தெருவெங்கும் விளக்குகள் வைத்து முற்றத்தில்
தேவதைகள் நீர்தெளித்து
பெருக்கி இடம்பிடிக்க
புள்ளிவைக்க
துள்ளிவரும் புள்ளிமான்கள் கைகளில்
கொட்டாங்குச்சி
கோலமாவு,- குனிந்து நிமிரும்
ஒவ்வொரு முறையும்
ஒருதுளி சிந்தும்
கலைந்து கலைந்து
அலையும் கார்மேகக் கூந்தல்
அடுத்து எந்தப்புள்ளி..?
எத்தனை புள்ளி..?
வியந்து விழித்து
விழியுயர்த்த புருவம் துடைக்கும்
புறங்கைகள்..!
வைத்த புள்ளி அழித்து இடவலம்
இங்கும் அங்கும்
கால்கள் பதித்த தடங்கள்
கோடுகள் வரைய
கூந்தல் காடுகள் கலையும்
வெளிச்சம் சிந்த
விளக்கேந்தும் பிஞ்சு விரல்கள்
வண்ணம் தீட்ட
வண்ணப்பொடி ஏந்தி,- தன்
எண்ணப்படி இறைக்க
இடம் தேடும்
விரல்நுனியில்
விழுந்துக்கொண்டிருக்கிறது
அந்த விடியலின்
அழகியல்...!!
மௌனப்புன்னகை
சிந்தும் இதழ்கடையில் தனக்கொரு
இடம்தேடும்
காதோரம் தொடங்கி கன்னம் வழிந்த
வியர்வை அருவி...!!
கவனம் கலையாத விழிகளின்
வழிகாட்டலில்
சிந்திக்கொண்டே செல்கிறது...
அண்டவெளியின்
அதிசயங்கள்- கோலமென..!!
அழகியலும் ஒழுங்கியலும்
ஒருங்கே இணையும்
ஆச்சரியம் தான்
கோலம்.
இருளில் இருந்து
ஒளியை காணும் இன்பம்
உண்மையில் நின்றுகொண்டு
பொய்மையை இரசிக்கும்
பேரானந்தம்,-
பாவாடையும் தாவணியும்
தேவதைகளின்
சீருடைகள்..!!
மாக்கோலமிட
பூக்கள் அணிவகுத்த போர்கோலம்
விடிந்தும்
விடியாத இந்த பொழுது..!!
பசுவும் கன்றும்
செடியும் கொடியும் பூக்களும்
சிறுகுடிசையும்
ஒரு தென்னையும் வரைந்து
தனக்கான பால்வெளியை
படைக்கும் பிரம்மாக்கள்..!!
தும்மிக்கொண்டே
துவண்டு தொடரும் போர்
எண்ணத்தோடும்
சில வண்ணத்தோடும்.
சிக்கல் கோலங்களில்
சிக்கிக்கொள்ளும் சில நாட்கள்..!!
பசுஞ்சாணமும்
பரங்கிப்பூவும் உயிரூட்ட கருப்பொருள்
இருகரம் கூப்பும்
”நல்வரவு” கரும்புடன் பொங்கல்
அம்மாவும் அப்பாவும்
தமிழர் உடையில்...
இப்படியானதொரு
மார்கழி குளிரின் விடியலில்
தேவதைகள் நடனக்
கோலமிடும் தெருவில்...
நந்தவனம் புகுந்த
தென்றலென அந்த கவிஞன்
நடந்துகொண்டிருந்தான்....

No comments:
Post a Comment