ஆலமர் ஆலமர விழுதுகள் விழுந்து மண்ணில் நுழைந்து
தழைத்துச் செழித்து
துளிர்த்துச் சிரித்து பூத்துப் பழுக்கும்
காலமது கனியும்
காலம்வரை காத்துக் கிடக்கும்,- உயிரது
பிழைத்து நிலமதில்
உய்த்து வளம்பெற நிலை பெறும்
தாளமர் தயையும்
தானுறும் நிலையும் தேனினில் சுவையாம்
கோளமர் நிலையும்
மீன்பெறும் கதியும் தான்பெறும் வழியாம்
சூலமர் உறையும்
சூழ்வினை நிறையும் வாழ்வென விரியும்
நூலறி வுடையோர்
வாலறி வழியறி மேல்மதி கதியாம்
ஆழ்நிலை அறிந்து
சூழ்நிலை உணர்ந்து வாழ்நிலை தெரிந்து
தாழ்நிலை மறித்து
பாழ்நிலை கெடுத்து கீழ்நிலை தவிர்த்து
வாழ்வினை அடையும்
வழியினை அடைக்கும் மடையது திறக்கும்
ஊழ்வினை உடைந்து
உயர்நிலை அடைந்து உய்த்தலே அறிவாம்
அச்சில் அமர்ந்து
தச்சில் இணைந்து வட்டில் சுழலும்
ஆரத்தால் அளந்து
உச்சியில் நிறுத்த விட்டம் சுமக்கும்
பாரத்தால் சமநிலை
சரியாக தூரத்துப் பயணம் களிக்கும்
மூச்சில் உணர்த்தி
முழுவீச்சில் இழுக்கும் காளைக்கு இனிக்கும்
அன்பில் ஆருயிர்
தோய்ந்து என்பில் இறைந்து உறையும்
நுண்மான் நுழைபுலம்
நம்மில் நயமுற வாய்ந்த துறையும்
எண்ணம் எழலும்
திண்ணம் தெரியநற் சிந்தனை முறையும்
மனமதில் சுழலும்
வண்ணம் பொலிவுற செய்கை நிறையும்
மாண்புற வாழ்தல்
மானுடம் மகிழ்தல் ஊனுடல் வழியாம்
கேண்மின் வீழ்தல்
விதியா மேன்மைகள் அறியா மதியாம்
ஊண்வழி உயரும்
ஊனுயரம் கட்டுதல் உணரா மடமையாம்
வீண்பழி சுமந்து
உழலும் முடமது விலக்கல் நல்ஞானமாம்
பட்டறியும்
பலன் பகுத்துத் தொகுத்து பாடமாக நல்கும்
பாமரன் பாடல்கள்
பாய்மரம் செலுத்தும் வழியாய் நிற்கும்
பல்வழி அலைந்து
பால்வழி அளந்து ஞானப்பால் ஊட்டும்
பகலவன் புகலும்
நல்வழி ஊழ்வினை உதறல் உத்தமம்
