Friday, February 27, 2026

"தமிழ்க்கடவுள்..!"


அன்னைத் தமிழை அருளிய அழகன்

தமிழுக்கு ஓளவை தந்தமால் மருகன்

வெற்றிக்கு வேலினை கண்டமா முருகன்

குறிஞ்சி நிலமதன் குன்றினில் குமரன்

 

தீதொன்றும் நேராது தமிழ்க்காத்த நக்கீரன்

ஆறுபடை அப்பனுக்கு தந்ததொரு ஆற்றுப்படை

வாயொன்றும் பேசாத குமரன் குருபரன்

கந்தனால் அருளிய கந்தர் கலிவெண்பா

 

நாவல்பழம் நீயுலுக்க நாலுப்பழம் தான்பொறுக்க 

நாவில்தமிழ் பழுத்த பாட்டிக்கு பாடமெடுத்த

பேரன்,- அப்பனுக்கே அறிவுத்தந்த சூரன்

நற்றமிழ் நானிலத்து பேணிவந்த வீரன்

 

சொல்லில் சொக்கட்டான் ஆடும் அருணகிரி

சொக்கிநிற்கும் தமிழுக்குச் சொந்தம் வேலன்

அண்ணாமலை மீதமர்ந்த தமிழ் அருணோதயம்

பண்ணால்மலை படைத்த பாவலன் காவலன்

 

ஐந்தொழில் புரிந்தவன் ஆயினன் இறைவன்

ஆறாம் தொழில் ஆற்றியவன் ஆறுமுகன்

தோன்றத் தோன்றும் தோற்றத் தொடுக்கம்

தோன்றாது மறையாது தொழில்புரி செந்தில்

 

வள்ளியை வலம்வந்த வாலறிவன் – தமிழ்

அள்ளிப் பருகும் காதலன்,- தமிழர்

குறிஞ்சிநில குலமகள் காதலின் சேவகன்

அருஞ்சுவை அமுதத்தமிழ் பேசும் சேயோன்

 

தன்னை எதிர்த்தவன் முதல்தான் எதிர்த்தவன்

தன்மை புரிந்து தயைப்புரிந்த மறவன்

தரணிக்கோர் தாய்மொழி ஈந்ததமிழ்க் குரவன்

பரணிக்கும் அடுத்து வளர்த்தப் பாலகன்

 

எதை அழிக்க வேண்டும்? – தாம்

எதை வளர்க்க வேண்டும்..!! ஞானம்

அதை கொண்டு பகை வென்று

கதை முடித்த கரவோன் கந்தன்

 

ஆறுமுகம் அவன் ஆற்றலின் வெளிப்பாடு

பன்னிரு கரம்தான் செயல்வழி சிறப்போடு

ஈறாறு விழிகள்தாம் அருளொளி புறப்பாடு

அமுதவாய் தேன்தமிழ் பாயும் களிப்போடு

 

உலகம் அவன் உலவும் இடமாகும்

கலகம் அவன் காரியக் காரணமாகும்

திலகம் அவன் திருநெற்றிக் கழகாகும்

சூலகம் அவன் திருவுருக் காணாப்பாகம்

 

படைத்தவன் படைப்பின் மூலம் மறக்க

அடைத்தவன் சிறையில் பாடம் எடுக்க

மூலத்தோடு சேர்த்து சூலத்தை அடக்க

காலத்தை கணித்தவன் எந்தன் கந்தன்

 

ஞாலத்தை எதிர்வரும் காலத்தை நேர்கொள்

ஞானத்தை நேரெதிர் பகைவரு பாவத்தை

ஞாயிரென பட்டொளி வீசும் கோபத்தை

ஞானவொளி தணிக்கும் தணிகை வேலன்

 

மூவகை ஆசைகள் மூழ்கடிக்கும் ஓசைகள்

நால்வகை குணங்கள் நாற்றமொடு வசைகள்

ஐம்பொறி வலையில் அமிழ்ந்த இசைவில்

துதித்தக்கை தூக்கிவிட மனம்நாட மயிலாடும்

 

எண்ணி யதுமுடிக்க எடுத்த வேலை

எண்ணிய படிநடக்க துதித்த வேளை

திண்ணிய மாய்துணை நிற்கும் வேலே

தண்ணிய மாய்தாங்கும் செந்தூர் வேலே..!!

 

ஞானப்பழம் தரநீயார் எனக்கு? நானே

ஞானப்பழம் உமக்கு,- மூத்தோர் முன்னே

கற்பித்தப் பாடம் காலம் அறியும்

அகந்தை இருப்பவன் அப்பன் என்றாலும்

 

மண்டியிட வைக்கும் மான உணர்ச்சியில்

தவறென்றால் தாய் தடுத்தாலும் விடாதவன்

தவம்புரிந்தும் தண்டணையில் தப்ப முடியாதவன்

விடைப்பகரும் வரைவிடாது கேள்வி தொடுப்பவன்

 

எவருக்கும் அடிபணியா வீரம் தரணியில்

அவருக்கன்றி வேரொருவர்க் கில்லை பாரீர்

தென்திசை தெய்வமாய் விளங்கி நிற்கும்

எண்டிசை அருகன் எங்கள் மாமுருகன்..!!

 

வள்ளல்கள் உடன்தமிழ் வளர்த்தோர் பேணி 

வள்ளலார் வழித்தமிழ் வாய்த்தோர் காணும்

அருள்வெளி உள்ளும் புறமும் பெருகவே

மருள்நீக்கி இருள்நீக்கி ஆளும் குருவே..!!

 

கற்றவர்கள் கற்றது கந்தனிடம் – தமிழை

பெற்றவர்கள் பெற்றதும் எம்மிறை காட்டும்

தமிழ்மறை தாமே தரணியில் எங்கும்

நிலவும் உலவும் உலகு காண்.


No comments: