Sunday, September 05, 2010

"ஆசான்"...!!


நிரப்பப் படாத நியூரான்கள் என்மூளை
நினை வகத்தே நிரம்பிக் கிடக்க...
யாதுமறியா இப்பிறவி யனக்கு ஐம்புல
நுகர்ச்சி யறிவு தாய்வழி மரபு.

வழக்கு மொழியறிவு தந்தைவழி வரவு.
""கரம் தொடங்கி அறிவுக் கண்
திறந்து ஆன்றோனாய், சான்றோனாய் எனைத்
திருத்தி சமூகத்தில் பண்பாளானாய் வாழ

வாழ்க்கை வகுத்துத் தந்து, வாழ
சொல்லித்தந்து தன்னை அர்ப்பணித்து தான்
நின்ற இடத்து நகராது நின்று......என்னை
நகர்த்தி விட்ட எனக்கான ஏற்றம்...!!

தான் காணும் போதினில் தன்
பிள்ளை யடைந்த தாய் மகிழ்ந்து
உச்சிக் குளிர்ந்து உணர்ச்சிப் பெருக்கில்
கடைக்கண் வழி சிந்தும் துளி பெருக்கி

மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் "மாமனித"
தெய்வங்கள் செய்த தவங்கள்.....நாங்கள்
வாழும் வாழ்க்கை அவரீந்த வரங்கள்.
ஊன்று கோல் ஊன்றும் வயதில்

எங்கேனும் காண நேர்ந்தால்...நலம்
விசாரிக்கும் மாண்பு...! மனித நாகரீகம்
சொல்லித் தந்த பாங்கு..! இன்னமும்
குறையாத கம்பீரம்...! வளர்ச்சி கண்டு

பிரமிக்கும் அவர் முகம் கண்டு
மிரள வைக்கும் அந்நாளைய பிரம்படி
"ஞாபகங்களில்".... இன்று விழி சிந்தும்
கண்ணீர் இனிக்கிறது காரணம் தொனிக்கிறது.

அன்று கசந்தவர் இன்று "கடவுளாய்"
கண்முன் நிற்கிறார்...கைத்தடியூன்றி...!!!
நாக்கு வளைய ""கரம் சொல்லி
மூக்கு கண்ணாடி சரிசெய்யும் "தமிழ்த் தெய்வம்"..!!

முகம் சுளிக்க வைக்கும் ஆங்கிலத்தை
முயன்று புகட்டிய "செவிலித் தாய்"....!!
பிணக்கு கொள்ளும் கணக்கை பிடியென
கச்சிதமாய் கற்றுத் தந்த "கலைச்சிற்பி"...!!

ஆகா தறிவியல் வேண்டா மென
அரற்றும் மனதுக்கு ஆறுதல் சொல்லி
அறிவியல் அற்புதம் சொல்லி....இது
இயற்பியல்... வேதியியலென....இனம் காண

செய்த "பௌதீகப் புத்தன்"..!! விலங்கைப்போல்
இருந்தவனுக்கு மனித வித்தியாசம் உணர்த்திய
"ஆறாவதறிவு"....!! உலகச் செழிப்பின் உண்மையாம்
தாவரம் நேசிக்க கற்றுத் தந்த "பண்பாளன்"...!!

மானிட வரலாறு சொல்லி நெஞ்சம்
நிமிரும் எங்களின் "கட்டப் பொம்மன்"...!!
மண்ணின் மகத்துவம் சொல்லியும் செய்தும்
பூமியின் புனிதம் போற்றும் "கருணாமூர்த்தி"..!!

வாழ்வியலை வகைப்படுத்தி வளரும் கலைத்
தொகைப்படுத்தி....மானிடம் நிமிர
முதுகு கொடுத்து முதுகு கொடுத்து
கூன் விழுந்த "பிரம்மாக்கள்"...!!

"நல் ஆசிரியர்கள்"....!!!

பிரதிபலன் பார்க்கா துழைத்த பெருந்தகையீர்...!
உங்கள் பாதங்களில் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறோம்.
எங்களின் எதிர்காலத்தில்...இந்தியாவின் எதிர்காலம்
செதுக்கும் சிற்பிகள்..! வலிச்சுமந்த சிப்பிகள்..!!

சிட்டாய் பறக்கும் வயதில் மிட்டாய் தந்து
பள்ளிக்கு வரவழைத்த தந்திர "மந்திரவாதி"...!!
உன் பாதம் பணிகிறோம் மகிழ்ந்து.
வீட்டுச் சுமை வெளிக் காட்டும்

கால்சட்டை "பொத்தல்கள்" சொல்லாமல்
சொல்லும் வறுமை முகத்தில் வெறுமை
காணப் பொறுக்கா "கண்ணியவான்கள்"...தைத்தும்
தருவார் புதுச்சட்டை எடுத்தும் தருவார்...

எதிர்ப்பார்ப்பின்றி எந்த விளம்பரமு மின்றி.
"செய்நன்றி மறவாதே" சொல்லித் தந்தவரை
நெஞ்சாரத் தொழுகிறேன் உள்ளுக்குள் அழுகிறேன்.
பகல் பொழுது பட்டினிக்கிடந்தால் பகிர்ந்துண்ணும்

பக்குவம் பழக்கிய "மனிதப் பொக்கிசம்"..!!
கலங்கிய கண்களின் காசுத் தேவை
உணர்ந்து உதவிய "மூன்றாம் கை"...!!
கண்டிப்பில் கருணை காட்டும் அக்கரை

இந்நாளில் என் வாழ்வில் சர்க்கரை.
செய்த தவறுகளி லிருந்து திருத்திய
"சிறுவர் சீர்திருத்தப் பள்ளி"...!! வருங்கால
நல் வாழ்வை கொடுத்தனர் அள்ளி..!.

உமக்கு ஏதெனும் செய்தாக வேண்டும்
உமதிறுதிக் கால நிம்மதி குறையாதிருக்க
உமக்கொரு பிள்ளையாய்...ஊன்றும் கோலாய்
உதவிடுதல் எங்கள் மாணவக் கடமை...!!

எங்களைப் பெறாதுப் பெற்று ....தங்கள்
"பெரும்பொழுதை" எங்களுக்காய் கழித்த
"பெற்றோர்கள்"..! உங்களுக்கு உளம் கனிந்த
வாழ்த்துக்கள் வழங்கி...வணங்குகிறேன் நும்பாதம்.

( மனிதம் செதுக்கும் புனித நல்லாசிரியர்கள் அனைவருக்கும்
ஒரு மாணவனின் மனமார்ந்த சமர்ப்பணம்.)

2 comments:

சுவடுகள் said...

மானவ மைந்த.,
நன்று...! உம் ஆசானின் மனம் குளிர வரம்தந்தாய்..!ஆசிகள் பல வாழ்த்துக்கள்.வளரட்டும் உம் படைப்புகள்.
வாழ்வியலை வகைப்படுத்தி வளரும் கலைத்
தொகைப்படுத்தி....மானிடம் நிமிர
முதுகு கொடுத்து முதுகு கொடுத்து
கூன் விழுந்த "பிரம்மாக்கள்"...!!
மனதை ஈரமாக்கிய வரிகள் இவை. "அருமை"

பவள சங்கரி said...

மாதா, பிதா, குரு,தெய்வம்..........குரு பக்தியும், அவர்தம் ஆசிர்வாதமும் தங்களை மென்மேலும் உயர்த்தும். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்....