Monday, July 18, 2011

"நிலா மகள்...!"



நிலவும் நிலவும் சந்திக்கிறது
தனிமையில் கொஞ்சம் சிந்திக்கிறது
ஒரு நிலவு ஒளியை கசிகிறது 
ஒரு நிலவு நினைவைப் பிழிகிறது.


கனிந்த மனதின் கந்தர்வ உணர்ச்சிகள் 
நிலவின் இருளுக்கு ஒளி வீசுகிறது...!!


அடைந்த இன்பத்தின் அடைப்புகள் 
உடைப்பெடுத்து ஒழுக
அடைக்கும் முயற்சியில் நீ.


நிலவின் ஒளியில் நீயும்
நின் ஒளியில் நானும் 
ஒளிர்கிறோம்.


வெட்கத்தைப் பிழிகிறாயா...? அன்றி
வெட்கிப் பிழிகிறாயா...?! 


ஈர ஆடைக்குள் இன்னொரு நிலவு.


தொப்புள் கொடி வழியே ஒருத்தி 
துயிலுரிகிறாள்..!!
கர்ப்பத்தில் உள்ளதெல்லாம்
கலங்கி வழிகிறது.  
  
முகிலென அலையும் குழல் 
முன் சென்ம நினைவுகளில் 
மூழ்க வைக்கிறது.


மெல்ல வழியும் உணர்ச்சிகள் 
மேல் மூச்சில் தெரிகிறது.
உள்ளே வடியும் நினைவுகள் 
ஒழுகும் நீரில் புரிகிறது.


இந்தப் பட்டாம்பூச்சியின் 
படபடப்பில் வெடிக்கிறது
என் இதயம்.


நிலவை விழுங்கும் கேதுவாய்
நீளும் குழலில் மூளும் மோகம் 


இருளை ஒளியும் ஒளியை இருளும் 
இழுத்து அணைக்கும் தாகம்.


தீராத மோகத்தைப் பிழிந்து 
தேகத்தை நனைக்கிறாள்...
தீண்டும் உணர்வுகள் பிழிந்து 
என் தாகம் தணிக்கிறாள்...


மேகத்தைப் போர்த்திய நிலவு
தாகத்தைத் தூண்டுகிறாள்.
நீருக்குள் மூழ்கிய நிலவொன்று 
நிலவொளியில் காய்கிறது.


பிரபஞ்ச மௌனத்தை
கைகளால் பிழிந்து 
கண்களால் அளக்கிறாள்.


பருவம் வந்த பௌர்ணமி
பால் ஒளியில் படைப்பின் 
இரகசியம் இரசிக்கிறது.


பனியில் உருகி கனியில்
ஒழுகும் என் காதல்,-அவளின் 
தனிமைப் பிழிகிறது.


இரண்டு நிலாக்களுக்கு மத்தியில் 
ஒரு கவிஞன்.
மொழிக்கும் கவிக்கும் 
சக்களத்தி சண்டை.


இருப்பது எது..? 
இடையா...? உடையா..?வென்று...
இடைக்கும் உடைக்கும் இடையே 
ஒரு யுத்தம்...!!


பளிங்கு மாளிகையில் 
பனியின் தேரோட்டம்.
கனிந்த கனிகளுக்குள்,-என்
கவிதைப் போராட்டம்.


இனிமை கசியும் இரவில்
இளமை கசியும் நிலா..!
சுகிக்கத் தூண்டும் சோம பானம்..!!


முக்கனிச் சுவையோ..?!
இக்கனிச் சுவையோ...?!
முழுவதும் தேன் ததும்பும் நிலா 
மூவாறு பருவத்து பலா.


பால் நிலாத் தழுவும் 
பருவ நிலவின் குவளை மலர்
ஊடுருவி ஒழுகும் ஒளியில்
ஊசலாடுதடி உயிர். 


காப்பிட்டக் கரங்களில் 
கட்டுண்டு கிடக்குதடி என் காதல்..! 


நிலவை கருவாக்கும் முயற்சியில் நீ.
உன்னைக் கவிதையாக்கும் முயற்சியில் நான்.



3 comments:

'பரிவை' சே.குமார் said...

நண்பா...
பெண்ணையும் நிலவையும் வைத்து கவி சமைத்திருக்கிறாய்...
அருமையிலும் அருமை.
வாழ்த்துக்கள்.

arasan said...

நச் நண்பரே

Anonymous said...

இரண்டு நிலாக்களுக்கு மத்தியில்
ஒரு கவிஞன்.
மொழிக்கும் கவிக்கும்
சக்களத்தி சண்டை.

super