமடா "தமிழினம்".

நீ தலை நிமிர்ந்து பார்...
தாங்காது தரணி எங்கும்.

( குறிப்பு : அன்பு மக்கா ஓட்டு போட்டோ, கருத்து தெரிவித்தோ மாட்டிக்காதீங்க. அதுக்கு நான் பொறுப்பல்ல. )

6 comments:

'பரிவை' சே.குமார் said...

Ahaa... therthal vanthiruchchu pola... iniththaan thamilan vizhiththukkolvannn... kaasu vankanumillai...

nallaa irukku...

ஹேமா said...

தமிழனைப்போல நல்லவனும் இல்லை.
அவனைப்போலக் கெட்டவனும் இல்லை என்பார்கள்.அத்தனையும் நீங்களே சொல்லிவிட்டு...!

Anonymous said...

இதில் என்ன தவறு...தமிழனாய் நீங்கள் கூட்டம் சேர சொல்கிறீர்கள்...அவர்கள் முன்னமே கூட்டம் கூட்டமாய் இருக்கிறார்கள்...தமிழனுக்காக நீங்கள் குரல் கொடுக்க சொல்கிறீர்கள். இங்கிருக்கும் தலைவர்களோ ஏற்கனவே உள்ள கூட்டங்களை தங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆக எவரும் மனிதனை மனிதனாய் பார்க்க போவது இல்லை...தமிழ் கூட்டமாய் தெலுங்கு கூட்டமாய் கன்னட கூட்டமாய் ஹிந்தி கூட்டமாய் இன்னும் வெளி நாட்டினர் வேறு கூட்டமாய்....

மனிதனை மனிதனாய் பார்க்கும் யுகம் வேண்டும்...

-போஸ்.

தமிழ்க்காதலன் said...

அன்பு ஹேமா என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..? நாம் தமிழர்கள் என்பதில் நாம் பெருமைக்கொள்ள நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவுக்கு நமக்கு நம்மிடம் இருக்கும் தவறுகள் களையும் கடமையும் இருக்கிறது. நம்மை நாம் திருத்திக் கொள்ள விரும்பாமல் வெறும் வார்த்தைகளால் எந்த சமுதாய மாற்றத்தையும் கொடுத்து விட முடியாது. இன்று நாம் தமிழர் என்கிற உணர்வோடு ஒரு பொது விசயம் பார்க்க படுவதே கிடையாது. பதிலாக சாதிகளில் கட்சி பலம் காட்டி, தமிழ் மக்களை ஒன்று சேர விடாமல் இனவாரியாய் பிரித்து பிரித்து நமக்குள் நாம் துண்டுபடுவதால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. நம்மால் சாதிக்க முடியாமல் போகிற பல விசயங்களுக்கு இது முதல் காரணம். நம்மில் ஒற்றுமை இல்லை என்கிற உண்மையை நாம் உணார்ந்து செயல் பட வேண்டும் என்பதே என் எண்ணம்.

தமிழ்க்காதலன் said...

அன்புக்குரிய போஸுக்கு வணக்கம். முதல் முறை வந்திருக்கும் உமக்கு என் அன்பின் சமர்ப்பணம். தாங்கள் ஒரு எழுத்தை பார்க்கிறீர்களா..? எழுத்தாளனைப் பார்க்கிறீர்களா...? என் ஒரு கட்டுரையைக் கொண்டு என்னை எடை போடா வேண்டாம். நீங்கள் என் முந்தைய எழுத்துக்களையும் படித்து விட்டு சொல்லுங்கள். ஒத்துக்கொள்கிறேன். அதை விட்டு ஒரு தலைப்பை கொண்டு ஒருவரை எடைபோடுதல் சரியான முடிவல்ல.

நான் சொல்ல வருவது என்ன என்பதை ஹெமாவுக்கான பதிலில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும். மனித நேயத்துக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உதாரணங்களுக்கு எமது நானும் கடவுளும் போன்ற படைப்புகள், தமிழ் சிந்தும் இரத்தம் போன்றவற்றை படியுங்கள்.

மனிதனை மனிதனாய் இருக்க விடாத விசயங்கள் கலையப்படாத வரை நீங்கள் கனவில் கூட மாற்றம் என்பதை பார்க்க முடியாது. நாம் தமிழராய் இருப்பதில் என்ன தவறு இருந்து விட முடியும். சொல்லுங்கள்.

சரியான பதிலோடு சந்தியுங்கள். காத்திருக்கிறேன்.

எமது படைப்புகளை தொடர்ந்து வாருங்கள். மிக்க நன்றி,

தினேஷ்குமார் said...

தோழரே பம்பரமாய் சுழலும் நாம் சாட்டியாய் மாறும்வரை சுழன்டுக்கொண்டு தான் இருக்கும் மாற்ற முயல்வோம் ஏற்றத்தில் சறுக்கலாம் சறுக்கமே ஏற்றமானதிங்கு அரசியல் வாதிகளுக்கு இது ஒரு சாட்டையடி மக்களே நமக்கும்தான் சிந்தியுங்கள் இனியேனும்