Thursday, December 19, 2013

நிலைதிரிதல்...!



நீ நடந்த சுவடுகளில் - தொலைத்த
என் சுகங்கள் தேடுகிறேன், - விடைதெரியா
விளிம்புகளில் விழிகளில் வியப்பு குறி..!

ஆழ்மணல் துகள்களில் உயிர்த்திருக்கும்
அடிமனதின் வேர்த்தூவியில் உறிஞ்சுகிறேன்
கேட்பாரற்று கிடக்கும் நம் நினைவுகளை...

ஒழுகும் வாளியில் இறைக்கும் நீராய்
பழகிய நாட்களின் பழைய ஞாபகம்
புதிய துளிரின் மிருதுவாய் மனதில்..!

உதிர்ந்த இலைகளின் போதனைகளில் உனது
இன்றைய தத்துவ பிதற்றல்...! - எரிந்த
எச்சமென மிச்சமாய் இன்னும் என்னுள்..!

கொழுந்தை குதப்பி துப்புவது போல்
குழந்தை மனம் கிழித்த உன்பிழைகள்
அழுந்த புதைந்தன அழகிய மனதை அழுக்காக்கி..?

விழுந்த வடுக்களில் உனக்கான தடயங்கள்
வார்த்தைளின் வடிவம் மாற்றி கிடக்கின்றன
பொழுதுகள் யாவும் பழுதுகளான விழுதுகளாய்...?!

உடைந்த சிலையின் அழிந்த கோலம்
உணர்த்தும் உண்மையின் இருப்பில்
உயிர்வாழும் காலமென கரைகிறேன் உள்ளுள்...!

மாற்றம் அழகுதான் - நிறமாற்றம்..? குணமாற்றம்..?
நிலையின் சாயலாய் நிசத்தில் நாணலாய்
மனதை புறம்தள்ளும் மனித வாழ்க்கை...?

4 comments:

Thoduvanam said...

நிலை தெளிதல் ..

rajamelaiyur said...

//உடைந்த சிலையின் அழிந்த கோலம்
உணர்த்தும் உண்மையின் இருப்பில்
உயிர்வாழும் காலமென கரைகிறேன் உள்ளுள்...!
//

அழகான வரிகள் ...

திண்டுக்கல் தனபாலன் said...

/// பொழுதுகள் யாவும் பழுதுகளான விழுதுகளாய்... ///

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமை நண்பா..