Tuesday, July 28, 2026

”இரவின் இசை..!!”


 இந்த இரவின் தனிமை இசைக்கும்

இசையில் அசையும் இதய நாளங்களில்

உயிரசையும் மெல்லிய சுரங்களை கேட்கிறேன்

உள்ளே வெற்றிடத்தில் விழுந்துக் கொண்டிருக்கிறது


அருவிகளாய் உணர்வுகள்..!! உயிர் எழுதும்

காதல் உயிலா..? ஓசைகளற்ற ஆசைகளுக்கு

மனம் எழுதும் மடலா..?? விரிந்து கிடக்கும்

நதியின் அசைவும் ஓடை வெள்ளமும்

 

ஒன்று சேர்ந்த தாளகதியில் குருதிவெள்ளம்

இமைமூடி இதழ் படிக்கும் பாடல்கள்

கணப்பொழுதில் வாழ்க்கை வந்துவந்துப் போகிறது

கண்முன் கலையும் காலமென..!! உள்ளம்

 

உறங்காத இருளில் கண்கள் காணாத

உலகங்கள் உருள்கிறது உள்ளும் வெளியுமாய்..!!

உணர்வுக் குவியல்களும் உணர்வற்ற ஓரிடமும்

இருவேறு தாளகதியில் இந்த இரவாக..!?

 

அசைவற்ற உடலுக்குள் ஏதோ ஒன்று

அசைந்து கொண்டே இருக்கிறது இசையாக..!!

ஒன்றுமில்லா ஒன்றாக உணரும் வேளை

ஒன்றிப்போகும் ஒன்றில் உயிர்..!!

 

விடியலின் விதைகளா..? இரவின் விளக்குகளா..??

விண்மீன்கள் வீசியடிக்கும் வெளிச்ச மணல்கள்

மனதை திருடும் விந்தை..!! இரவில்

நிலம் அளக்கும் அந்த நிலா..?!

 

குரலடங்கி கிடக்கும் குயிலாக முனகல்

பாடலாகும் முரண்களில் சுரக்கிறது மனதின்

மௌனங்கள்..!! அந்த இசையால் இடைவெளி

இல்லாத வானும் மண்ணும் நானும்..!!

 

சொந்தம் ஏதுமிலா சொர்க்க மொன்றில்

சொற்கள் ஏதுமிலா பாடல் ஒன்று

செவிக்கு விருந்தாக மனதுக்கு மருந்தாக

புவிக்கு விளங்காத மொழியில்..!!

No comments: