Saturday, January 03, 2026

மானுட(ப், ம்) பிழை

 


தான் உடைக்கும் மண்பாண்டப் பொருளாக

பூமியை எண்ணும் மானுட மடமை

பேசும் தமிழ்மகன் மனதின் மடல்

உயிர்களின் உலகம் காக்க..!!

 

ஆழியும் அதில் சேரும் ஆறும்

பாழியும் அதில் சேரும் நீரும்

காடும் முகடு முட்டும் கோடும்

கார்முகில் சுமக்கும் காற்றும்

 

வளைந்து நெளிந்து அசையும் நதி

செல்லும் கரை யெங்கும் சோலையும்

குன்றும் பாலையும் நிலமும் – காணும்

கதிரும் காலையும் மாலையும்

 

இரவும் பகலும் – இதில் எதுவும்

நீயோ நானோ நாமோ செய்ததில்லை

புல்லுடன் பிறந்த பல்லுயிர்ப் பெருக்கம்

பல்லுடன் பிறந்த ஊனுடம்பு

 

தின்றதை தின்று நாள் நகர்த்தும்

நல்வழி ஒன்று இருக்க நாம்

கொன்றதை கொன்று தின்னும் கொலைவெறி

பயின்ற பழக்கம் பாழுடம்பு

 

சிதைக்கும் சிறுமையை நிறுத்தாத வாழ்க்கை

சிதைக்குப் போகும்வரை சிற்றுடம்பு,- வதைத்தல்

வாட்டுதல் வாடுதல் என்பதே வாழ்க்கையாய்

நாட்டுதல் தான்மானுட மகிமை

 

வழிவழி காத்த மரபொன்று நமக்குண்டு

வாழையடி வாழை கற்றுத் தரும்

பரம்பரை பாடம் தெரியுமா உனக்கு?

பரன்-பரை அறிவை தேடு..!!

 

எவ்வுயிரும் மண் திருடி விற்றதில்லை

மலைகள் உடைத்து தின்றதில்லை – நதியை

தடுத்ததில்லை கரையை உடைத்ததில்லை விதியை

மாற்றிமாற்றி இயற்கையை சரித்ததில்லை

 

நிலம் நீர் விற்று இன்று

நீயும் உடல் உறுப்பு விற்று

வாழும் இழிநிலை வந்தது ஏன்..?

வாழுங்குடி கெடுத்து பாழுங்குடியானாய்

 

செஞ்சோற்றுக் கடன் செய்யும் பல்லுயிர்

செய்யக்கூடா செயல் செய்யும் மானுடம்

உய்யகூடா வழியில் உய்ய நினைத்த

வினையின் வினைப் பயன்

 

உன்னிலிருந்து உன்னை உருவாக்க முடியா

உன்னை உருவாக்கவா இத்தனைப் போராட்டம்

தன்னை இழக்கும் தன்மை அடைந்த

உயிர்கள் வாழாது வீழ்ந்துப்போகும்

 

கருவற்றவன் கருவூட்ட முடியாது – காலம்

கருப்பையில் கை வைத்து விட்டது..!! தன்னால்

தாய்மை அடையாத பெண்மை பிழைப்பதெப்படி..?

இனியேனும் பிழை நிறுத்து.