Friday, July 01, 2011

"மலரும்..! மனிதனும்...?"




ஆதவன் ஆடை களைந்து நடக்கிறான் 
அந்த நந்தவனம் உடல் சிலிர்க்கிறது 
மலர்களின் மடியில் பனித்தேன் பருகுகிறான்
இலைகளில் வழிகிறது செடிகளின் வெட்கம்..!! 


ஆதவன் மோகம் அறிந்த மேகம் 
மலர்களை மறைத்து மதிலென நிற்க 
"இதென்ன இடைஞ்சல்" என மருகும்
மலர்களின் முகம் பார்க்கும் மேகம் 




ஆதவன் தீண்ட கருகிப் போவாய்
இத்தனை அழகும் "பாழாகும் பாவம்" 
மெலிதானக் கருணை மூச்செரியும் கார்மேகம்
"அதற்குதானே பிறந்தோம் ஆதவனை வரச்சொல்"...


கட்டளையிடும் மலர்களின் காதலில் உடைகிறது 
மேகத்தின் கருணை,- சூழும் ஆதவன் 
மோகம் சுட்டெரிக்க இதழ் பிரித்து 
இதழ் பிரித்து மெல்ல மெல்ல 




சுவையென சுவைக்கும் தணியாத தாகம் 
மலர்களின் மேனியில் அடங்கும் ஆசை 
ஒடுங்கும் இதழில் நடுங்கும் தேகம் 
வதங்கி அழிந்துதிரும் அந்தியில் ஆதவனோடு


ஒருநாள் வாழ்க்கைக்கு ஒத்திகை நடத்தும்
ஒவ்வொருப் பூவும் செத்து மடியும் 
மறுபடி மறுபடி பிரசவிக்கும் செடிதான் 
மலர்களின் மாறாக் காதல் அறியும்


மகள்களின் துயரம் அன்னையை சாரும் 
மகரந்த சேர்க்கைக்கு ஆதவன் வேண்டாம் 
அழும் அன்னையின் குரல் கேளாமல்
மலர்களின் தழுவல்கள் மறுபடியும் ஆதவனோடு...!


இழப்பது இன்பமென பாடம் புகட்டும்
மலர்கள் மனிதனுக்கு அளிப்பது இன்பமென 
அறிவு புகட்டும் ஆதவன்,- எதுவும் புரியாமல்
மரங்களை வெட்டும் மனித இனம். 

3 comments:

Kayathri said...

மிகவும் அருமை...

எதுவும் புரியாமல்
மரங்களை வெட்டும் மனித இனம்....

இனியாவது இயற்கையின் அருமை புரிந்து இயற்கையைக் காப்போம்....

rajamelaiyur said...

///ஆதவன் ஆடை களைந்து நடக்கிறான்
அந்த நந்தவனம் உடல் சிலிர்க்கிறது
மலர்களின் மடியில் பனித்தேன் பருகுகிறான்
இலைகளில் வழிகிறது செடிகளின் வெட்கம்..!!
///
அருமையான வரிகள்

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமையா இருக்கு... இலைகளில் வடிகிறது செடிகளின் வெட்கம்... இங்கே கவிதையில் வழிகிறது உன் தமிழருவி. அருமை.