Tuesday, February 08, 2011

"ஊழ்வினை...."







முந்நொரு சென்மம் சேர்ந்திருந்த வாசம்
முப்பாழ் வினையில் முளைத்த நேசம்
இப்பாழ்ப் பிறவியின் மயக்கம் பேசும்
தாழ்த்திறக்கும் திறவுகோல் தடம் பார்த்து...


மாயத்திரை கிழித்து மயக்கம் அறுத்து
வாழும் முறை வகுக்கும் வலியன்
தீரும் வரை விடாது விதியின்
தீயில் வதங்கும் பயிராய் உயிர்.


நடுங்கும் மனம் நாளது போக
ஒடுங்கும் உயிர் வானது போக
கடிந்தும் நலிந்தும் மனம் வாட
காணாக் கிழவி கண்ணாட வரும்


கனவும் நினைவும் சுயம் மாற்ற
மாயப் பிறப்பின் மர்மம் மாதவள்
முடிச்சவிழ மூன்றின் வினையவிழ நேசம்
நெக்குருகும் பாசவலை விரித்த விதி.


யாரடி நீ..? நான் பெற்ற சீரடி நீ..!
கூறடி உன் ஒற்றைக் கூற்றுக்கு
காலம் காத்திருக்கும்...
காதல் பூத்திருக்கும்...
ஞாலம் நனிசிறக்கும் வாழ்வே வா...!!


தூலமும் ஞானமும் துயிலும் சூட்சுமமும்
வாலனறிவால் வந்திங்கு சேர்ந்த வரம்.
தொங்கும் உயிர்த் தூங்கா இரகசியத்
தொடர்பின் முடிச்சில் தொடரும் உறவே...!!

விழிகளின் ஈரம் விழுதுகளாய் இறங்க
கன்னத்தில் பதியும் நினைவு வேர்கள்
ஒற்றைத் தடம் பதிக்கும் உயிரின்
இரகசியப்பாதை நீ மட்டும் வாராயோ..!?








தத்தளிக்கும் உணர்வுகளில்... தவிக்கும் சீவன் ..!
முத்தெடுக்க மூழ்கும் முக்கடல் சங்கமம் 
மூச்சடைக்க காற்றுக் கதவடைக்கும் காலன்
வழியடைக்க விழிப் பிதுங்கும் விதி.







8 comments:

Chitra said...

படங்கள் - கவிதையாக இருக்கின்றன. கவிதையோ - உணர்வுகளின் சங்கமமாக இருக்கின்றன... அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

//யாரடி நீ..? நான் பெற்ற சீரடி நீ..!
கூறடி உன் ஒற்றைக் கூற்றுக்கு
காலம் காத்திருக்கும்...
காதல் பூத்திருக்கும்...
ஞாலம் நனிசிறக்கும் வாழ்வே வா...!!//


தமிழ் குற்றாலம்.....
நீ ஒரு பாணதீர்த்தம்.....
உன்னில் பொங்கும் என்
உயிர் தாய் தமிழ்...
அதை பார்த்து
பெருமை கொள்ளும்
என் மனம் சிறு பொறாமை
கொள்வதேனோ....

MANO நாஞ்சில் மனோ said...

உன் புலமையை விரும்பி வாசித்து சுவாசித்து இன்புறுகிறேன், நீ புலவனும், கவிஞனும்....

MANO நாஞ்சில் மனோ said...

முதல் படம்...
அம்பிகாவதி அமராவதி......!

'பரிவை' சே.குமார் said...

//விழிகளின் ஈரம் விழுதுகளாய் இறங்க
கன்னத்தில் பதியும் நினைவு வேர்கள்
ஒற்றைத் தடம் பதிக்கும் உயிரின்
இரகசியப்பாதை நீ மட்டும் வாராயோ..!?//

கவிதை வரிகள் ஊழ்வினையை உருக்கித் தருகின்றன என்றால் படங்கள் கவிதையை ஓரங்கட்டி முன்னே நிற்கின்றன.

எஸ்.கே said...

அந்தக் கண்களில் எத்தனை சோகம், வேதனை, கனவுகள், ஆசைகள் இருக்குமோ! உணர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன கவிதையிலும் படங்களிலும்...

தமிழ்க்காதலன் said...

வாங்க அக்கா, உங்களின் தொடர் வருகையும் அடர் வாசிப்பும் எனக்கு உற்சாகம் தரும் அருமருந்து. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றி மனோ... தொடர்ந்திருங்கள்.

மிக்க சந்தோசம் நண்பா... (குமாருக்கு)

வாங்க எஸ்.கே., மகிழ்ச்சி.