Thursday, January 08, 2026

"இறை..!! “


தன்னை இறைத்தலும் தானாய் இறைதலும்

தன்மை விதைப்பதும் தானே முளைப்பதும்

ஒருமை தோன்றி பன்மை ஆவதும்

பொறுமை குன்றா பொலிவில் நிலைப்பதும்

 

அருவில் அருகி உருவில் பெருகி

அணுவில் மருகி ஆற்றலில் விலகி

தூசுமாகி மாசுமாகி துகளாகி துளியாகி

வளியென ஒளிந்து ஒளியென மிலிர்ந்து

 

ஓங்கி ஒலிக்கும் ஒலியென அலைந்து

வீங்கிப் பெருத்து விண்ணை நிறைத்து

தன்னை தனக்குள் தானே அடைத்து

தானடைந்த கூட்டினை தானே உடைத்து

 

விதியென மதியென வினையென துணையென

விளைவென தளையென துளையென உலையென

வினாவென விடையென வியப்பென விழிப்பென

வழியற்ற வழியில் மொழியற்ற மொழியில்

 

தனிமையே தவமாக தனக்கான தானுமாகி

வெறுமையே வெவ்வேறு வேராகி உலவும்

பொருளாகி பொருளின் பொருளுமாகி திகழும்

பெருவெளி இடைவெளி இட்டு நிரப்ப

 

இடமும் வலமும் இறுப்பது மாற்றி

இருளும் ஒளியும் இருப்பதை காட்டி

நிகழ்வது நிகழும் நிகழ்காலம் சுட்டி

நில்லாது கால்மாற்றி காலமாற்ற நடனம்

 

சொல்லாது செல்வது தன்னை கடந்து

செல்வதை சொல்லாது மௌனக் கூத்து

சொல்லும் காலக்கவிதை மனதை மயக்க

அசைக்க அசைக்க அசையும் உயிர்


கருவின் கருவாகி உருவின் உருவாகி

பொழியும் அருளாகி ஒளிரும் அருவாகி

கழியும் பொழுதுகள் காட்டும் காலச்சுவடு

கால்தடம் பதித்த கருணை பதி.  

 

 

  

 

 

  

Sunday, January 04, 2026

எதிர்கொள்..!!

 


எண்ணம் எழுத எடுக்கும் முயற்சி

ஏறுதிசை  ஓடம் இயக்கும் முயற்சி

மாறுதிசை மாறாது இலக்கு நோக்கும்

எதிர்நீச்சல் பயணம் எகிறி அடிக்கும்

 

அலைகளின் ஆட்டம் நதியில் மனதில்

ஆற்றலின் தேவை அதிகம் கரையேறும்

காலம் வரை துடிப்பும் துடுப்பும்

தடுப்பதை தாண்டும் தவிப்பும் தேவை

 

நடப்பதை கடப்பதை அடுத்தடுத்து நடப்பதை

நோட்டம் நோக்கம் அறிந்து தெளிந்து

ஏற்றம் இறக்கம் மாற்றம் யாவும்

புரிந்து புரியும் வினைதான் வித்தை

 

அலைவது கலைந்து அறிவது தெளிந்து

சுழல் சூழல் உணர்ந்து உள்வாங்கி

தள்ளிதள்ளி தள்ளாட்டம் தடுமாற்றம் தவிர்த்து

துள்ளியெழும் எண்ணம் அலை மோதும்

 

வரிவரியாய் வரிகள் தொடரும் ஆற்றல்

நீரலை நீந்தும் எண்ணம் ஏந்தும்

மனம் குவியகுவிய பேரறிவின் பெருநெருப்பு

பற்றி எரியும் தாக்கம் பக்கமாய்..!!

 

களமறிந்து கலம் செலுத்தும் கவிதை

தளமறிந்து நீரின் தாளமறிந்து காற்றின்

குணமறிந்து பரிசல் காப்பது கடமை

பரிசில் பெரும் புலமை வாழ்க..!!