Monday, August 29, 2011

”வன்வியல்...!!”




வலியன வாழ எளியன பலியாகும்
வாழ்வியல் தர்மம் வலுவான உலகில்
வாழும் முறை தவறென்பது உணரா
வன்மனம் கொல்லும் மென்மனம் தினம்


மென்மைகள் வாழ மேன்மைகள் செய்யா
வன்மைகள் வாழும் வழி அறியுமோ..??
உண்மைகள் உறங்கும் உலகம் இது.
ஊமைகளின் மௌனப் பொருள் யாரறிவார்..??




வல்லூறுகளின் நகங்களில் சிக்கித் தவிக்கும்
கோழிக்குஞ்சுகளின் வாழ்க்கை இரத்த வாடையாய்..!!
முட்செடிகளின் பிடியில் முல்லைக் கொடிகளின்
மலர்களின் இதழ்க் கிழிக்கும் முட்கள்..!!


அரவத்தின் வாயில் தேரைகள் பிரசவிக்கும்
வாழ்வியல் வலிகள் கலங்கிய கர்ப்பமாய்...!!
பாதியில் செய்தப் பிழைக்கு ஆதியின்
பெயரில் பழிச்சுமத்தி பாவத்தில் பசியாறல்...!!


கரும்பாறை உடைக்கும் வேர்களின் துணிவில்
காலம் வாழ்வியல் சூட்சுமம் வைத்திருக்கிறது
பூச்சிகள் தின்னும் பூக்களின் இதழ்களில்
மென்மைகளின் வன்மைகள் புலப்படும் புரிவோம்


நிம்மதிக் குலைக்கும் கனவுகள் கூட
வன்மைகள் புகுத்தும் வழிதான் காணுங்கள்
உண்மைக்குள் ஒளிந்த பொய்யுக்குள் புகுந்த
உண்மை பாறைக்குள் ஒளிந்த தேரை.




பட்டுப் பூச்சியின் எச்சில் உடலறுக்கும்
தொட்டுப் பார்க்க மென்மையாய் பட்டு
சிலந்தியின் வலையில் சிக்கும் உயிர்கள்
விதியின் கையில் விழுந்த வாழ்க்கை.


நிலம் நோக்கித் தவழும் நதிதான்
நிலத்துகள் நகர்த்தி நிலம் தீர்மானிக்கிறது.
களம் அமைத்து காலன் கலன்
உடைக்க வலிமிகு வளி வெளியாகும்.
**************************************

7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்க்கைப் போராட்டத்தை மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

வலியன வாழ எளியன பலியாகும்!!!


இதுவன்றோ வாழ்க்கைத் தத்துவம்!!

இவ்வுலகில் வாழ நாம் நம் வலிமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நிரூபன் said...

ஆக்கிரமிப்பின் கீழே அமிழ்ந்து போகின்ற மெலியதுகளைப் பற்றியும், வலிமையோடு எச்சங்களிலிருந்து எழும் வலியன் பற்றியும் உங்களின் கவிதை பாடி நிற்கிறது.

Unknown said...

யதார்த்தம் அருமை!

தினேஷ்குமார் said...

வணக்கம் தல
வன்வியல் நிகழுக்கேற்ற பொருத்தமான தலைப்பு வன்வியல் சூழும் வஞ்சக உலகமிது அகப்பட்டோர் பலர் அவதியுறும் காலம் வஞ்சகப்பேய்களை வங்க நீலக்கரை என்று ஆட்க்கொள்ளும்

Unknown said...

யதார்த்தம் உரைக்கும் அருமையான கவிதை!

பிரேமி said...

"பட்டுப் பூச்சியின் எச்சில் உடலறுக்கும்
தொட்டுப் பார்க்க மென்மையாய் பட்டு
சிலந்தியின் வலையில் சிக்கும் உயிர்கள்
விதியின் கையில் விழுந்த வாழ்க்கை.".....:-((