Thursday, April 28, 2011

"பொக்கிசப் புருசன்..."


 

புரட்சிக்காரனுக்கு பொண்டாட்டி நான்.
மிரட்சியின் பிடியில்....
பொழுதுகள் யாவும்
புரட்சியாய்..

கட்டியணைக்கும் வேளையிலும்
காரல்மார்க்ஸ் பேசுகிறான்.
கட்டாந்தரையில் உருண்டபடி
கம்யூனிசம் வீசுகிறான்.
முத்தங்கள் கூட...
முரட்டுத்தனமாய்..!!

அவனும் ஓர்க்காலத்தில்
மெல்லுடலிதான்...
ஆங்காங்கே சந்தித்த அவலங்கள்
அவனையும் சிந்திக்க வைத்தது

சீர்கெட்டச் சமூகம் சிந்தித்தே
சிந்தனைக்குள் தேள் கொட்ட
சீறும் சிறுத்தையானான்.

இறுக்கமான அவன் பிடியில்
இன்னும் இருக்கிறது...
அதிகமான "காதலும்" அதனுள்
"அடக்கமான" காமமும்.

பள்ளிகளின் பாசிசக் கொள்கை
பணக்கார வர்க்கத்தின் ஏகோபித்த
ஏகாதிபத்தியம் எதற்கென கேட்கிறான்..?

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுகள்
தடவும் நாக்குபூச்சிகள்...
நாளைய சமூகத்தின் நச்சுப்பாம்புகள்.

பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையென
போதிக்கும் புளுகுமூட்டைகள்.
மனிதம் கொன்று அறிவியல் பேசும்
அறிவிலிகள் மனித அரைகுறைகள்.

மலரினும் மெல்லிய இதயம் அவனுக்கு.
வல்லூறுகளின் நகக்கீறல் விழுந்தே
வழுக்குப் பாறையாகிப் போனது.

மார்த்தழுவும் வேளையிலும்
மார்க்சிசம் போதிக்கிறான்
பெண்ணியத்தை ஆண்டுகொண்டே
மண்ணியத்தை தேடுகிறான்.

இருட்டுக்குள் இருந்தாலும்
வெளிச்சம் வீசும் அவன் விழிகள்
சமூக இருட்டை சாடுகின்றன.

அடுப்படியில் எட்டிப் பார்க்கும்
அவனது சமதர்ம கொள்கைகள்.
அரிசிக் கல் பொருக்கி அறுவாமனையில்
காய் நறுக்கி ஆசையாய் உதவிகள்...

சிந்தனைக்குள் வாழ்ந்தவன்
"சிந்தனைகள் வாழ்க்கை" என்றான்
அவன் சிந்தித்தவாறே "நின்றான்".

அவனை முந்தானைக்குள் முடிஞ்சுக்கோ
என்ற என் தாய்க்கு எப்படிச் சொல்வேன்..?
அவன் காட்டாற்று வெள்ளம் என்று.
    
"சமதர்ம சமூதாயம்" அவன் இலட்சியம்
குறைந்தபட்சமாய் "மனிதாபிமானம்" கேட்கிறான்.
உயிர்ப் போகும் வேளையிலும் உதவாத
உயரதிகாரிகளின் சுயநலம் சாடுகிறான்.

சிறுதுரும்பும் நகர்த்தாத கைகளுக்கு
வாய்ப்போர் எதற்கென ஏளனம் பேசுகிறான்.
வாடிக் கிடக்கும் சமூகத்தை...
நாடிக்கிடக்கிறது அவன் மனம்.

இப்போது உணர்கிறேன்...
தன்னலம் பேசும் சமூகத்தில்
பிறர்நலம் பேணும அவன்....

எனக்கு.....................
           
பொக்கிசப் புருசன்.
பொல்லாத மனுசன்.              

13 comments:

Mahan.Thamesh said...

இருட்டுக்குள் இருந்தாலும்
வெளிச்சம் வீசும் அவன் விழிகள்
சமூக இருட்டை சாடுகின்றன.
அருமையான வரிகள்

Yaathoramani.blogspot.com said...

அருமையான சிந்தனை
அருமையான படைப்பு
இப்படிப் பெருமைப் பட்டுக்கொள்ளும்படியான
கணவன்மார்களும்
இப்படி தன் கணவன் குறித்து பெருமைகொள்ளும்
மனைவிமார்களும்
ஒரு நூறு பேர்மட்டும்
இந்தியாவில் இருந்தால்
சமூக அவலங்கள் எல்லாம்
அரை நொடியில் நாசமாகிப் போகாதோ?
நல்ல ப்திவு
தொடர வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

டாப் க்ளாஸ் கவிதை நண்பா..

sathishsangkavi.blogspot.com said...

//கட்டியணைக்கும் வேளையிலும்
காரல்மார்க்ஸ் பேசுகிறான்.
கட்டாந்தரையில் உருண்டபடி
கம்யூனிசம் வீசுகிறான்.
முத்தங்கள் கூட...
முரட்டுத்தனமாய்..!!//

ம்... கலக்கலான வரிகள்...

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா அருமை மக்கா அருமை என்னே ஒரு சிந்தனை பாராட்டுகிறேன்....

Nathimoolam said...

மிக அருமை

Anonymous said...

////அவனை முந்தானைக்குள் முடிஞ்சுக்கோ
என்ற என் தாய்க்கு எப்படிச் சொல்வேன்..?
அவன் காட்டாற்று வெள்ளம் என்று.//// ஆழமான வரிகளில் கவிதை நகர்கிறது .அருமை

Harini Resh said...

//மலரினும் மெல்லிய இதயம் அவனுக்கு.
வல்லூறுகளின் நகக்கீறல் விழுந்தே
வழுக்குப் பாறையாகிப் போனது//

அருமையான வரிகள்

'பரிவை' சே.குமார் said...

nalla irukku kavignarey...

Lali said...

திடீரென மடை திறந்து வந்த வெள்ளம் போல்.. நனைத்து விட்டீர்கள் கவிதை மழையில்..
வார்த்தைகளால் பாராட்டமுடியவில்லை.. அருமை! அருமையிலும் அருமை!
http://karadipommai.blogspot.com/

Kayathri said...

Mihavuuuuuuuuuuuummmmmmmmmmmmmmmmm Arumai........

Kayathri said...

//பெண்ணியத்தை ஆண்டுகொண்டே
மண்ணியத்தை தேடுகிறான்.//நல்ல சமூக சிந்தனை...

பிரேமி said...

இப்போது உணர்கிறேன்...
தன்னலம் பேசும் சமூகத்தில்
பிறர்நலம் பேணும அவன்....