Monday, August 01, 2011

"மனத் தாண்டவம்.."



எறிந்தக் கல்லில் தெறிக்கும் நீராய்
எகிறிக் குதிக்கும் மனம் குளத்து
மீனாய் குதூகலிக்க காத்திருக்கும் கொக்கென
கரைமீது காத்திருக்கும் விதியின் விழிகள்


வாழும் கலை யாவும் வகையாய்
வகுத்துணர்ந்த வன்மை சோதியுள் இருளாய்
கூவும் குயில் மறைத்துப் பாடும்
தோகை மயில் காட்டும் நளினம்




ஓடும் நதி மேவும் அலை
தாவும் முகில் போகும் திசை
பார்க்கும் தாகம் தணிய தாவும்
யாவும் ஒரு மாயா மயக்கம்


கனவும் காணும் நினைவும் மனதின்
உணர்வும் மலரும் மலரில் உறையும்
ஒருதுளிப் பளிங்கென ஒட்டியும் ஒட்டாமல்
ஓரமாய் ஒதுங்கும் அழகில் மயங்கும்


வாழ்வில் வரும் வசந்தம் சுகந்தம்
வருந்தும் மனம் திருந்தும் தினம்
அனலாடும் புனலென விதியோடு விளையாட்டு
அதுகாறும் காத்த மௌனம் கலையும்




ஆனந்தத் தாண்டவம் ஆடும் மனம்
மத்தளமாய் கொட்டி கொட்டி கொட்டமடிக்க
விட்டத்து பூனையாய் விதி சிரிக்கிறது
விளங்காத மதியும் வீணே சிரிக்கிறது.


புரிந்தவன் புலவன் புலம்புவான் புலையன்
பிரிந்தவை கூடும் பிணைப்பில் இன்பம்
பிணையும் அரவத்து ஆர்ப்பரிப்பில் நுகரும்
உணர்ச்சிக்கு புணர்ச்சி ஒரு வழியாம்.

8 comments:

Chitra said...

எறிந்தக் கல்லில் தெறிக்கும் நீராய்
எகிறிக் குதிக்கும் மனம் குளத்து
மீனாய் குதூகலிக்க காத்திருக்கும் கொக்கென
கரைமீது காத்திருக்கும் விதியின் விழிகள்


...... ஆரம்பமே அட்டகாசம்...... சூப்பர்!!!!

Anonymous said...

''...குளத்து
மீனாய் குதூகலிக்க காத்திருக்கும் கொக்கென
கரைமீது காத்திருக்கும் விதியின் விழிகள்..''...
Vetha.elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

முனைவர் இரா.குணசீலன் said...

விட்டத்து பூனையாய் விதி சிரிக்கிறது
விளங்காத மதியும் வீணே சிரிக்கிறது.

:)

Harini Nathan said...

//கனவும் காணும் நினைவும் மனதின்
உணர்வும் மலரும் மலரில் உறையும்
ஒருதுளிப் பளிங்கென ஒட்டியும் ஒட்டாமல்
ஓரமாய் ஒதுங்கும் அழகில் மயங்கும்//
என்னமா கவிதை எழுதுறீங்க
தமிழ் இன்னும் இன்னும் கத்துக்கணும் நான் :)

சே.குமார் said...

//கூவும் குயில் மறைத்துப் பாடும்
தோகை மயில் காட்டும் நளினம்//
வரிகளில் இனிமை...


//ஆனந்தத் தாண்டவம் ஆடும் மனம்
மத்தளமாய் கொட்டி கொட்டி கொட்டமடிக்க
விட்டத்து பூனையாய் விதி சிரிக்கிறது
விளங்காத மதியும் வீணே சிரிக்கிறது//
உண்மை நண்பா...
விதியை பார்த்து மதிகெட்ட மதி சிரிக்கிறது என்பதை அழகாய் சொல்லியிருக்கிறாய்.
அருமையான கவிதை தந்திருக்கிறாய். வாழ்த்துக்கள்.

arasan said...

சிறப்பான தொகுப்புக்கு நன்றிங்க

Kayathri said...

விதிக்கும், மதிக்கும் அற்புதமாய் போராட்டம் நடக்கிறது..நடக்கட்டும், நாமும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்போம்.மிகவும் அருமையாக விதியின் போராட்டத்தை கூறியுள்ளீர்கள்...

பிரேமி said...

"வாழ்வில் வரும் வசந்தம் சுகந்தம்
வருந்தும் மனம் திருந்தும் தினம்
அனலாடும் புனலென விதியோடு விளையாட்டு
அதுகாறும் காத்த மௌனம் கலையும்"..... அருமை...தமிழ் மணக்கிறது. வாழ்த்துகள்..:-)