ஆமை அடக்கும் ஐம்புலத் தொடுக்கம்
ஆன்ம விளக்கம்
ஐம்பூதத் தொடுக்கம்
ஆமை கரைசேர
பெருங்கடல் கடக்கும்
ஆருயிர் கடைத்தேற
பிறவிக்கடல் ஒடுக்கம்
ஊமை விளக்கும்
தத்துவப் பொருள்
உண்மை துலங்கும்
பொய்யாப் பொருள்
ஊமை உரைக்கும்
வாய்மை ஒலிக்கும்
உண்மை செவிடன்
செவிக்கும் ஒலிக்கும்
பரம்பொருள்
விளங்க பரமும் பொருளும்
கரும்பொருள்
துலங்க ஒளியும் பொருளும்
ஒளிப்பொருள்
உழல உருளும் கோளம்
கோளம் சுழல
நாளும் காலமும்
உய்த்தப் பொருள்
உய்த்த விடத்து
உதித்தப் பொருள்
உதைத்த விடத்து
உய்த்துக் கிடந்தது
உறைந்த விடத்து
உயிர்ப்பு கிளர்ந்து
உலகம் அடைத்தது
வார்ப்பு உறைந்த
வெண்கலம் கொள்வடிவம்
வளர்ப்பு நிறைந்த
மண்கலம் கொள்குணம்
வாய்ப்பு அடைந்த
பொன்கலம் கொள்நிறம்
வாழ்வில் தோய்ந்த
ஊண்கலம் கொள்ஞானம்
இட்டார் இடஞ்சுழி
பெற்றார் வலஞ்சுழி
இட்டார் வலஞ்சுழி
பெற்றார் இடஞ்சுழி
தட்டார் ஒருவர்
தைத்தார் ஒருவர்
மட்டார் பழுத்து
பெற்றார் இருவர்
கொட்டாரப் பந்தல்
கட்டிக் கிடக்குது
கொய்யாப் பழமும்
கொட்டிக் கிடக்குது
கொம்புத் தேனும்
ஒட்டிக் கிடக்குது
கொம்பு கொண்டு
வரும் கொம்பனுக்கு
பூவுமுண்டு
புழுவுமுண்டு பூண்டவர் எவரோ..?
காயுமுண்டு
கனியுமுண்டு உண்டவர் எவரோ..?
நாயுமுண்டு
நரியுமுண்டு கண்டவர் எவரோ..?
குணமுண்டு மனமுண்டு
விண்டவர் எவரோ..?
கல்லுக்குள்
காலூன்றும் புல்லுக்கும் வித்தாகி
காற்றுக்குள்
கையூன்றும் புள்ளுக்கும் சத்தாகி
கருவுக்குள்
மெய்யூன்றும் குழவிக்கும் தாதாகி
உருவுக்குள்
உயிரூன்றும் பிறவிக்கும் தூதாகி
இருளும் மருளும்
விரட்டும் உலகில்
ஒளியும் அறிவும்
உறவாக வாழ்வில்
சாவும் நோவும்
வாராத வாழ்வுண்டு
