மனதின் தகிப்பில் பொசுங்கும் உணர்வுகள்
மௌனம் வீசும்
கனத்த பொழுதுகளில்
மொழியும் விழியும்
உயிரற்றுப் போகும்
மோனத்தில் உயிரின்
விழித்தல்
தண்மதி வீசும்
மென்குளிர் அழகொளி
தன்மதி இழந்தவன்முன்
தமிழின் அழகொலி
தன்முன் எரியும்
உணர்ச்சி சிதறல்கள்
தன்கதி சொரியும்
தாளகதிகள்..!!
விட்டுவிட்டு
விடுகதை போடும் வாழ்க்கை
விடாமல் விகடம்
வீசும் விதியுடன்
விடுவிடு வெனவிலகும்
நேசத்தின் பிரிவும்
விடைதெரியா
விடியல்களின் நீட்சியாய்..!!
அழகின் அழகியல்
தொடரும் உளவியல்
அறிவின் அறிவியல்
தொடரா இயல்பியல்
அமுதம் ஆயினும்
அப்போது புரியாது
அழுதாலும் பின்னொருநாள்
கிடைக்காது..!!
இரவின் யோனியில்
சிக்கித் தவிக்கும்
பகலின் பிறவியாக
முக்கித் திணறும்
மனதின் மௌன
முடிச்சுகள் உடைந்து
ஒழுகும் உயிர்ப்பில்
மூச்சுத்திணறல்..!!
கலியுகம் காணா
களிப்பில் திளைக்க
கலிமுகம் காட்டும்
கொதிப்பில் திகைக்க
கலிதந்தவன்
காட்டிய கருணையில் நனைந்து
கலிதின்றவன்
ஊட்டிய பெருங்காதல்..!!
சிலிர்க்க வைத்த
சில பொழுதுகள்
சிற்றம்பல கூத்துகள்
எங்கும் சிலேடைகள்
மௌனத்தின் முன்
தோற்கும் பொன்மொழிகள்
யௌவனத்தை எள்ளி
நகையாடும்..!!
முதுமையின்
முத்தச் சிதறல்கள்,- மூச்சடைக்கும்
பதுமையின் பாதங்களாய்
மறைந்தும் விரிந்தும்
புதுமையின்
பூப்பெய்தல்களில் பூரிக்கிறது அந்த
ஆலகாலம் ஆட்கொள்ள
வழிதேடி..!!
சிந்தைக்குள்
விந்தைகள் நிகழ்த்தும் சிற்பத்தின்
சிற்றிடை உடுத்தும்
கற்சேலை மறைக்கும்
காலத்தின் கால்களில்
சதிராடும் விதியின்
விரலிடுக்கில்
சிக்கிக்கிடக்கிறது வாழ்க்கை..!!
முன்னும் பின்னும்
முரண் பேசும்
பின்னம் போல்பிழியும்
எண்ணம் யாவும்
கன்னம் தின்னும்
கனவுகள் என்றாகும்
உண்மையின் உரைக்கல்
உரசலில்..!!
எனதென்று நானே
இல்லாத இவ்விடத்து
என்னை உனதென்றும்
உன்னை எனதென்றும்
உளமாற உளறும்
பொய்மையின் பாடல்களில்

No comments:
Post a Comment