Saturday, July 16, 2011

"விழிகள் தேடும் விடியல்..."



பாலையில் பொழியும் 
பனித்துளிக்கு இரவெல்லாம் 
தவமிருக்கும் நத்தைக் கூடாய் 
மனம்...


கண்களில் மிதக்கும்
கண்ணீரில் தத்தளிக்கிறது
என் கனவுகள்.


இரவில்.... 
எருமைத் தேடுகிறேன் 
பௌர்ணமி வருமென்ற 
நம்பிக்கையில்...


மலர் தேடி அலையும் 
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்
திராவகம் ஊற்றுகிறது 
காலம்.


உணர்ச்சி இழைகளில் 
உயிரைத் தாங்கும் 
நத்தைக்கு,- கடிவாளம் போடும் 
கட்டெறும்பு.




முயலுக்கு ஓடும் நாயாய்
துரத்துகிறது காலம்.
உயிருக்காய் ஓடும் 
முயலாய் நான்.


முண்டி அடிக்கும் நினைவுகள் 
முந்தி விரிக்கிறது...
முன்னிரவு பட்டினியில் பசி
பந்தி விரிக்கிறது...


உலர்ந்த உதடுகளில் 
உயிரின் நலம் விசாரிக்கும் 
கண்ணீர்த் துளிகள்.


வெடிப்பில் உப்பின் உவர்ப்பில்
வெந்து துடிக்கும் உதட்டில் 
இரத்தத் துளிகள்.


ஊமையனுக்குள்ளே 
ஒரு பட்டிமன்றம்....
ஊருக்குத் தெரியாமல் நடக்கிறது.
வெடிக்கும் எரிமலையாய் 
உணர்ச்சிகள்...




காலையும் மாலையும் 
இவனைக் கடந்துப் போகிறது.
மாற்றமிலாப் பொழுதுகளில் 
நின்ற இடத்தில் கரைகிறது
நிகழ்காலம்.


பூவுக்கு ஆசைப் பட்டவன்
நாருக்குள் சிக்கித் தவிக்கிறான்.
நாரின் நாற்றம்... 
பூவின் வீச்சமாய்...


புலரும் பொழுதுகள் 
கையில் இருக்கும் 
கடனாய்....
வளர்கிறது. 

6 comments:

Kayathri said...

கவிஞனே!

நீ, நாய்க்கு பயந்து ஓடும்
முயலாய் இல்லாமல் நாயை விரட்டும் மனிதனாய் மாறிப்பார்...

புலரும் பொழுதுகள்
கையில் இருக்கும்
கடனாய் தெரியாது....கையில் உள்ள அனைத்தும் பொக்கிஷமாய் உணர்வாய்..

rajamelaiyur said...

//
பாலையில் பொழியும்
பனித்துளிக்கு இரவெல்லாம்
தவமிருக்கும் நத்தைக் கூடாய்
மனம்...
//

நல்ல வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில் ....

மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

Anonymous said...

அருமை,-மலர் தேடி அலையும்...முயலுக்கு அலையும்.... இரண்டும் ரசிக்க வைத்தது

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்த பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும்போது சென்று பாருங்கள். நன்றி. சுட்டி முகவரி:http://blogintamil.blogspot.com/2011/11/blog-post.html