Thursday, March 13, 2014

”வெளிப்பயணம்...!”


நிலையான இருளின் மடியில் என்றும்
நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற
கோளமாய் கோணமாய் உருளும் காலமாய்
வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய்

ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும்
ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும்
அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும்
கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும்

கருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம்
காலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம்
ஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும்
மயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும்

ஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில்
வண்ணம் பிறந்து வாரிஅணைக்க மேனியெலாம்
எழில்கோலம் காந்தர்வ மணம் கொள்ள
காத்திருக்கும் உயிர்க்கோளம் பூத்திருக்கும் விடியலாய்

நிலமென நீண்ட பருவுடல் தாங்கும்
உயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும்
உதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும்
புதியன புகுவன இழைந்திட தோன்றும்

ஆதிவேக தாகம் அடங்கா பயணம்
பாழ்வெளி தாண்டும் ஊழியின் நடனம்
காரிருள் காட்டும் வழியில் தொடரும்
காந்தபுல கண்கள் இருளைப் பார்க்கும்

அடரொளிப் பிழம்பும் ஆழிருள் வெளியும்
சுடரொளி ஏந்தி சுழலும் கோளம்
அலைந்திட வளைந்திட ஆகிய களம்
கட்டுறை கலங்களில் பொதிந்த ஆற்றல்

விட்டன தொட்டன விழுந்தவை எழுந்தவை
முட்டியும் மோதியும் முகவரி மாற்றியும்
இருள்வரி ஒளிவரி இடையினில் மிளிர்ந்திடும்
விடியல்கள் ஒளிமோதும் ஒரு கோணம்

தத்துவ உயிர்ப்புகள் தனித்துவ முகிழ்ப்புகள்
தானாகி வேறாகி தம்முள்ளே மூன்றாகி
வானாகி வழியாகி விளங்கும் பொருளாகி
வந்ததுவே வான்பொருள் வீடாம்.

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை...

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் நண்பா...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_50.html

நன்றி

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தினேஷ்குமார் said...

இன்னதென இருளகற்ற வந்ததென பாரும்
தந்ததெது தவித்ததெது கொண்டதுவே கோளம்
கொட்டும் மழைவெட்டும் மின்னல் கலப்பெனது
கோணம் குறிப்பறிய கூறுபோட்டு தேடும்

அருமையான கவிதை அண்ணனே உன்னை இணைய உலகில் காணாத கண்ணனாய் காத்திருக்கேன் வா அருகில் வா....