Sunday, June 06, 2010

"தமிழ் சிந்தும் இரத்தம்"..??
லெமூரியா கண்டம்
செழிப்புற்று வளர்ந்தக் காலம்...
இயற்கையின் சதியால்... லெமூரியா
இதயம் பிளந்தது.
இலங்கை பிறந்தது.
உடம்பின் ஒரு அங்கமென
உள்ளிருந்த ஒன்று...
காலம் வைத்த கண்ணிவெடியில்
கடலுக்குள் கரை ஒதுங்கியது.
தமிழர்களின் இதயம் இடம் மாறிப்போனது.
அதன் ஒவ்வொரு துடிப்பும் "தமிழ்", "தமிழ்" என்றது.
தமிழாய் துடித்தது. தமிழுக்காய் துடித்தது.
தமிழ்த் துடிப்பின் சப்தம் கேட்டு...
தமிழர்கள் துடித்தார்கள்.
இலங்கைத் தமிழர்கள் துடித்தார்கள்.
எமது இரத்தத்தின் ஒரு பாதி,
எம் சமூகத்தின் சரி பாதி,
எம் உறவுகளின் உயிரோட்டம்...
"தரையில் கொட்டிய பாதரசமாய்"
இங்கும், அங்கும் சிதறிக் கிடக்கிறது.
ஒன்றையொன்று உதறிக் கிடக்கிறது.
தமிழின் இதயத்தில் ....
சிங்களம் சிம்மாசனமிட்டிருக்கிறது.
இதயம் துடித்தால்தான் ...(இலங்கை)
உடலும் துடிக்கும்...(தமிழ் நாடு)
என்பதுணர்ந்த சிங்களம்...
இதயத்தின் மூச்சினை இராணுவத்தால் அடக்கியது.
இதயத்தின் வேர்களில் வெடி வைத்தது.
இதயம் வேகும் வரை,
தமிழ்ச் சாகும் வரை
குண்டு மழைப் பொழிந்தது.
இதயம் இல்லாத உடல் என்பதால்தானோ...
இங்கே எவ்வித சலனமும் இல்லை.
தமிழுக்கும், தமிழனுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெல்லாம்
தமிழகம் கை கட்டி... வாய் மூடி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.
எங்கோ ஒரிரு இடங்களில் ....
உயிர்ப் பிரிந்த உடலின் நரம்புத் துடிப்பாய்...
ஒன்றிரண்டு எதிர்ப்புகள், போராட்டங்கள், தற்கொலைகள்...!
மானமுள்ள ஒரே இனத்தின்
மாரறுத்த கைகளின் வேரறுக்க வேண்டாமா?
தாய்ப்பாலும், தமிழ்ப்பாலும்
ஒருங்கே ஊட்டி வளர்த்த எம் தமிழச்சிகளின்
வாழ்வு விலைப் போகிறது.
தமிழுக்காய், ஒட்டுமொத்த தமிழனுக்காய்...
களத்தில் இறங்கியவன் உயிர்ப் போகிறது.
நமக்கோ...!
எவ்வித உணர்ச்சியுமின்றி....
செத்தவன் வாய்ச் சிரிப்பழகாய்...
மரத்துப் போய்...தமிழகம்
வாழ்நாள் கணக்கை எண்ணும்...
வயோதிகப் பாட்டியாய்...
செயலற்றுக் கிடக்கிறது.
சிங்களத்தின் துப்பாக்கிகளுக்கு...
தமிழச்சிகளின் "தொடை சிம்மாசனம்" கேட்கிறதென்றால்...!?
தொடைத் தட்டி எழுந்திருக்க வேண்டாமா? எம்மினம்.
நமக்கு மானமா பெரிது?
இன உணர்வு எங்கேனும் உண்டா?
நாம் கால் வைக்கும் இடங்களில்
கண்ணிவெடிகள் இல்லை.
நம் கழுத்தையும், ஆண்குறியையும்
சிங்களத் துப்பாக்கி அறுத்தெறியவில்லை.
நம் சாலைகளில் பீரங்கிகள் செல்வதில்லை.
நம் உணவுத்தட்டுகளில்...
சிங்களத்தின் சிறுநீரும், மலமும் விழுவதில்லை.
நம் வீட்டுப் பெண்களின்புழைகளில்
சிங்களத் துப்பாக்கி நுழைவதில்லை.
உயிர்ப் பிரியும் வேளைவரை
மானம்காக்கப் போராடும் அவலம்
நமது பெண்களுக்கு வந்ததில்லை.
பருவம் வந்த பெண்களை சிங்களம்
பங்கிட்டுக் கொள்ளும் துயரம்...
நமக்கெங்கே... புரியப்போகிறது.
கணவர்கள் கைவிட்ட நிலையில்..
கடைசியாய் மானம் காக்க...
கண்ணனை அழைத்த "திரௌபதையாய்" அங்கே
எம்குல தமிழச்சிகள்...
சிங்களத்தால் சீரழியும்போது...
தென்னகமாம் தமிழகம் நோக்கி கை நீட்டி...
"அண்ணா"! "அண்ணா"!! என்று அரற்றுவது..
கடலோசையைத் தாண்டி...
கரையேறி ...இந்த
தமிழகத்து "அண்ணன்கள்", "குடிமன்னன்கள்"
காதில் விழவாப் போகிறது.?!
"உன்னைக் காப்பாற்றுவேன்" என்று
கண்ணன் சத்தியம் செய்திருந்தான்.
காப்பாற்றினான்.
இந்த அண்ணன்கள் அப்படி எதுவும் சத்தியம் செய்யவில்லையே..!?
பிறகு எப்படி உன்னைக் காப்பாற்றுவார்கள்.
மன்னராட்சி காலத்தில்....தமிழகத்தில்
மானமிருந்தது.
தேசம் காக்கும் வீரம் இருந்தது.
"அந்த காலத்தை" எண்ணிக் கொண்டா
"அண்ணா"! "அண்ணா"!! என்று அரற்றுகிறாய்.
"அடிப் பைத்தியக்காரி...!"
இப்போது...இங்கே...
குடியாட்சி...?!
இந்நேரம் இங்கே...
இராசராசச் சோழனோ...
இராசேந்திரச் சோழனோ...
இருந்திருந்தால்.....
உன் குரல் கேட்ட கணத்தில்
உன் மானத்தை விலைப்பேசியவன் நாக்கு அறுப்பட்டிருக்கும்.
உன் மார்த்தொட்டவன் கை வெட்டப்பட்டிருக்கும்.
உன் மனதை புண்படுத்தியவன் மார்பில் வேல் பாய்ந்திருக்கும்.
அத்தனை சிங்களத் தலைகளும் அறுபட்டு...
உன் காலடியில் உருண்டிருக்கும்.
"இலங்காபுரி".. ! இப்போது உனதாகி இருக்கும்.
"தமிழ் தேசம்" மலர்ந்திருக்கும்.
தினவெடுத்த திண்தோள்கள் இப்போது இங்கே இல்லை.
வாள்தூக்கும் வன்கைகள் இப்போது இங்கே இல்லை.
மார்தட்டி மானம் காக்கும் பரம்பரை இப்போது இங்கே இல்லை.
எங்கோ இமயத்தில்...
எவனோ கனகவிசயன் தமிழையும், தமிழனையும்
"பழித்தான்" என வாய்வழி செய்திக்கேட்டு...
சேர்படை கொண்டு....
நேர்படை நடத்தி...
காலத்தின் நெற்றியில் தன் வெற்றியை பதித்த
அந்த "சேரர்கள்" எங்கே?
"சோழம்" "சோழம்" என்று சூளுரைத்து...
சொல்லொனா வெற்றி கண்ட அந்த "சோழன்" எங்கே?.
தம் உயிர்போல் மதித்து...
தமிழை தாங்கி பிடித்து நடத்திச்சென்று..
வளர்த்துவிட்ட ...அந்த "பாண்டியன்" எங்கே?
இவர்களில் ஒருவரேனும்...
இன்று இருந்திருந்தால்...
என் அன்பு தங்காய்..!
நீ மானம் பிழைத்திருப்பாய்.
அம் மண்ணில் செழித்திருப்பாய்.
இன்று மூவேந்தரும் இல்லை. அதனால்
உன் பிரச்சனைகளுக்கு முடிவுரையும் இல்லை.
இங்கே இருப்பவர்கள் எல்லாம் தமிழர்களும் இல்லை.
இருக்கும் தமிழர்களுக்கும் "தமிழ்த் தாகம்" இல்லை.
இவர்களுக்கு தமிழ் தேவையும் இல்லை.
தமிழ் மட்டுமல்ல..., தன்மானமும்தான்.

No comments: