Saturday, October 10, 2009

* அழகு + அவள் = கண்ணீர் ! *



உதிரும் உன்
ஒவ்வொரு கண்ணீர் துளியும் …
உன் துயரம் சொல்கிறது ..!

துடைக்கத் துடைக்கத் தொடரும் …
துளிகள் …உன் ..
துயரத்தின் உயரம் சொல்கிறது !
நினைக்க …நினைக்க …இதயம்
கனக்கும் நினைவுகள் ..!உன்
விழிகளில் நிழலாடும் கனவுகள் ..!
விம்மி புடைத்த நாசிகளுக்கு அருகில் ...
விதி வசத்தால் …
விழுந்து கொண்டிருக்கும் ‘நயாகரா ’..!

அழுது பழுத்த கன்னங்கள் ..! அதில்
கண்ணீர் அழுந்த பதித்த உன் எண்ணங்கள் !
வழிந்தோடும் விழி நீரின் வழித்தடம் வழியே…
நீ வாழ்ந்த வாழ்க்கைத் தடம் தெரிகிறது !.
உகுத்து கொண்டிருக்கும் கண்ணீர் வழியே ..
ஊடறுத்து முந்தி தெறிக்கும் ...
உணர்ச்சிகள் புரிகிறது !
சுவாசத் திணறலுக்கு மத்தியில் … உன்
வாச திணறல் தெரிகிறது …!
சுருங்கி விரியும்
நெற்றியின் மத்தியில் …
காலம் தன் கால்தடம் பதித்த
காட்சித் தெரிகிறது !

வரிப் பள்ளங்களா ..! அன்றி …
வாழ்க்கைப் பள்ளங்களா ?
காலம் உனக்குள் வெடித்த
அனுபவப் "பொக்ரான்கள்"…உன்
மௌனம் கிழித்தெறியும்
மகத்தான முயற்சியில் …
தொண்டைக்குள் ஒரு …
தொடர்வண்டி ஓட்டம் தெரிகிறது !
கால வெள்ளம் ஏற்படுத்திய கரைகளை …உன்
கண்ணீர் வெள்ளத்தால் கழுவுகிறாய் …!

கால வெள்ளத்தால் …எழுந்த
கண்ணீர் வெள்ளம் …
கைரேகை கன்னத்தில் பதிய
கரங்களால் நீ துடைத்தெறிவது …?
கடந்த காலத்தையும் ..!
நிகழ்ந்த துயரத்தையும் ..!

விளிம்பு சிவந்து
புடைக்கும் நாசியில் …
விதியை வெல்லும் …
தன்னம்பிக்கை தெரிகிறது ..!
உள்ளக் கிடங்கில் ..
உறைந்து கிடக்கும் ..
உண்மைகளை ….
இறந்த காலம் சேமித்து வைத்த
நினைவு சேமிப்புகளை …
நிகழ் காலம் …
நிழற்படம் காட்டாதிருக்க …
நீ காட்டும் முயற்சி புரிகிறது ! உன்
வாழ்க்கை சுழற்சி புலப்படுகிறது !.

'கண்ணாடி முன் நின்று கொண்டு …
“பிம்பம் காட்டாதே ”..என்பது போல் ’…
மனதுக்கு முன்னால் ...
மண்டி இடுகிறாய் ..!
மன்றாடுகிறாய் ..!
எல்லோருக்கும் முன்னால் …
தலைகுனிய …
எவருக்குத்தான் மனம் துணியும் ?!

அன்பை ...! அன்பிற்காய் ...
சுவாசிக்காத வரை …
நினைப்புக்குள் நிம்மதி என்பது …
"தனி ஈழ 'தமிழ்' போர்தான்" …!