Friday, September 03, 2010

சிலை உடைப்பு...!?


சமூகக் கட்டமைப்புக்கு சளையாதுழைத்த சமூக பெரியார்கள் சிலை உடைத்தெரியப் படுவது வளர்ந்து வரும் சமூகத்தின் "நாகரீகம்" என அடையாளம் காட்டியது எவன் எனத் தெரியவில்லை. சிலை என்ன செய்தது இவர்களை எனவும் தெரியவில்லை. தன் கோபத்தை தனித்துக் கொள்ள யாரை துன்புறுத்தினால் தனக்கு ஆபத்து வராது என யோசித்து சிலை ஒன்றே எதிர்க்காது என்பதால் "சிலை உடைப்பு" செய்யும் இவர்களின் "கையாலாகாத்தனத்தை" மட்டுமே இது காட்டுகிறது. ஒரு சிலையை உடைப்பதன் மூலம் இவர்கள் இந்த சமூகத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்..? கண்மூடித் தனமான "காட்டுமிராண்டித் தனம்" தவிர வேறொன்றுமில்லை.

இந்த சமூகம் இவ்வளவு சுதந்திரமாய் இருக்க பாடுபட்டவர்களுக்கு இந்த சமூகம் திருப்பி செய்யும் "மரியாதை", "நன்றி". ஒரு குவளை சாராயத்திற்கும், ஒரு பொட்டலம் கறிச் சோறுக்கும் தன்னை விற்றுவிட்ட "தறுதலைகள்", சொந்தமாய் யோசிக்கக் கூடத் தெரியா சோம்பேறிக் கூட்டம் இந்த சமூகத்தின் அத்தனை அவலங்களுக்கும் மூலம். வயிறு வளர்ப்பதொன்றே "வாழ்க்கை" என்றெண்ணி வாழும் "குறைமதி" கூட்டம் இப்படி தூண்டப்பட்டு "சமூக விரோத செயல்களில்" ஈடுபடுகிறார்கள். சட்டம் கடுமையான தண்டனைகள் வழங்கும் என்பது நடைமுறையானால் இவர்களைப் போன்றவர்கள் இருக்க மாட்டார்கள். அல்லது இருக்கும் இடம் தெரியாது. ஆனால் நம்முடைய அரசியலுக்கு அடியாட்கள் துணைத் தேவைப் படுவதால், கூட்டம் சேர்க்க ஆள் தேவைப்படுவதால், வேலையே இல்லாத "வெறும்பயல்கள்" தேவையாய் இருக்கிறது. அதனாலேயே சமூக குற்றங்கள் பெருகி வருகின்றன. அடக்க வேண்டியவர்கள் "அடைக்கலம்" தேடுவதன் அவலத்தால் நிகழ்ந்த "நியாயப் படுகொலை" இது.

சமூகம் சிந்தித்த "பெரியோர்களுக்கு" கண்ட இடத்தில் சிலை வைப்பது அவர்களுக்கு செய்யும் மரியாதை என எவன் சொன்னான் என்பது தெரியவில்லை. பாதுகாப்பில்லாத இடத்தில்..., அல்லது பாதுகாப்பு தரமுடியாத சூழலில் "சிலை" வைப்பதை நிறுத்திக் கொள்ளலாமே..! இந்த சிலை வைப்பீர்கள் என்றெண்ணி யாரும் சமூகத் தொண்டாற்றவில்லை. சிலை வைத்து அவமரியாதை செய்வதை விட சிலை வைக்காமல் இருப்பது பெரிய மரியாதையாகும். மூலைக்கு மூலை சிலை வைத்து இந்த தேசம் சாதியால், மதத்தால், கட்சியால், ஊரால், தெருவால், இப்படி பல நிலைகளால் பிரிக்கப் பட்டு, பிரிந்து அவலத்துக்கு ஆளாகிக் கிடக்கிறது. உயிரற்ற சிலைகளால் இந்த சமூகத்துக்கு ஆகப் போவதொன்றுமில்லை. எனவே இனி "சிலை வைக்காதிருப்போமாக".

அமைக்கப் பட்ட, படும் சிலைகளும் அனாதையாய் நடுச் சாலைகளில் வெட்டவெளியில் வெயில், மழை, இடி, புயல், புழுதி, என எல்லாவற்றிலும் பாதிக்கப் படும் அளவுக்கு "அந்த மனிதர் செய்த பிழை என்ன?"....இந்த சமூகம் அவர்களுக்கு இதை விட ஒரு "சவுக்கடி" தந்துவிட முடியாது.

"உன்னைத் தெருக்களில் நடக்க விட்டவருக்கு, உன் பாதங்களுக்கு காலணி அணிந்து அழகு பார்த்தவருக்கு, குளத்தில் குளிக்க வைத்தவருக்கு, கைவீசி நடக்க உரிமை தந்தவருக்கு, குடிக்க தண்ணீர் தந்தவருக்கு, கடவுளை "கர்ப்பக்கிரகத்தை" உனக்கு காண்பித்தவருக்கு, தேரோடும் வீதிகளில் உன் கால்த் தடம் பதிய விட்டவருக்கு, சமூகத்தின் மிகக்கொடுகையான தண்டனைகளில் இருந்து உன்னை விடுதலை செய்தவருக்கு, சுடுகாடு உனக்கும் சொந்தமாக்கியவருக்கு, உன் பிறப்புரிமையை உனக்கு மீட்டு தந்தவருக்கு, உன் அறிவுக்கண் திறக்க கல்வி புரட்சி செய்தவருக்கு, "சட்டை அணிந்து கொள்" என உன் மானம் காத்தவருக்கு இந்த சமூகம் மிகச் சரியான பரிசு தந்திருக்கிறது".

...!! கோட்டு...சூட்டுப் போட்டுக் கொண்டு கோட்டை கொத்தலங்களில் அமர்ந்திருப்போரே...., மிடுக்காய் உடை அணிந்து அலுவலகம் சென்று அமர்ந்திருப்போரே..., வெள்ளை உடை அணிவோரே......கேளிர், உங்களின் இன்றைய இந்த நிலைமைக்கு அன்று வித்திட்டவர்கள் அவர்கள். தங்களின் மனைவி, மக்களை, வீட்டை விட்டு வீதியில் இறங்கி போராடாது போயிருந்தால்...., இன்று உனக்கு "இப்போது நீ அனுபவிப்பது" எதுவுமே இல்லாது போயிருக்கும். உங்களின் கவனத்தை கொஞ்சம் சமூகத்தின் மீதும் வையுங்கள். இந்த கொடுமை இனி நிகழாதிருக்க நடவடிக்கை எடுங்கள்.

"நம்முடைய சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக்கப் படட்டும். குற்றவாளிகள் குறையட்டும். சமூகம் அமைதி படட்டும். அறிவை பெறட்டும்...நான் சொல்வது "காசு சம்பாதிக்க மட்டுமே தெரிந்த குறைமதியை" அல்ல. பக்கத்து வீட்டின் தீ நம்மை பாதிக்காது என இறுமாப்போடு ....எவனாவது தீ அணைக்கட்டும் ...என சும்மா வேடிக்கைப் பார்க்கும் குரூரம் குறைந்து நம்மால் முடிந்ததை செய்யும் மனிதநேயம் வளர்க்கும் அறிவை இந்த சமூகம் பெறட்டும்".

அதுவரை "புதிதாய் சிலை வைப்பதை" தவிர்ப்போம். இருக்கும் சிலைகளில் பறவைகளின் எச்சமிச்சங்கள் இனியும் வீழாதிருக்க செய்வோம். நிழற்க்குடையின்றி சிலை வைப்பதை தவிர்ப்போம். எதுவுமே முடியாவிட்டால் "தவறில்லை" யாரையும் அவமதிக்காது வாழக் கற்றுக் கொள்வோம்.

No comments: