Tuesday, February 24, 2026

குமரித் தமிழர்..!!


நெடுங்கடல் கொள்குமரிக் கண்டமது வான்பார்த்த

காலமதில் வாழ்ந்து செழித்து வளர்ந்த

கோலமிகு குழாமவர் தான்பெற்ற புகழ்

கோலம் அழிந்த காலம் கூட

 

கொடுந்துயர் வருத்த வாழிடந்தேடி அலைந்தார்

தொலைந்தார் தம்தொப்புள் கொடியுறவு தொலைத்தார்

தொலைவு தொலைவாக தொடர்பு அறவே

அடையாள எச்சமிட்டார் ஆங்காங்கே மிச்சப்பட்டார்

 

தீவுகள் தாங்கும் திடல்களில் தங்கி

கூட்டம் கூட்டமாய் குறுகிப் போனார்

நாற்பத்தி யெட்டுத்தீவுகள் தொட்டு நடந்தவை

நூற்பத்தி பதிவுகள் இட்டார் செந்தமிழர்

 

கலம் கண்டு கலமேறி காலம் தாவி

நிலம் கண்டு நிலம் கண்டு நீண்டு

புவியின் குணம் கண்டு மொழிந்தார்

நிலவின் நிலை கண்டுலவி வாழ்ந்தார்

 

அலைவழி அலைந்தார் புவியை அளந்தார்

செவ்வழிக் கண்டார் செம்மொழி கொண்டார்

அவ்வழி வாழவே அறவழி நின்றார்

ஆழியுள் மூழ்கிய கடுந்துயர் வென்றார்

 

வாழிடம் வேறிடம் ஆனபோதும் ஊருடன்

வேருடன் தடம் பதித்தார் தமிழில்

பெயருடன் தாம் பெயர்ந்த ஊருடன்

இட்டார் இடுகுறி தம்மினக் கொள்குறி

 

குன்றுகள் தோறும் குழாம் குழாமிட

தமிழ்குரவர் வரைந்த வரலாறு வாழ்கிறது

குன்றின்மேல் கோடுகளாய்..!! நின்று

நிலைத்தவர் நெடுந்தமிழ் பாரில்..!! பாரீர்..!!

 

கடலுடன் மல்லுக்கட்டி கல்லுடன் சொல்வெட்டி

அல்லும் பகலும் அருந்தமிழ் சபைக்கூட்டி

நிலையற்ற வாழ்வில் நிலைபெறும் வழிக்காட்டி

சென்றார்..! நீயும் நானும் வாழ்ந்திடவே..!!