Wednesday, December 11, 2013

மானுடமே கேள்..!

 

அண்டம் உடைந்த பூமியின் கண்டம்
அடைந்து உயிரின் கருவாய் பிண்டம்
உமிழ்ந்த தருவாய் பிறந்த மனிதன் - தமிழன்
வாழ்ந்த தடம் பேசுகிறேன் வையகமே கேள்

முற்றிய குரங்காய் நின்று நிமிர்ந்தவன்
முடி உதிர்ந்த மனிதனாய் எங்கும் திரிந்தவன்
கல் எடுத்து கல்லுரசி நெருப்பில்
கல்வி கற்றவன் தமிழன் - பூமியில்

சடை தரித்து உடை தரித்து - நீரின்
நடை மறித்து மடை திறந்து - நிலம்
திருத்தி பயிர் வளர்த்த கோமான்
பருத்தியும் பட்டும் கண்ட சீமான்

தமிழ் உடுத்தி தனை உயர்த்தி
தரணிக்கு மொழி தந்தவன் தமிழன்
தண்ணீரில் தன்நீர் கலந்து புவியின்
தரையெலாம் கரையேறி நின்றான் - தமிழால்  

திசைகள் எங்கும் தடம்பதித்து வாழ்வில்
இசைகள் மூலம் இன்பம் கண்டு
இலக்கணம் பேசிய இனத்தவன் - பொழிந்த
இசைக்கும் மொழிந்த மொழிக்கும் 

இலக்கணம் பேசிய இனத்தவன்  - பாரில்
திண்தோள் படை நடத்தும் மறவன்
திருந்திய கலைகள் கண்ட எளியன்
திருக்கோயில் சிலைகள் கொண்ட தலைவன்

பண்பட்டு பண்பட்டு பண்பாடு தந்தான்
புண்பட்டு புண்பட்டு நன்னாடு தந்தான்
பண்ணுக்கு பொன்தந்து புலமை போற்றினான்
பறவைக்கு ஆடைஈந்து இரக்கம் காட்டினான்

வாழ்வுக்கு பொருள் வகுத்து பொருளீட்டினான்
வழுக்காத நெறிவகுத்து வாழ்ந்து காட்டினான்
இழுக்கான பின்னாலே இறந்து காட்டினான்
தமிழன் மானம் இழுக்கான பின்னாலே

இறந்து காட்டினான் - புகழுடன் வாழ்தலே
இவ்வுலக வாழ்வென்று இருந்து காட்டினான்
செருவென்ற போதிலும் செருக்கென்ற ஒன்றை
தெருவில் வீசினான் உயர்பண்பால் தமிழன்

கொண்ட புகழ் கொண்டே கொடிநாட்டினான்
கொள்கை இகழ்ந்தார் தலை வென்றே
கொடி உயர்த்தினான் - அகமும் புறமும்
ஐந்திணையும் அறுசுவையும் முத்தமிழில்

சொல்கொட்டி கல்வெட்டி காவிய வரலாறு
இடங்காட்டி  இனங்காட்டி பெருவாழ்வு பெற்றான்
இடத்தாலும் பொருளாலும்  காலத்தாலும் இனத்தாலும்
தமிழன் அழியாதவன் கண்டுகொள் மானிடமே.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்லாடல் மிகவும் அருமை...

வாழ்த்துக்கள்...

காயத்ரி வைத்தியநாதன் said...

சிந்தனையை கவிச்சிற்பமாய் வடிக்கும் கவிச்சிற்பியின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஒரு சிற்பத்தை வடித்து தமிழனின் வரலாற்றை கண்முன்னே காட்சிபடுத்தியுள்ளீர்..மகிழ்ச்சி..வாழ்த்துகள்..சிற்பங்கள் தொடர்ந்து வடிக்கப்படட்டும்..:)

தமிழ்க்காதலன் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், தோழரின் தொடர் வாசிப்பும், தொடர்ந்து தரும் ஒத்துழைப்பு எம்மை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து கரம் கோர்த்திருப்போம் தோழரே.

நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க தோழி காயத்ரி, உங்களின் கவிதை வாசிப்பு பாராட்டுக்குரியது. தொடர்ந்த உங்களின் வாசிப்பில் நல்ல ஊக்கமளிப்பு இருப்பதை உணரமுடிகிறது.

நன்றி.