Sunday, December 29, 2013

மெய்வெளி...!


சூழும் ஆழியுள் தாழும் நிலமும்
எழும் மலையும் இருந்த புலமும்
ஆளும் பண்பில் வாழும் குலமும்
காலம் இட்ட கோலம் மனிதம்

இயற்கை சந்தித்த இனமாற்றம் நாங்கள்
இயற்கையை சிந்தித்த இனமாகும் நாங்கள்
அறிவின் வேர்கள் வெடித்த இலைகள்
ஆயக்கலைகள் முடித்த இனம்தான் - ஆங்கோர்

அனுபவ தளிர்கள் துளிர்த்து தனிமம்
அறிந்து தவமும் புரிந்து மூளையில் மூலிகை
ஆவண கண்டு நின்றதவ முனிக்கோ
அவனியில் உலாவும் நிலமது நமது

புறமது சூழ்ந்த புறவெளி போர்த்திய
புறப்பொருள் புரிந்தே சுடரினில் சுழலும்
புலனுறு தோற்ற தொடரினில் ஆழ்ந்து
புலப்பட்ட புலமை புவியில் நமதே..!

அகநிலை ஆழ்ந்து சுகநிலை ஆய்ந்து
அன்புடன் அறமும் பண்புடன் வளர்த்து
உயிரியல் உயரியல் உணர்த்திய திறமை
செழித்த நல்நாடு செம்மொழி நாடே

பழித்த பேர்கள் எலாம் பணிந்து
உண்மை சாற்றும் ஓர்ந்த திருநாள்
புரிந்த நடனம் புவியுள் பொதிந்த
சுவடு தெரியும் சுவடிகள் வழியே

மறைந்தன எல்லாம் மறைந்தன அல்ல
மரித்திடும் மனிதா மனமதில் கொள்க..!!
உதிர்ந்தது உரமாம் உயிர்களுக் கென்றே
உரக்க பாடுதல் உமக்கும் நன்றே...!!

தெளிந்த நல்லறிவில் தேறிய கூட்டம்
திறம்பட செயல்கள் நிகழ்த்தியே காட்டும்
திகைப்புற வேண்டாம் குவலையத் தோரே..!
கூத்தினில் பாட்டன் குறித்தது இதுவே.

3 comments:

காயத்ரி வைத்தியநாதன் said...

தெளிந்த நல்லறிவில் தேறிய கூட்டம்
திறம்பட செயல்கள் நிகழ்த்திடட்டும். மிகசிறப்பான பதிவு..மறந்தவைகள் மறைந்தவகளாக மாறிடாது உணர்வுகளை தட்டி எழுப்பும் பதிவு...கவிதையில் வரலாற்றைக்கொணர்வது கவிஞனின் சிறப்பு..தொடர்ந்திடட்டும் தங்கள்முயற்சி..:)

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கவிதை...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் தோழா...