தன்னை இறைத்தலும் தானாய் இறைதலும்
தன்மை விதைப்பதும்
தானே முளைப்பதும்
ஒருமை தோன்றி
பன்மை ஆவதும்
பொறுமை குன்றா
பொலிவில் நிலைப்பதும்
அருவில் அருகி
உருவில் பெருகி
அணுவில் மருகி
ஆற்றலில் விலகி
தூசுமாகி மாசுமாகி
துகளாகி துளியாகி
வளியென ஒளிந்து
ஒளியென மிலிர்ந்து
ஓங்கி ஒலிக்கும்
ஒலியென அலைந்து
வீங்கிப் பெருத்து
விண்ணை நிறைத்து
தன்னை தனக்குள்
தானே அடைத்து
தானடைந்த கூட்டினை
தானே உடைத்து
விதியென மதியென
வினையென துணையென
விளைவென தளையென
துளையென உலையென
வினாவென விடையென
வியப்பென விழிப்பென
வழியற்ற வழியில்
மொழியற்ற மொழியில்
தனிமையே தவமாக
தனக்கான தானுமாகி
வெறுமையே வெவ்வேறு
வேராகி உலவும்
பொருளாகி பொருளின்
பொருளுமாகி திகழும்
பெருவெளி இடைவெளி
இட்டு நிரப்ப
இடமும் வலமும்
இறுப்பது மாற்றி
இருளும் ஒளியும்
இருப்பதை காட்டி
நிகழ்வது நிகழும்
நிகழ்காலம் சுட்டி
நில்லாது கால்மாற்றி
காலமாற்ற நடனம்
சொல்லாது செல்வது
தன்னை கடந்து
செல்வதை சொல்லாது
மௌனக் கூத்து
சொல்லும் காலக்கவிதை
மனதை மயக்க
அசைக்க அசைக்க
அசையும் உயிர்
கருவின் கருவாகி
உருவின் உருவாகி
பொழியும் அருளாகி
ஒளிரும் அருவாகி
கழியும் பொழுதுகள்
காட்டும் காலச்சுவடு
கால்தடம் பதித்த
கருணை பதி.

No comments:
Post a Comment