Wednesday, December 22, 2010

"சீசரின் மனைவியும், மன்மோகன்சிங்கும்"...


இந்த தேசத்தை கலக்கிக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கும் அதன் ஊழலுக்கும், நாடு நாய் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் நம்ம பிரதமர் வெடிச்ச "சிரிப்பு வெடி" பற்றி பகிர்கிறேன்.
சமீபத்தில் நடந்த காங்கிரசு மாநாட்டில் பேசிய பிரதமர் "சீசரின் மனைவி சந்தேகத்துக்கப்பால் பட்டவளாக இருக்க வேண்டும்" எனப் பேசி புதிதாய் நிறைய சந்தேகங்களை "கிளப்பி" இருக்கிறார்.

சீசரின் மனைவி என யாரைக் குறிப்பிடுகிறார்...? சீசர் யார்..? புருட்டசு, ஆண்டணிகல்லாம் யாரு அப்படிங்கிற ஆராய்ச்சிய அப்புறம் வச்சிப்போம்.

இப்போதைக்கு அவர் தன்னையே "சீசரின் மனைவி" எனக் குறிப்பிட்டதாக கொள்வோம். இதில் "தான்" ஒரு குறிப்பிட்ட தலைமைக்கு கீழே "உண்மை ஊழியனாய்" இருக்கிறேன், அல்லது "இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" என்கிற மறைப் பொருளை வெளிப் படுத்தி இருக்கிறார் பிரதமர். அடுத்து இன்னொரு பொருளில் பார்த்தால்.., பிரதமர் என்பவர் அரசியலுக்கப்பால்... கட்சிகளுக்கப்பால்... மக்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்கிற "அரசியல் தர்மம்" பேசி இருக்கிறார் என்றும் கொள்வோம்.

நம்முடைய சந்தேகம்...

இன்று வரை "அலைக்கற்றை ஊழல்" பற்றி ஆளும் கட்சி வாயைத் திறக்காமல் இருப்பதற்கு என்ன நியாயமானக் காரணம்..? குறிப்பாய் பிரதமர் இதுவரை வாய் மூடி மௌனியாக இருக்கிறார். உச்ச நீதி மன்றம் வாய் திறந்து நீதிக் கேட்கும் அளவுக்கு நம்முடைய அரசியல் மலிந்து போய்க் கிடக்கிறது. அப்படிக் கேட்டும் இதுவரை அரசிடமிருந்து சரியான பதில் இல்லை.

இந்திய முதன்மை தணிக்கையரின் அறிக்கையைப் பாராட்டிப் பேசுவதுப் போல் பேசிவிட்டு இறுதியில் இதுப் போல் அரசுக்கு நெருக்கடி தரும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது எனக் கண்டித்த பிரதமர்.... ஏன் தவறுக்குப் பொறுப்பானவர்களைத் தட்டிக் கேட்க வில்லை...? சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி குற்றவாளிகள் தப்பிக்க போதுமான அவகாசம் கொடுத்துப் பின் எதற்கு சி.பி.ஐ விசாரணை என்கிற கண் துடைப்பு நாடகம்.


காங்கிரசின் ஊழல்களில் எந்த ஊழலுக்கு அந்த கட்சி பொறுப்பேற்று பதில் தந்திருக்கிறது...? இன்னும் பீரங்கி ஊழலுக்கே ஒரு முடிவும் இல்லாமல் "ஆள் தலை மறைவு" என வழக்கு வழக்காடு மன்றத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் குரோச்சி இன்னும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறார். சோனியாவின் சொந்தக்காரர் அல்லவா ...? எப்படி இந்தியாவுக்கு நீதிக் கிடைக்கும்...?

வெளிநாட்டில் இருந்து கொண்டு நம் பிரதமர் நாடாளுமன்ற முடக்கம் பற்றிப் பேசினார். அவ்வளவு அக்கறை இருந்தால், உங்கள் மேல் குற்றம் இல்லை என்றால், எதிர்க் கட்சிகள் கேட்கிற ஜே.பி.சி குழுவை அமைத்துவிட்டு நாடாளுமன்றத்தை நடத்த வேண்டியதுதானே...? இதில் என்ன சிரமம் என்று இன்று வரை ஒரு காங்கிரசுக் காரர் வாய் திறந்து பேசி இருப்பாரா..? இந்தக் குழுவை அமைக்க காங்கிரசு மறுக்க, நியாயமான ஒரு காரணம் சொல்லட்டும்.

பாராளுமன்றம் நடக்காமல் போனதன் முழுக் காரணமும் காங்கிரசைத் தவிர வேறு யாருமில்லை என்பது ஐயம் இன்றி தெளிவு. பாராளுமன்றம் நடக்காவிட்டாலும், இந்த நாடு எக்கேடு கேட்டு குட்டிச் சுவரானாலும் நாங்கள் வாய்த் திறக்க மாட்டோம் என தேசத் துரோகத்தில் அமிழ்ந்திருக்கும் கட்சியாக இன்று காங்கிரசு மாறி நிற்கிறது.

இவ்வளவையும் வைத்துக் கொண்டு, நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் அத்தனையும் இந்த ஆட்சியில் தவறான அணுகுமுறையால் விலை ஏறி, சாமானியன் சாகும் அளவுக்கு நாடு பின்னடைவு கண்டிருக்கிறது. நகரங்களில் அந்நிய நாட்டான் தன்னுடைய பணத்தில் கட்டும் கட்டடங்களில் இந்தியாவின் வளர்ச்சி நிச்சயமாய் இல்லை. நீங்கள் வளர்ச்சி என்பதெலாம் ஒரு பக்க கட்டியாகத்தான் வீங்கி இருக்கிறது.


புற்று நோயை போல் இந்த தேசம் ஊழலால் அரிக்கப் பட்டு செத்துக் கொண்டிருக்கிறது. ஊழல், இலஞ்சம் இல்லாத் துறை ஒன்றை இந்தியாவில் உங்களால் விரல் நீட்டிக் காட்ட முடியுமா..?
செத்துக் கொண்டிருக்கும் என் தேசத்தின் மிச்சமிருக்கும் மானத்தையும் நீங்கள் விலைப் பேசி வெளிநாட்டானுக்கு விற்றுக் கொண்டிருக்கிறீர்கள்....


இந்த முகத்தை வைத்துக் கொண்டு "சீசரின் மனைவி எப்படி சந்தேகத்துக்கப்பால் இருக்க முடியும்...?" எங்களுக்கு சீசரையே நம்ப முடியவில்லை...? அப்புறம் அவன் மனைவி என்ன...?

உங்களில் ஒருவருக்கு மனசாட்சி இருந்தால்....

இந்த கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்.....?

அதை விட்டு "பத்தினித் தனம்" என்பதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற முயற்சியே தவிர வேறில்லை.

இப்படிப் பட்ட அரசியல் பிழைப்பு தேவையா....? ஒரு கனம் யோசிப்போம்....?

உங்கள் மடியை அவிழ்த்து விட்டு கை வீசி நடக்க உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் நடந்து காட்டுங்கள்.
தகிக்கும் கோபத்துடன்.....
- தமிழ்க்காதலன்.   
****************************************                              

6 comments:

இனியவன் said...

சூப்பரோ சூப்பர். அப்படியே தொடரவும்.

எஸ்.கே said...

சூப்பர் நண்பரே!

சுவடுகள் said...

கவிஞரே,தங்களின் நாட்டுப் பற்றும இந்த மண்ணின் மீது தங்களுக்கிருக்கும் அக்கறையும்.......மெய் சிலிர்க்க செய்கிறீர்.உங்களை போன்ற நாட்டு நலனில் அக்கறை செலுத்துவோர் நாடாண்டால் எளிதில் தன்னிறைவு அடைவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.தங்களின் கோபம கொப்பளிக்கும் வலிகளால் ஏதேனும் வழி பிறந்தால் சரி.

வினோ said...

தகிப்பை தாங்க முடியல தல

சே.குமார் said...

//இப்படிப் பட்ட அரசியல் பிழைப்பு தேவையா....? ஒரு கனம் யோசிப்போம்....?

உங்கள் மடியை அவிழ்த்து விட்டு கை வீசி நடக்க உங்கள் நெஞ்சில் உரமிருந்தால் நடந்து காட்டுங்கள்.//

கவிஞரே...
இதயச்சாரலில் ஒரு கோபச்சாரல்... கவிதைகளில் கலக்கும் நீவிர் இந்த பகிர்வின் மூலம் அரசியல் ஆராய்ச்சியில் கில்லாடி என்றறிந்தோம். அடிக்கடி இப்படியும் முகம் காட்டுங்கள். நல்ல பகிர்வு.

கோமாளி செல்வா said...

உங்கள் கோபம் நியாயமானது அண்ணா .!