Monday, December 09, 2013

மெய் தோன்றல்...!



மடிக்கிடத்தி மாரழுத்தி புகட்டிய பால் 
புத்தியில் இன்னும் புதைந்துக் கிடக்கிறது..!
கூடைநீரில் குளிப்பாட்டிய உணர்வுகள் உள்ளுக்குள்
கூடையாய் இன்னும் குவிந்துக் கிடக்கிறது..!


தத்திநான் நடந்ததும் தவழவிட்டுப் பார்த்ததும்
ஒற்றைவிரல் பிடித்து ஒய்யாரமாய் நடந்ததும்
கற்றைக்குழல் திருத்தி காற்றில் அலையவிட்டதும்
குழைவாய்க் குழைந்து இதழில் ஊட்டியதும்

அசைபோடும் நினைவுகளில் அசைகிறேன் இன்னமும்
தனக்கான தெல்லாம் எனக்கான தெனவாக்கி
பாசத்தில் உயிர்வளர்த்த நேசத்தில் உடலுருகி
பொங்கும் உணர்வுகளில் கலங்கும் மனம்

எத்தனை இடர்களிலும் என்னை சுமந்து
அத்தனை சுமைகளும் அன்பால் சுமந்து
பித்தனாய் பேசவிட்டு பேயனாய் அலையவிட்டு
சித்தனாய் ஆக்கியப்பின் சீவனைப் போக்கினாய்

ஆருயிரில் அழியாச் சுடர் ஏற்றி
ஆழிசூழ் உலகு அறிவு காட்டி
ஆனந்த மெலாம் எமக்கே கூட்டி
ஆண்டுகள் கழிந்தன உமக்கே வாழ்வில்...!

இருளும் மருளும் மிரட்டும் வாழ்வில்
இன்று என்னை மிரள விட்டு
இருந்த விடமகன்ற தாயுமான எந்தையே...!
இறுதியுள் இருப்பாய் இருப்பாய் எம்முள்

கார்த்திகை உதித்த கார்த்திகையில் உயிர்த்த
கருணையுட் புகுந்த திருவின் உருவில்
வீரமும் மானமும் வாழ்வெனக் கண்ட
வள்ளல் வளர்த்த அன்பும் அறமும்

விதையாய் விழுந்து கிடக்கிறது – நாளை
விதியை விழுங்கும் வீரியத்தோடு...! வாழ்வெலாம்
நல்வழி காட்டி நடக்க நற்றுணையாய்
உள்வழி காக்கும் உயிராவாய்.
  






4 comments:

'பரிவை' சே.குமார் said...

இருளும் மருளும் மிரட்டும் வாழ்வில்
இன்று என்னை மிரள விட்டு
இருந்த விடமகன்ற தாயுமான எந்தையே...!
இறுதியுள் இருப்பாய் இருப்பாய் எம்முள்

-----

அருமையான கவிதை...
வரிக்கு வரி பாசம் பளிச்சிடுகிறது...

மாமாவுக்கான கவிதை என்று நினைக்கிறேன்...
அதற்குள் ஒராண்டு ஆகிவிட்டதா என்ன

மகேந்திரன் said...

ஆழமான பாச வரிகள்.
தந்தையாரின் பிரிவு ஏக்கம்
என்னையும் தொற்றிக்கொண்டது.
மெய் தோன்றலாய் உங்கள்
உடன் பயணிக்கட்டும் தந்தையாரின் நினைவலைகள்.
அருமையான ஆக்கம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை…

வாழ்த்துக்கள்…

காயத்ரி வைத்தியநாதன் said...

தாயுமானவனுக்கு கவிஞன் பாசத்தில் ஓவியமாய் தீட்டிய வரிகள் நிகழ்வுகளை கண்முன்னே காட்சியாய்த் தெரியவைக்கிறது...
//வாழ்வெலாம்
நல்வழி காட்டி நடக்க நற்றுணையாய்
உள்வழி காக்கும் உயிராவாய்.// அனைத்து வரிகளும் அற்புதமாய்..:)