Monday, December 14, 2015

பெருவெள்ளம்...!


இடிந்துதான் கிடக்கிறது - எங்கள்
வீடும் மனமும்...
ஈரத்தில்தான் இருக்கிறோம் - எங்கள்
உயிரும் உடமைகளும்... 

நாதியற்று நிற்கிறோம்...நாங்கள்
 

முகவரி கேட்காதீர்கள்.
நடுத்தெருவில் நிற்கவில்லை
நாங்கள் - ஏனெனில்
தெருவே இல்லை....

பிறகு எதைக் கொண்டு
அடையாளம் சொல்ல...


குளக்கரை கூட நீருக்குள் நிற்கிறது.
எங்கள் வாழ்விடம் தண்ணீர் மயம்.
எங்கள் உறைவிடம் கண்ணீர் மயம்....


வெள்ளைச் சட்டைப் போட்டவன் எல்லாம்
உதவி செய்வான் என்கிற நம்பிக்கை
எப்படியோ விதைக்கப்பட்டிருக்கிறது
எங்கள் மனங்களில்....


ஏங்கி ஏங்கி விக்கித்து கையேந்துகிறோம்
கடந்து போகும் வாகனங்களில் இருந்து
வெளியே ஏதேனும் வீசியெறியப் படுகிறதா..?
என்ற ஏக்கப் பெருமூச்சுடன்...


பின்னே ஓடி ஓடி முழங்கால் மூட்டு தேய்ந்தது
அலைகழிக்கும் காற்றுக்கு எங்கள் 

ஆடையை சரிசெய்வதா..? 
அலைகழிக்கும் வாகனங்களில் 
உணவுக்கு கையேந்துவதா..?
கரங்களின் போராட்டம்........


விடாது கொட்டித் தீர்க்கிறது மழை
விடாது மிரட்டிப் பார்க்கிறது பசி
நாங்களும் விடாது விரட்டுகிறோம்
வாகனங்களை....
எப்போது பசி தீரும்.


புறம்போக்குகளுக்கு நிவாரணம் இல்லையாம்
சொல்லுகிறான் ஒரு புறம்போக்கு.
ஊரே இல்லை என்ற உண்மையை
அவனுக்கு இடித்துரைக்க தெம்பு இல்லை
நாவறட்சியோடு நாங்கள்.....


முகத்தில் ஓங்கி ஓங்கி அடிக்கிறது மழை
என்ன பாவம் செய்தோம் நாங்கள்...
எவனோ செய்த குற்றத்துக்கு
தண்டனை பெறுகிறோம் நாங்கள்


நாங்கள் இழந்ததை பட்டியல் கேட்காதீர்கள்
நாங்கள் நாடிழந்தவர்கள்....
கடல் கரை மீறினால்......
சிங்களன் கொடி எங்கள்
கூரைகளில் பறக்கும்...

கட்டுமரம் நாங்கள் ஏறினால்
கடலுக்குள் சமாதி கட்டுவார்கள்


ஒட்டுக்கூரைக்கும் உலைவைக்க
அரிசிக்கும் இடமில்லாத எங்களிடம்
ஏகவசனம் பேசும் “அதிகாரமே”

உன்னை கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும்தான்
உதவி செய்ய வேண்டாம்...-
உபத்திரவம் செய்யாதே. 


எங்களைத் தேடி வரும்
எங்கள் உறவுகளின் நெற்றியில்
உங்கள் எச்சில்களை தடவி
எதையும் ஒட்டாதீர்கள்.


அவர்களோடு நாங்களும்
எங்களோடு அவர்களும்
இருப்பதை பகிர்ந்து

இன்புற்று வாழ்வோம்.

3 comments:

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

'பரிவை' சே.குமார் said...

அன்பின் நண்பா...

இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

Unknown said...

வெள்ளத்தில் நனைந்த தேகம் போல் என்மனம் உங்கள் பேனாமசியில் ஈரமாயிற்று.