Sunday, August 14, 2011

"சுதந்திரம்..?!"உணர்வுகளால் அடிமைப்பட்ட 
ஒவ்வொரு மனதுக்கும்
சுதந்திரம் எப்போது..??


பழக்கங்களால் அடிமைப்பட்ட
சமூகத்துக்கு பண்பாட்டு 
சுதந்திரம் எப்போது..??


விடுதலை என்பது என்ன..??
வீர உணர்வுகள் உள்ளத்தே
கிளர்ந்தெழும் சமூகத்துக்கா..??
அடிமைத்தளையில் ஆழ்ந்துக் கிடக்கும்
அறிவற்ற சமூகத்துக்கா...??
சுதந்திரம் யாருக்கு சொந்தம்..??


வாழ்க்கை முறை மொத்தமும்
வந்தவன் வாய் சொன்னதாய் இருக்க...
சுயம் தொலைத்த மந்தைக்கு
சொல்லில் கூட சுதந்திரம் கிட்டாது.


தாய்மொழி, தாய்நாடு தவிர்த்த
யாவும் உயர்வெனக் கருதும்
தறுதலைகள் திரியும் நாட்டில்
சுதந்திரம் எப்படி விடியும்...??


உதிரத்தில் உணர்ச்சியற்ற
ஒரு சமூதாயம் இருந்தாலென்ன...?
இல்லாது ஒழிந்தாலென்ன...?!
பற்றில்லாப் பதர்கள் பிறந்த மண்ணில்
கொள்கையும் குறிக்கோளும் குப்பையில் 
கிடக்க கொடிமட்டும் உயர்ந்து பறந்து
நடக்கப் போகும் நன்மை என்ன..???


சுயநலம் ஒன்றே சுகமெனப் போதிக்கப்பட்ட
சமூகம் எப்படி சுதந்திரம் அறியும்..??
ஒருதுளி உதிரமும் சிந்தாதவனுக்கு
வாழ்க்கையின் வலிப்புரிய  வாய்ப்பில்லை.


உயிர்களின் தியாகத்தில் "பூத்த மலர்"
தாலிகளைத் தந்து பெற்ற "சமத்துவம்"
குருதியைக் கொட்டி மடியில் வாங்கிய "வாழ்க்கை"
தலைமுறை மாறியதும் தடுமாறுகிறது.


மழலைகளின் இதழ்களில் படிக்கிறது
அடிமையின் ஆங்கில மோகம்
"மம்மி டாடியாக..."


உடுத்தும் உடையில் ஒய்யாரமாய்
சிரிக்கிறது வெளுத்துப்போன நமது
"கலாச்சாரம்".


அலுவலகம் முதல் அரசாங்கம் வரை
அந்நிய மொழியின் கோலோச்சலில்
அடிமைத்தளை அப்படியே இருக்க
எங்கே பெற்றிருக்கிறோம் சுதந்திரம்..?


கல்வியில் களையாதப் "பின்பற்றல்கள்"
உண்ணும் உணவில் மின்னி மிடுக்களில்
எல்லாம் இந்திய நாகரீகம் இல்லாதபோது
இந்தத் தேசத்தின் விடுதலையாக எதைக் கொண்டாடுவது..??


பண்பாட்டை குழித்தோண்டி புதைத்துவிட்டு
பணத்துக்கு பண்பாட்டை விற்கும்
தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்கள்
நடிகையின் கவர்ச்சியில் காட்டும் நேர்காணலில்
அவளின் கிழிந்த ஆடையில்... 
தூக்கிட்டுத் தொங்குகிறது
"சுதந்திரம்".


வெட்கமே இல்லாமல் விரும்பிப் பார்க்கும்
சொக்கத் தங்க உடன்பிறப்புகள் இந்தியனாய்
மூவர்ணக் கொடிக்கு மேல்கீழ்த் தெரியாத
அரசியல் தலைவர்கள் ஆளுகிற தேசத்தில்


கம்பங்களில் ஏற்றப் படுவது தேசியசின்னமா..??
கவிழ்ந்துக் கிடக்கும் நம் அவலமா..??
ஒருமுறை உண்மையாய் சிந்தித்து


மனிதனாய் செயல்படுவோம்,- மண்ணில்
இந்தியனாய் வாழ்ந்து இந்தியாவுக்கு வாழ்வளிப்போம்.


"வந்தே மாதரம்".

4 comments:

கலாநேசன் said...

//உடுத்தும் உடையில் ஒய்யாரமாய்
சிரிக்கிறது வெளுத்துப்போன நமது
"கலாச்சாரம்".//
மிக ரசித்தேன்.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

அருமை நண்பா...
கொட்டித் தீர்த்துட்டே...
சுதந்திர தின வாழ்த்துக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Happy independence day . . .