Friday, December 13, 2013

தொன்மையின் உண்மை...!



உகுத்ததும் பகுத்ததும் தொகுத்தவை தானா..?
உண்மையாய் தொகுத்தவை உண்மையாய் உகுத்தவைதானா..?
மூலம் தந்தவன் தந்த மூலத்தை
காலம் எதையும் புகுத்தாமல் பிடுங்காமல்

ஞாலத்தின் முன்வைக்க தொகுக்கும் மனம்
நியாயத்தின் பால்நின்று தக்கதொரு செயலாய்
வினையாற்ற எந்தவிதி தடையோ..? அறியேன்
விளக்க வரும் மதியும் மதியீனமாய்

புகுத்தலும் பொதுமை நழுவி அழித்தலும்
மெய்மை மறைத்து குழியில் புதைத்தலும்
ஆய்வியல் மொழியியலில் அடிக்கடி நிகழ்தல்
வரலாற்றின் சுவடுகளை வருங்கால சந்ததிகள்

அறியவொட்டா கொடுமையை அறிவினர் அறிவீனமாய்
செய்பிழை திருத்தி மெய்பொருள் செழிக்க
உழைமின்..! உழைமின்..!! என்றே உரக்க
குரலெடுத்து அறைகூவல் விடுக்கும் அவலம்

நமக்கு நேர்ந்த கொடுமை என்சொல்ல...?
அழியா தனவெலாம் அகத்தே கொண்டது
பொய்யா மொழிக்கே உரிமையான பிறப்பில்
உதித்தவன் உதிர்க்கும் மொழிகள் வெல்லும்

காலம் தாங்கி நிற்கும் நமது கருவூலங்கள்
கோடியான கோடியாம் எடுப்போம் தொகுப்போம்
வாடிய இனம் தழைக்க வையகத்தில்
நாடிய யாவும் நன்மையாய்.  

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை நண்பா....
வாழ்த்துக்கள்...

காயத்ரி வைத்தியநாதன் said...

உண்மையை எடுத்துரைக்க முயலும் உணர்ச்சிகரமான பகிர்வு..நன்றி..