Friday, April 08, 2011

"நதியின் கரை...!"


கடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு
நீண்டு நெளிந்து காற்றில் அலையும்
குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி
மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...!

அலைக்கரம் தாவி அணைக்கும் அற்புதம்
மணலெங்கும் நுரைத் ததும்பும் மகிழ்ச்சி..!
நத்தைகளும் அட்டைகளும் காலம் வரைந்த
நவீனக் கவிதையாய் கரை ஒதுங்கும்.

நீலமகள் இடைத்தழுவும் நிலமகன் கரமாய்
அமுத இரசம் ஒழுகும் களமாய்
பரிசுகள் ஒளித்து பளிங்கென காட்டும்
சிலிக்கான் சிலிர்ப்புகள் கூழாங்கல் சிரிப்புகள்..!

பூமியின் நெகிழ்சியும் மகிழ்சியும் மென்மையாய்
வெளிக்காட்டும் நர்த்தனம் மணல் படுகை.
மேகத்தின் மோகத்தில் மொட்டவிழ்ந்த தூரிகைத்
துளிகளின் சிதறிய ஓவியமாய் மழை ..!

 

ஒற்றைத் துளிகளின் கற்றைப் பிணைப்பில்
உருவான இன்பப் பிரவாகம் நதி..!!
மெல்ல மெட்டுக்கு பாட்டெழுதும் கவிஞனாய்
நளினமாய் சதிராடிச் சரிகிறாள் மலையில்.

நழுவும் ஆடையென தழுவும் மலைவிட்டு
நழுவி நிலம் நோக்கி நாணுகிறாள்..!
பிறந்த இடம் விட்டு புகுந்தவிடம்
புகுந்த மிரட்சியுடன் நகர்கிறாள்.

தளர்ச்சி கூடிய இடமெல்லாம் தங்கைகள்
தாங்கிப் பிடிக்க தளிர்நடை பயில்கிறாள்.
இடையா இது கொடியா எனவியக்க
மத்தகமா இது மத்தளமா எனநினைக்க...

சுளிவுகளிலும் நெளிவுகளிலும் பேரழகு கூட்டி
சுருங்கி விரியும் நத்தை மகள்..!
சம்மதம் சொன்ன அத்தை மகள்..!!
இருக்கவா போகவாவென தயக்கம் காட்டி...

மெல்ல மேனியெங்கும் மலர்ப் போர்த்தி
கதிரொளியில் சிரிப்பை எதிரொலித்து மயக்கும்
கண்ணாடிப்பல் இரசித்து கண்மூடும் முன்
சருகையும் சிறகாக்கி விரையும் சதிகாரி..!!!

வேர்களை முத்தமிட்டு மரங்களை கேளிப்பேசுகிறாள்.
விழுதுகள் தொட்டும் தொடாமலும் நகைக்கிறாள்..!
கண்களை மீன்களாக்கி கண்ணடித்து கவர்கிறாள்
இவளைத் தடுக்கும் தகுதி எவருக்குமில்லை.

 


வீணையே தன்னை மீட்டும் அழகு
வெண்நுரை மிதப்பில் கரைப் புரளும்
அலைத்தளும்பி ஆர்ப்பரிக்கும் செழித்த சிரிப்பில்
மனமிழக்கா உயிர் இம்மண்ணில் இல்லை.

நதிக்கு கரை என்பது............?

நதிக்கு கரை என்பது....எதுவோ...?!

நிலமா..?

இல்லை நீரா...?

நதியில்லா விடத்து கரை இல்லை.
கரை என்பது நதியால் தீர்மானிக்கப்படுவது.
நதியின் விளிம்பு விளம்பும் வரம்பு.
நதியே நதிக்கு கரை.          

10 comments:

Chitra said...

அற்புதமான கவிதை.
///// மேகத்தின் மோகத்தில் மொட்டவிழ்ந்த தூரிகைத்
துளிகளின் சிதறிய ஓவியமாய் மழை ..!/////
...Simply Superb! :-)

MANO நாஞ்சில் மனோ said...

//ஒற்றைத் துளிகளின் கற்றைப் பிணைப்பில்
உருவான இன்பப் பிரவாகம் நதி..!!
மெல்ல மெட்டுக்கு பாட்டெழுதும் கவிஞனாய்
நளினமாய் சதிராடிச் சரிகிறாள் மலையில். //

அசத்தல்......

MANO நாஞ்சில் மனோ said...

//தளர்ச்சி கூடிய இடமெல்லாம் தங்கைகள்
தாங்கிப் பிடிக்க தளிர்நடை பயில்கிறாள்.
இடையா இது கொடியா எனவியக்க
மத்தகமா இது மத்தளமா எனநினைக்க... //

அடடடா கவிஞன்ய்யா நீ.....

MANO நாஞ்சில் மனோ said...

//வீணையே தன்னை மீட்டும் அழகு
வெண்நுரை மிதப்பில் கரைப் புரளும்
அலைத்தளும்பி ஆர்ப்பரிக்கும் செழித்த சிரிப்பில்
மனமிழக்கா உயிர் இம்மண்ணில் இல்லை.//

உம் கவிதைக்கு
அந்த படங்கள் அழகு
அந்த படங்களுக்கு
உம் கவிதை அழகு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////நழுவும் ஆடையென தழுவும் மலைவிட்டு
நழுவி நிலம் நோக்கி நாணுகிறாள்..!
பிறந்த இடம் விட்டு புகுந்தவிடம்
புகுந்த மிரட்சியுடன் நகர்கிறாள். ///////

அருமை நண்பா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தளர்ச்சி கூடிய இடமெல்லாம் தங்கைகள்
தாங்கிப் பிடிக்க தளிர்நடை பயில்கிறாள்.
இடையா இது கொடியா எனவியக்க
மத்தகமா இது மத்தளமா எனநினைக்க... /////////

இதுதான் கவிதையின் உச்சகட்ட வரிகள்..... கலக்கல்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எளிமையான வார்த்தைகளை வைத்து அற்புதமான கவிதைகளை தொடுப்பது உங்கள் த்னிச்சிறப்பு.... வாழ்த்துக்கள் கவிஞரே....!

Prabu Krishna said...

மிகவும் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கலான கவிதை.. கண்ணைக்கவரும் படங்கள்... அசத்துங்க

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

மென்மையாய் நதியின் அழகை நயமாய் உரைத்த விதம்... அழகா இருக்குங்க.

நன்றி :)