Monday, August 23, 2010

"சுதந்திர தேசம்?!"


என் இந்திய தேசத்து சகோதர, வணக்கம். வெற்றிகரமான 64 வது சுதந்திர தினத்தை கொண்டாடிமகிழ்ந்திருப்பாய். கோட்டை கொத்தளங்களில் கொடி ஏற்றி பார்ப்பவர் பரவசப்படும் அளவுக்கு எமது அரசியல்வாதிகள் அரங்கேற்றிய சுவாரசியங்கள் பார்த்து புலகாங்கிதம் அடைந்திருப்பாய். அன்றைய தேதியில் தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்ந்து அசத்தலான நிகழ்ச்சிகள் எது எதுவென? பட்டியலிட்டு பார்த்திருப்பாய்..!. பொதுசேவை செய்யும் புதுப்புது நடிகைகள், பிழைப்புக்கு வழி தேடும் பழைய நடிகைகள், இவர்களின் அசத்தலான பேட்டிக் கேட்டு அசந்து போயிருப்பாய். உனக்கு பிடித்த நடிகனின் அடுத்த படம் வெளியாகும் தேதி, அல்லது படபூஜை பார்த்து ரசித்து லயித்து இருப்பாய். இன்றைய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என உன்னை "மயங்க வைக்கும் மத்தாப்புக்கள் " பார்த்து மகிழ்ந்திருப்பாய். பட்டிமன்றம், பாட்டு மன்றம் இவற்றொடு வழக்கமான உன் "பாட்டில்" மன்றத்தையும் அரங்கேற்றி ஆனந்தமடைந்திருப்பாய்.

சுதந்திரம் எதுவென சொல்லப் படாமலே சுதந்திர தினத்தை கொடியேற்றிக் கொண்டாடும் ஒரு அரசு. சுதந்திரத்துக்கு தொடர்பில்லாதவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்கள், "புடவை கட்டத்தெரியாதவர்களை மேடைக்கு அழைக்கிறோம்" என அப்பட்டமாய் கூவாமல், அமைதியாய் செயல்படுத்தி வரும் நம்முடைய "தமிழ்ச்" சேனல்கள், தமிழுக்கும், தமிழனுக்கும் செய்யும் தொண்டுகள் சொல்லி மாளாது.

நாலு பேரு பார்க்க, நாலு பேரு கைத்தட்ட, நாம எப்படி வேண்டுமானாலும் கூத்தடிக்கலாம். அதுதான் நமது சுதந்திரம் ...என எண்ணித் திரியும் ஒரு கூட்டம். கருவில் இருக்கும் குழந்தைக்கும் "சுயநலம்" சொல்லித் தரும் ஒரு கூட்டம்,

தமிழ்நாட்டில்
பிறந்துவிட்ட கொடுமைக்காகவே, தாய்மொழியை தவிர, தனக்கு சம்மந்தமில்லாத மொழிகளை தன் பிள்ளைகளுக்கு திணிக்கும் பெற்றோர்கள், சொந்த மண்ணில் சுயம் தொலைத்து வாழ சொல்லித் தரும் ஆங்கிலப் பள்ளிகள். ஏன்? எதற்கு? என தெரியாமலே கலாச்சாரம் இழந்து, இதுதான் "நாகரீகம்" என தன் எண்ணங்களுக்கு தோதான, தன் தனிப்பட்ட ஆசைகளுக்கு இடையூறு செய்யாத ஒன்றே தன் கலாச்சாரம் என கண்மூடியாய் வாழும் இன்றைய தலைமுறை.
இந்த சமூகத்தை வழிநடத்துவதாய் எண்ணிக்கொள்ளும் சினிமாக்காரர்கள், இவற்றிற்கு மத்தியில் ஒரு குறையும் இன்றி உன் "சுதந்திரம்" கோலாகலமாய் கொண்டாடப் பட்டிருக்கும்.

63
ஆண்டுகள் முடிந்த பின்னும் இந்த தேசத்தின் தெருக்களில் "குழாயடி சண்டை நின்றபாடில்லை". உடை உடுத்தாமல் வெற்றுமேனியாய் அலைபவர்கள் இருக்கிறார்கள். இருக்க இடம் இல்லாத எண்ணற்ற கோடி பேர் இருக்கிறார்கள். சமூக குற்றங்கள் குறைவின்றி அரங்கேறி வருகின்றன. இரவு வேளைகளில் இருட்டைத் துழாவும் கிராமத் தெருக்கள் இருக்கின்றன. பிச்சை எடுப்பது தொழிலாக்கப் பட்டு அதற்கு சங்கம் வைக்கும் அளவுக்கு சமூகம் முன்னேறி இருக்கிறது. தசைவிற்பது சட்டப் படி நியாயமாக்கப் பட்டு தனித்த தொழிலாக்கப்பட்டு விட்டது. கல்விச் சாலைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு கொள்ளை அடிக்கும் கூட்டணி வெற்றிப் பெற்றிருக்கிறது. மதுவிற்பனை அரசாங்க மயமாக்கப்பட்டு அதிக இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. சட்டம் இங்கு "சிறைச்சாலைக்குள்" ஜாமின் வேண்டி மனுத்தாக்கள் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் தனித்த மாண்புகள் தொலைக்கப்பட்டு சில பெருங்குடி மக்களின் கைப்பிள்ளையாய் இந்த அரசாங்கம் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய பிரஜையின் பிரசவம் முதல் சுடுகாட்டு சவ அடக்கம் வரை இங்கு இலஞ்சம் இல்லாத துறை எதுவுமில்லை. சக மனிதனும், சாமானியனும் இங்கு சகசமாய், சரிசமமாய் மதிக்கப் படுவதில்லை. "சட்டம் எல்லோருக்கும் பொது" என சட்டத்தில் மட்டும் சாகாமல் இருக்கும் "சமரசம்".

இந்த தேசம் முழுக்க பொதுப்பணித்துறையில் இலஞ்சம் வாங்காத நேர்மையான துறை இல்லை. மண் வெட்டுவதில் இருந்து, மனை கட்டுவது, அணைக்கட்டுவது, பாலம் கட்டுவது, சாலை அமைப்பது, குடிநீர்க் குழாய் அமைத்தல், ஏரி, குளம், வாய்க்கால் வெட்டுவது, சுடுகாட்டுப் பாதை அமைப்பது வரை இலஞ்சம் அளவுக்கு மீறி வளர்ந்து நிற்கிறது. அன்னக்காவடியாய் அரசியலுக்கு வந்தவர்கள், ஐந்தாறு ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதிகள். இங்கு வருமான வரித்துறை என்ன செய்கிறது? புரியவில்லை. ரொட்டிக்கடைகாரனிடம் வரிக்கட்ட சொல்லி வற்புறுத்தும் இவர்கள் கோடிகளில் கொள்ளை அடிப்பவனிடம் எதுவும் பேசாதது ஏனோ தெரியவில்லை?

திருட்டை பெரிய அளவில் செய்தால் அது இந்த தேசத்தில் "ஊழல்" என அங்கீகரிக்கப் படுகிறது. மந்திரிகளை கேட்டால், மக்கள் சரியில்லை என்பதும், மக்களை கேட்டால் மந்திரிகள் சரியில்லை என்பதும் இங்கு வாடிக்கையாகிப் போனது. யாரும் பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் தட்டிக்கழித்து, "தப்புக்கு தப்பே சரி" யென தப்பாகிப் போனது என் தேசம்.

இங்கு சாமானியனுக்கு வளையாத சட்டம் இருக்கிறது. இங்கு வலுத்தவன் வளைக்காத சட்டம் இல்லை. காசு கொழுத்தவன் தப்பிப்போக சட்ட ஓட்டைகளுக்கு பஞ்சமில்லை. நியாயம் கேட்பவனுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இங்கு எதையும் மதிக்காதவன் "பெரிய மனிதன்" . வழிவகை தெரியா அப்பாவிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாய்???. "வலுவில்லாத சட்டத்தால் வலுதது விட்ட குற்றம்" ஆலமரமாய் வளர்ந்து விட்டது. கொலை கூட சாதாரணமாக செய்யமுடிகிறது. செய்துவிட்டு சகஜமாய் வாழ முடிகிறது. அவனது குற்றத்துக்கான தண்டனை சட்டம் கொடுக்கும் முன்பே அவன் இயற்கையாய் இறந்துவிடுகிறான்.

நீதிக்
கேட்டவன் பேரன் காலத்தில் நீதி வழங்கப் பட்டால் அதற்கு பெயர் "நீதியா?". "செத்தவன் கை வெற்றிலைப் பாக்காய்" சட்டமும், நீதியும் சாமானியன் விசயத்தில் செயல்படுகிறது.

இலட்சம் பேரை கொன்றுவிட்டு எளிதாய் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு தப்பிசெல்ல முடியும். உன்னிடம் பணம் இருந்தால்.,,, இந்த தேசத்தில் உன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆள் தலைமறைவு என வழக்கை கிடப்பில் போட்டுவிட முடியும். நாடாளுமன்றத்தில் உன்னைப் பற்றி எவரும் கேள்விக்கேட்காதவரை உன்னை எவரும் சீண்ட மாட்டார். நீயாக வந்து சரணடைந்தால் கூட "உண்மையான குற்றவாளியை நாங்கள் ஏற்கனவே பிடித்து விட்டோம்" என உன்னையே அதிர்ச்சிக்குள்ளாக்குவார்கள். அப்படி பட்ட வசதிகள் எல்லாம் இந்த தேசத்தில் உண்டு.

"
அடிப்படை தேவைகளுக்கு அல்லாடிகொண்டிருக்கும் பெரும்பான்மை கொண்டது இந்த தேசம் என்றால், 63 ஆண்டு கால சாதனை என்ன? பட்டினி சாவு பல மாநிலங்களில் இன்னமும் இருக்கிறது என்றால், இங்கு விளைந்த முன்னேற்றம்தான் என்ன?".

"
வாங்கத்தெரிந்தவன் அரசியல்வாதி, அவனுக்கு கொடுக்கத் தெரிந்தவன் அதிகாரி". என் இனமான சொந்தங்களை கொன்று குவித்துவிட்டு, அப்படி கொன்ற கொடுங்கோலன் இங்கு வந்து இன்ப சுற்றுலா செய்ய இட வசதி செய்து தரும் கொடுமையான மாற்றாந்தாய் மனப்போக்குடைய அரசாங்கத்தை இந்த தேசம் தவிர, உலகில் வேறு எங்கும் காண முடியாது.

மருத்துவம் இங்கு எப்படி வியாபாரமாக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?. எல்லாவற்றிற்கும் விலை வைத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள். "காலாவதியான மதுபுட்டி முதல், மருந்து புட்டி வரை".??? இதில் எங்கே என் தேசம் ஒருமைப்பாட்டை அடைந்திருக்கிறது? திருடுவதிலா?? கொள்ளை அடிப்பதிலா??

வெளியூர்
திருடனை விரட்டி அடித்துவிட்டு, உள்ளூர் திருடனை உலாவர விட்டிருக்கிறோம். இதில் எந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாக நாம் பெருமை கொள்ளத் தோழா?.

ஒரு பக்கம் நம் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நமது மொழி "செம்மொழி" யாகி கோடிக்கணக்கில் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. எனக்கொரு சந்தேகம் நண்பா, தமிழை வழக்கில் சுத்தமாக பேசிக்கொண்டிருக்கும் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழே பேசாத "தமிழ் நாட்டில்" தமிழுக்கு விழா எடுக்கிறார்கள். ஒரு இனம் அழிந்தால் அந்த இனத்தின் மொழியும் அழியும் என்பதுதானே ஆன்றோர் வாக்கு. அப்படி இருக்க.....அழிந்துவரும் இனத்தின் மொழி எப்படி வளரும்??? ஒரு தனி மனிதனை சார்ந்ததா மொழி என்பது???.

1947
ல் உனக்கு அளிக்கப் பட்டிருந்த "சுதந்திரம்" ஆங்காங்கே பிடுங்கப்பட்டு விட்டது தெரியுமா உனக்கு? ஆட்சியில் இருப்பவனை எதிர்த்துப் பேசினால், பேசியவன் பெயர் "தீவிரவாதி". தவறுகளை சுட்டிக்காட்டி தர்ணா செய்தால் அவன் "தேசத் துரோகி". இலஞ்சம் கொடுக்க மறுப்பவன் "குற்றவாளி". ஊழல் செய்தவன் "தேசியவாதி". அதற்கு துணைப் போனவன் "காந்தியவாதி". கொலை செய்தவன் "அவதாரம்". அதைப் பார்த்தவனுக்கு "அபதாரம்". தேசியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் "மாறுதல் தராத தேர்தல்"....மறுபடி....மறுபடி..?!.
இந்த சுதந்திரம் இருந்தால் என்ன??? போனால் என்ன???.

No comments: