Tuesday, July 05, 2011

"உறுபசியும் ஊர் பசியும்..."






மன்னவன் உன்னைச் சுமந்த மடியிருக்கு
முகம் புதைக்க மெத்தென மாரிருக்கு
அகம் முழுக்க அன்பு சுனையிருக்கு 
ஆரமுதே..! உன்பசி தீர்க்க வழியிருக்கா..?


தனங்களைத் தடவிப் பார்க்கும் தங்கமே..!!
ஆழகுப் பொருளாக அல்லவோ ஆகிவிட்டது..?!
ஆவி சுமந்தவள் மருகி உருகுகிறேன்.
அமுதப் பால் சுரக்கா மார்பில்


அலையும் உன் கரங்களின் மென்மை
அனுபவிக்க முடியாமல் அல்லாடுகிறேன்.
காம்புகள் தேடும் இதழ்களைக் கலைகிறேன்
முள்ளாய் மார்பில் குத்துவதாய் குறுகுகிறேன்.


திறந்துக் கிடக்கும் மேனியில் வறண்டு
கிடக்கும் பாலகம் பாலகா உனக்குதவாது.
பரிதவிக்கிறேன் பெற்ற வயிற்றில் பசித்தீ
இரத்தம் வந்தாலும் தர சம்மதம்...


மலரினும் மென்மையாய் கைககளில் கிடக்கும்
மரகதமே...!,- உன்னை வாங்கி கொண்டவளால்
தாங்கிக் கொள்ள முடியா வலி
தணியாத பசியில் தவிக்கும் உயிரே...!


வறண்டு கிடக்கும் முகமாய் வாழ்க்கை 
இருண்டு கிடக்கும் விழிகளில் தொலைதூர
வெளிச்சப் புள்ளிகளை மறைக்கிறது நிசம்..!
வெடித்த இதழ்களில் விதி விளையாடுகிறது..!!


விலைக்கு கேட்கிறார்கள் இரக்கமுள்ள மனிதர்கள்?!
உனக்கு ஒரு விலை..? எனக்கொரு விலை..??
உன்னை விற்றால் ஒருநாள் துன்பம்
என்னை விற்றால் ஒவ்வொருநாளும் துன்பம்


முழுகாமல் இருந்த பெற்றதாலோ என்னவோ 
பாழும் பாசமுனை முழுகச் சம்மதிக்கவில்லை.
தேகத்தைக் கல்லாக்கி மனதை முள்ளாக்கி
விடியும் வரை விலைக்கு விருந்தாகிறேன்.


வரும்படிக்கு பஞ்சமில்லை வறுமைக்கு பாவமில்லை
என்னைத் தாயாக்கிய எங்கள் குலக்கொழுந்தே...!!
ஆலகாலம் அடக்கிய சிவனாய் அடக்குகிறேன்
விழும் விந்தினை விதியை நொந்தபடி...


என்னப் பாவம் செய்தாயோ..? செல்வமே
எனக்கு வந்து பிறந்தாய்,- உனக்கே 
என்னை விற்கிறேன் இன்னொரு கருவுக்கு
எதை விற்பேன் என் இன்னுயிரே..!


கருப்பை நிரப்பியவர்களால் நம் இரைப்பை 
நிறைகிறது,- சொல்ல முடியா சோகத்தை
வெல்ல முடியா வேதனையால் வெல்ல 
முயன்று முடியாமலே வேதனையில் மடிகிறேன்.


இரைப்பைகளில் பருக்கைகள் இட்டு நிரப்ப
கருப்பையை காட்ட சொல்கிறது உலகம்.
தெருவோர நாய்கள் திண்ணையில் தூங்குகிறது.
தெருப்பொறுக்கி நாய்கள் என்னைத் தின்கிறது.


சிவமாவது சைவமாவது பிணம் தின்னும் 
ஊரில் பணம் ஒன்றே வாழ்க்கை
பிழைக்க வழி செய்வோம் இல்லை
பிணமாவோம் ஊராரின் பசிக்கு முன்னால்...

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
முழுகாமல் இருந்த பெற்றதாலோ என்னவோ
பாழும் பாசமுனை முழுகச் சம்மதிக்கவில்லை.
////////
ததுதான் தாயுள்ளம்...

அழகிய கவிதை...

rajamelaiyur said...

Super kavithai. . .Super kavithai. . .

Kayathri said...

இரைப்பைகளில் பருக்கைகள் இட்டு நிரப்ப
கருப்பையை காட்ட சொல்கிறது உலகம்.
தெருவோர நாய்கள் திண்ணையில் தூங்குகிறது.
தெருப்பொறுக்கி நாய்கள் என்னைத் தின்கிறது.

-----------இதைக் கண்டாவது தெருப்பொறுக்கி நாய்கள் திருந்துவார்களா?

சிவமாவது சைவமாவது பிணம் தின்னும்
ஊரில் பணம் ஒன்றே வாழ்க்கை
பிழைக்க வழி செய்வோம் இல்லை
பிணமாவோம் ஊராரின் பசிக்கு முன்னால்...

------நம் சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறது....

கருப்பை நிரப்பியவர்களால் நம் இரைப்பை
நிறைகிறது,- சொல்ல முடியா சோகத்தை
வெல்ல முடியா வேதனையால் வெல்ல
முயன்று முடியாமலே வேதனையில் மடிகிறேன்.

----உண்மை கலந்த வலி...:(

மிகவும் அருமை கவிஞரே!!!

கூடல் பாலா said...

ஒரு தாயின் வேதனையை இதைவிட நன்றாக யாரும் வெளிப்படுத்த முடியாது ........Really Great

'பரிவை' சே.குமார் said...

//என்னப் பாவம் செய்தாயோ..? செல்வமே
எனக்கு வந்து பிறந்தாய்,- உனக்கே
என்னை விற்கிறேன் இன்னொரு கருவுக்கு
எதை விற்பேன் என் இன்னுயிரே..!
//

//விலைக்கு கேட்கிறார்கள் இரக்கமுள்ள மனிதர்கள்?!
உனக்கு ஒரு விலை..? எனக்கொரு விலை..??
உன்னை விற்றால் ஒருநாள் துன்பம்
என்னை விற்றால் ஒவ்வொருநாளும் துன்பம்//


என்ன சொல்ல கவிதைக்குள் ஒரு தாயுள்ளத்தின் உணர்ச்சிப் போராட்டத்தை வாழ்ந்து காட்டியிருக்கும். ஏழையாய் பிறந்து வாழ வழியில்லாது போனால் சமுதாயம் அந்தப் பெண்ணை பார்க்கும் பார்வையையும் தாயே சொல்வதாய் செதுக்கியுள்ளாய்.

அருமை நண்பா.

வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

இண்ட்லியில் ஓட்டுப் போட்டுட்டேன்.... போடலையின்னு சொல்லப்படாது.

vidivelli said...

சகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
எந்த வரி பிடிச்சதென்று தெரிவு செய்ய போய் தோற்றுப்போனேன்...
எல்லாமே அற்புதமான வரிகள்...
வாழ்த்துக்கள்..



!!உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ


எனது பக்கமும் இணைந்து கொள்ளுங்கள்..

மாய உலகம் said...

உன்னை வாங்கி கொண்டவளால்
தாங்கிக் கொள்ள முடியா வலி...


வரிகள் அனைத்தும் அற்புதம்

Anonymous said...

உன்னை வாங்கி கொண்டவளால்
தாங்கி கொள்ள முடியாத வலி

மிகவும் உண்மை
அந்த வலி நம்மால் தாங்க முடியாது

Anonymous said...

கருப்பை நிரப்பியவர்களால் நம் இரைப்பை
நிறைகிறது,- சொல்ல முடியா சோகத்தை
வெல்ல முடியா வேதனையால் வெல்ல
முயன்று முடியாமலே வேதனையில் மடிகிறேன்.


இரைப்பைகளில் பருக்கைகள் இட்டு நிரப்ப
கருப்பையை காட்ட சொல்கிறது உலகம்.
தெருவோர நாய்கள் திண்ணையில் தூங்குகிறது.
தெருப்பொறுக்கி நாய்கள் என்னைத் தின்கிறது.


என்ன அருமையான வாக்கியங்கள்
எத்தனை உண்மை

மிகவும் அருமை
ஆனால் அது உலகிற்கு புரிவது கடினம்