Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, July 05, 2026

”ஞான வாழ்வு..!!”


 ஆலமர் ஆலமர விழுதுகள் விழுந்து மண்ணில் நுழைந்து

தழைத்துச் செழித்து துளிர்த்துச் சிரித்து பூத்துப் பழுக்கும்

காலமது கனியும் காலம்வரை காத்துக் கிடக்கும்,- உயிரது

பிழைத்து நிலமதில் உய்த்து வளம்பெற நிலை பெறும்

 

தாளமர் தயையும் தானுறும் நிலையும் தேனினில் சுவையாம்

கோளமர் நிலையும் மீன்பெறும் கதியும் தான்பெறும் வழியாம்

சூலமர் உறையும் சூழ்வினை நிறையும் வாழ்வென விரியும்

நூலறி வுடையோர் வாலறி வழியறி மேல்மதி கதியாம்

 

ஆழ்நிலை அறிந்து சூழ்நிலை உணர்ந்து வாழ்நிலை தெரிந்து

தாழ்நிலை மறித்து பாழ்நிலை கெடுத்து கீழ்நிலை தவிர்த்து

வாழ்வினை அடையும் வழியினை அடைக்கும் மடையது திறக்கும்

ஊழ்வினை உடைந்து உயர்நிலை அடைந்து உய்த்தலே அறிவாம்

 

அச்சில் அமர்ந்து தச்சில் இணைந்து வட்டில் சுழலும்

ஆரத்தால் அளந்து உச்சியில் நிறுத்த விட்டம் சுமக்கும்

பாரத்தால் சமநிலை சரியாக தூரத்துப் பயணம் களிக்கும்

மூச்சில் உணர்த்தி முழுவீச்சில் இழுக்கும் காளைக்கு இனிக்கும்

 

அன்பில் ஆருயிர் தோய்ந்து என்பில் இறைந்து உறையும்

நுண்மான் நுழைபுலம் நம்மில் நயமுற வாய்ந்த துறையும்

எண்ணம் எழலும் திண்ணம் தெரியநற் சிந்தனை முறையும்

மனமதில் சுழலும் வண்ணம் பொலிவுற செய்கை நிறையும்

 

மாண்புற வாழ்தல் மானுடம் மகிழ்தல் ஊனுடல் வழியாம்

கேண்மின் வீழ்தல் விதியா மேன்மைகள் அறியா மதியாம்

ஊண்வழி உயரும் ஊனுயரம் கட்டுதல் உணரா மடமையாம்

வீண்பழி சுமந்து உழலும் முடமது விலக்கல் நல்ஞானமாம்

 

பட்டறியும் பலன் பகுத்துத் தொகுத்து பாடமாக நல்கும்

பாமரன் பாடல்கள் பாய்மரம் செலுத்தும் வழியாய் நிற்கும்

பல்வழி அலைந்து பால்வழி அளந்து ஞானப்பால் ஊட்டும்

பகலவன் புகலும் நல்வழி ஊழ்வினை உதறல் உத்தமம்            

          

Tuesday, September 17, 2019

”ஆசை....!”



கல்லை முத்தமிட கண்ணாடி ஆசைப்பட
கல்லின் கைப்பட்டு நொருங்கும் கண்ணாடி
சொல்லும் அதுபோலாம் சொல்லும் இடமும்
சொல்லை கேட்ட மனமும்

ஒற்றை இதழ் தாமரைக்கு முத்தமிட
ஏரித்தாமரை மேல் ஏனாசை வந்தது..?
பூரித்த மனதோடு பூவென்ற நினைப்போடு
ஆழமறியா ஆசை ஏன்..?

பூக்களின் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கும்
நாறுக்குத் தெரியுமா மலர்களின் மணம்..?
வேர்களின் கண்ணீர் வெளியே தெரியாது
ஊரார் முன் மரமாக…!

கொலை ஆயுதம் செய்பவன் இதயமறியாது
கொல்லப்படுவது இன்னொரு இதயம் என்று..!
அள்ளக்குறையா அமுதம் ஆறாய் ஓடினாலும்
முகரத் தெரியாதவள் குடம்காலி…!

ஆசை ஒழுகும் ஓட்டை பாத்திரம்
ஆயுளுக்கும் பழகினாலும் ஆசை நிரம்பாது…!
பாயில் படுத்தும் புழங்காத இடத்துக்கு
அடங்காத மனதால் உறக்கம்பாழ்…!

சிக்குண்ட வலைக்குள் தான்சிலந்தி வாழ்கிறது
சிக்காமல் சிக்கவைக்கும் கலையை கற்றதனால்…!
சிக்கிக்கொண்ட சிற்றுயிர் கதறி அழுகிறது
சிக்கல் எடுக்கத் தெரியாமல்…!

நாணல்கள் நதிக்குள் மூழ்கியும் வாழும்
நாணமும் நளினமும் பூசியப் பெண்போல்
அழகுக்கு ஆயுள் குறைவென அறியாது
பழகும் மனதுக்கு அறிவுப்பாழ்…!

கூண்டுக்குள் புழுதான் பறக்கும் பட்டாம்பூச்சியும்
கண்டுகொள் நல்மனமே..! மழைக்கால வானம்
கருப்புதான்..! மனிதரின் மனமும் காண்..!!
ஆசைக்குள் ஆசையை புதைத்துவிடு…!!

Sunday, September 15, 2019

”மூலம்...!”



ஊழியுல ஊழ்தனை உயிர்நாடி உற்றகால்
தாழியுள் சூழ்வினை தனைநாடி பெற்றதால்
ஆழ்நிலை உறக்க மேருமலை தண்டில்
தாழ்நிலை உய்யும் தருணம் கூண்டில்

தூசுகள் திரண்டுத் துலங்குத் தூலம்
ஆழியுள் அமிழ் துயில் கோலம்
நாழியால் அளந்து மோழியாய் பிளந்து
கோழியாய் கூவும் கூற்றத்து – கூடும்

மலம் மூன்றுள் மயங்கு நிலைகொள்
மனம் வந்துட் புகும் கலம்கொள்
நாளது சுழலும் கோளது ஆட்படும்
பூணது பூண்டுளம் உய்த்துத் துய்த்திட

திறவுகோள் தொலைத்து பூதத்துள் புகுந்த
அரவம் அலைந்து அமிழ்ந்து தொலைந்து
மறதியுட் புகுந்த மாய்மாலத் தொடர்ச்சி
உறவுள் பிணைந்து ஊராய் விரிந்து

தானாய் நிலத்துள் நீந்தும் மீனாய்
காடும் மேடும் கடந்து நாடாய்
ஓடும் ஆறாய் பெருகும் – ஊழின்
கூடும் கூடல் தேடும்.



Tuesday, September 10, 2019

”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…? (சந்திரயான்)




காரணப் படைப்பு நான் – புவியில்
காரணப் பெயர் பெற்றேன் வளர்ப்பில்
கண்ணும் கருத்துமாய் சிவனால் உயிர்த்து
கைகளில் தவழ்ந்த குழந்தை தான்

மண்ணும் மாந்தரும் பயனுற நான்
விண்ணில் பறக்க…! வியந்த விழிகளில்
கலந்த கனவு நான் – என்னோடு
கலந்தே பயணித்த உறவுகள் ஆயிரம்

சுற்று வட்டப் பாதையில் நான்
சுற்றி வந்த வேளையில் – இளையோர்
காதலில் சுற்றியது என் மீதுதான்
விட்டுவிலகி சற்றே நான் சந்திரன்

நோக்கி நகர்ந்தாலும் – உற்ற காதலோடு
விடை கொடுத்த உறவுகளின் கனவை
சுமந்தே திரிந்தேன் அவர்களின் கண்மணியாய்
விண்வெளியில் விடியல் தேடிய மின்மினியாய்

பிறந்தகம் விட்டுப் புகுந்தகம் புகுந்த
பருவப்பெண் போல்தான் நானும் இங்கே
சந்திரனை வந்து சேர்ந்தேன், - என்னுள்
உருவான கருவினைச் சுமந்து - அம்புலி

மடியில் அழகாய் இறக்கி வைக்க
இடம்தேடி இடவலம் அலைந்தேன் – நிலவின்
மடியில் கிடத்தி நெஞ்சம் நிமிர
கொஞ்சம் நேரமானது – இடுப்புவலி வந்தவளாய்

இங்கும் அங்கும் அலைந்தேன் முடிவில்
இதமாய் பதமாய் பெற்றேன் – பிரிந்தேன்
பிறந்தன ஒன்றுக்குள் ஒன்றாய் இரண்டு
பிள்ளைகள் - மூத்தவன் ”விக்ரம்” விழித்தான்

உள்ளுக்குள் உறங்கும் பிள்ளை ”பிரக்யான்”
உலகம் வியக்க சிறகு விரித்து
ஒய்யாரமாய் பறந்தான் பாரீர்…! பாரீர்…!!
தந்தை கைப்பிடித்து நடைப்பழகும் பிள்ளை

வலம்வரும் அறிவியல் எல்லை - சந்திரன்
மடியில் கிடத்தும் வழியில் பயணம்
முடிவில் முடிவை நோக்கிய வழியில்
சற்றே சறுக்கி விழுந்தான் நிலவில்..!

ஒட்டகச்சிவிங்கி பெற்ற பிள்ளையாய் - முடிவில்
மானுடம் தந்த மகனை மடியில்
தாங்கும் நிலவின் தாய்மை பெரிதே..!
ஏங்கும் இதயம் எத்தனை எத்தனையோ..?!

பெருமையும் பொறுமையும் சுமந்தபடி சுற்றுகிறேன்
நல்லோர் காதில் நற்செய்தி சொல்லவே..!
அழாதப் பிள்ளையை தலைகீழாய் தொங்கவிட்டு
தலையில் மார்பில் தட்டித்தட்டி உசுப்பும்

வித்தை ஒன்று நிகழ்ந்துக் கொண்டிக்கிறது
விடாது முயன்று மூச்சுவிட வைக்கும்
வித்தையில் உயிர்த்தெழ இன்னும் சிலநாள்…
”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!?”.






விழி...!



விண் உலாவும் விண் மீன்கள்
விழி குளத்து நீந்தும் மீன்கள்
விழித்து விழித்து இரவை அளக்கும்
வினாடி கழியும் காலம் பொழுதாக

நில்லாது வேறெங்கும் செல்லாது தொங்கும்
தூலங்களும் தூலங்களின் மூலங்களும் தாங்கும்
தாளங்களும் அதிர்வுரும் அண்டமும் அதிலூரும்
கோலம் அலைவுறு காலமும் நிகழ்த்தும்

உருவுருச் செயலும் பதிவுற பொலிவுரு
மறுவுரு மாற்றமும் நிகழ்வுற சுழலும்
கருவுரு காலம் கனிவது காண்பது
பிரிதொரு பிறவியா கும்மாயா மயக்கம்

மெய்யுறு மனமுயிர் முறுக்கி முறுக்கி
தன்மையுள் தன்மை கொண்டு தம்முள்
பன்மையும் ஒருமையும் தாமாக்கிக் கொளவும்
உண்மையுள் உய்யும் உயிரே..!

Thursday, September 05, 2019

”வ.உ.சி எனும் வங்கச்சிங்கம்..!”



ஏன் பெற்றோம்..? எதற்காக பெற்றோம்..?
எதை எதிர்த்தோம்..? எதற்காக எதிர்த்தோம்…?
ஊரார் வதைப்பட்டு காலால் மிதிப்பட்டு
தீராத் துன்பம் துய்த்து மாய்ந்து

மீளா நிலைக்கு குடிகள் வீழ்ந்தும்
பெற்றது விடுதலையா…? அச்சமும் ஐய்யமும்
வந்தேகும் நிலைதான் யதார்த்தம் என்றாலும்
இருநூறாண்டு உயிரீகை செந்தீயில் எழுந்த

நாட்டின் உயர்வுக்கு உழைத்த உத்தமர்கள்
பாட்டில் அடங்கா அளவுக்கு ஆயிரமாயிரம்
தோன்றின் புகழோடு தோன்றி தன்னை
தாயக எழுச்சிக்கு தத்துக்கொடுத்து வீழ்ந்த

பெருமகனார்..! செல்வவளம் செறிந்த நற்குடும்பம்
விட்டேகி சிறைச்சாலை சொந்த வீடாக்கி
சிறையோர்க்கு உணவிட உடல் வருத்தி
சேராத செக்கை மாடாக இழுத்து

தம்கைப் பொருள் இழந்து நமக்கு
கப்பல் விட்டு அயலார்க்கு கப்பம்
கட்டாமல் தவிர்க்க – சொந்தமான யாவும்
இழந்து பிற்காலம் தனித்து விடப்பட்ட

பெருந்தகை வாழ்வு பெருமை பேச
அருந்தவப் புதல்வனாய் அவதரித்த திருநாள்
இந்நாள் நன்னாள் அவர்தம் பெற்றோர்
பெரிதுவந்த திருநாள் “முத்துநகர் முத்து”

கலம் ஓட்டிய தமிழர்தம் கடலில்
கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி
வங்கம் வாங்கி வங்கத்தில் ஓட்டிய
சிங்கம் தமிழினத் தங்கம் அவர்தாம்

ஓயா உழைப்பும் ஒய்யார சிந்தனையும்
மாறா மனமும் தீராத்தாய் மண்பற்றும்
மக்கள் பற்றும் வாழ்நாள் பணியாய்
வைத்திருந்த யாவும் மற்றவர்க்கு கொடையாய்

தந்தேகி சிறையில் சிந்திய குருதியில்
விடுதலை கவிதை எழுதிய கோமகனார்
சிவாவும் பண்பாளர் சிலரும் பக்கத்
துணையாக விடுதலை யானார் - மண்ணில்

வாழ்வாங்கு வாழப்பிறந் தவர்தம் வாழ்வே
ஈகையர் யாவர்க்கும் முற்பாடம் காண்பீர்
நாடுகாத்தல் எளிதன்று நல்லோரே கேளீர்..!
அடிமைகளுக்கு அது புரியாது பாரீர்..!!

(தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் அவர்களின் 148 வது பிறந்தநாள் கவிதை)

Wednesday, September 04, 2019

உயிர் தாகம்...!



கரும்பாறை ஊறும் கனித்தேன் தேடும்
கருங்குயில் ஊரும் குகைதான் மூடும்
காரிருள் சேரும் கவின்மாலை தோறும்
மாரிருள் போக்கும் பூவின்மால் ஊறும்

தேன்கனிச் சாரும் தெவிட்டா நல்லமுத
சோறும் கலந்து தமிழூட்டும் பொழுதாக
மாறும் காலம் மாதூட்டும் மதுவாக
தேரும் ஊணும் உயிரும் மெதுவாக

பொழியும் பூம்பெழில் பூவையுள் சொரியும்
எழில்மிகு தூறல்கள் எம்மிதயச் சாரல்கள்
சொற்சுவை மொழியும் இதழ்கடை வழியும்
பற்சுவை பைந்தமிழ் கற்சுவை கலந்தேன்

அற்புத மாயிருந் தமிழோ..! வனப்பில்
பொற்பத பூண் கழலோ..! கதுப்பில்
வார்ப்புட செழிப்பில் தேர்அது அசப்பில்
போர்படை தோற்கும் விழிப்படை அசைவில்

முத்து மழை பொழியும் ஆழியுள்
முத்த மழை சொரியும் ஆழ்மனம்
கத்தவோ கழலவோ வியலா தேகணம்
மொத்த மாய்திகழ் முத்தத் திருவிழா..!  

”உயிர்த்தெழு...!”



கல்லில் நார் உரிக்கும் கலையோ
சொல்லில் மனம் கரைக்கும் சிலையோ
முள்ளால் முள் எடுக்கும் முறையோ
முப்பால் தனை கொடுக்கும் வரையோ

மாமதம் மறைக்க மாமூலம் உறைய
மாமகம் உதிக்க மாமாயை கரைய
தாமதம் தவிர்க்க தாமாக விரைய
அமுதம் உயிர்க்க அன்பை பொழிய

உள்ளுள் உறைந்த உள்ளம் எழுந்து
உள்ளம் கலந்து உள்ளும் கலந்து
எண்ணும் எண்ணம் என்னுள் விழுந்து
கல்லும் உயிர்க்க கள்ளது பொழிந்து

உயிர் பித்தினை உதிர்த்து உயிர்பித்த
உயர் வினை விதைத்து உயர்வினை
பயிர் வித்தென பயிற்று வித்தெனை
துயர் விட்டெழ துயில் பட்டெழ

மயில் வந்து குயில் ஆகும்
மனம் தந்து உயிர் தூவும்
தனம் தந்த பொன்னுரு மேவும்
கணம் தோறும் கவிதந் தேனே.




Sunday, December 25, 2016

எழுதலே வாழ்தல்..!


இன்னும் எத்தனை நீதிமான்கள் வேண்டும்?
இன்னும் எத்தனை நீதிக்கதைகள் வேண்டும்?
இன்னும் எத்தனை தீர்க்கதரிசிகள் வேண்டும்?
இன்னும் எத்தனை தீர்க்கதரிசனங்கள் வேண்டும்?

அனுபவத் தொகுப்பை ஆதாரமாக்கித் தந்தால்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தழைத்திருக்க
ஆயிரமா யிரம்பேர் தம்முயிர் இழந்து
ஆனவை யாவும் ஆக்கித் தந்தாலும்

கொள்ளும் தன்மை யற்ற குலமே..!
அல்லும் பகலும் உழைத்து உழைத்து
இந்நிலம் இப்பயிர் இப்பருவ மென்றாய்ந்து
இந்நில மாந்தரெலாம் பசியின்றி புசித்திருக்க

பலகாலம் படாதபாடுப் பட்டுத்தந்த மாநிலம்
பல்லுயிர் பெருக்கம் பண்பாட்டுத் தளம்
நல்லுயிர் வளர்க்க நாளும் உழைத்த
தொல்லுயிர் தொன்மை மறந்தீர் – மாந்தர்

நிலமளந்து நீரளந்து வரம்புக்குள் வைக்க
வாய்க்கால் உயர்ந்து வரப்பும் அணைந்து
நன்செய் புன்செய் விளைவித்து நாளும்
மண்ணுயிர் தழைக்க இன்னுயிர் தந்தார்

காட்டிய வழியெலாம் மறந்தீர்..! அவர்
கட்டிய கனவுக் கோட்டைகள் உடைத்தீர்
ஊட்டிய உணர்வும் அழிந்தீர் – வீணில்
உதறித்தள்ளி பல்வழி பலகாலம் நடந்தீர்

இழிந்தீர் ஈராயிரம் ஆண்டாய் இங்கே
புரண்டு போனது வாழ்க்கை - வந்தார்
மிரட்ட மிரண்டு அரண்டுப் புரண்டு
அடிமைத் தன்மை கலந்துப் பிறழ்ந்தீர்

பிரிந்துப் பிரிந்து வாழ்ந்து வந்தீர்
பிரிவால் உறவின் மூலம் மறந்தீர்
இனம் மானம் மொழி வீரம்
இன்னும் பிறவும் அழியா அடையாளம்

காணீர்..! காணீர்…!! எடுத்துச் சொல்லும்
எவரையும் பழித்தும் இழித்தும் துரத்தும்
பழக்கம் விலக்கி துலங்கும் வாழ்வுக்கு
தோள்கொடு..! போராடும் தலைவன் ஒருவன்

பிறப்பான் பிறப்பான் என்றே ஓய்ந்து
உம்கடமை செய்யாது ஒழிந்து நாளும்
பிறரிடம் கையேந்தும் வாழ்க்கை துறப்பீர்  
தன்மானம் தற்சார்பு நிலைக்கட்டும்.

Monday, December 14, 2015

பெருவெள்ளம்...!


இடிந்துதான் கிடக்கிறது - எங்கள்
வீடும் மனமும்...
ஈரத்தில்தான் இருக்கிறோம் - எங்கள்
உயிரும் உடமைகளும்... 

நாதியற்று நிற்கிறோம்...நாங்கள்
 

முகவரி கேட்காதீர்கள்.
நடுத்தெருவில் நிற்கவில்லை
நாங்கள் - ஏனெனில்
தெருவே இல்லை....

பிறகு எதைக் கொண்டு
அடையாளம் சொல்ல...


குளக்கரை கூட நீருக்குள் நிற்கிறது.
எங்கள் வாழ்விடம் தண்ணீர் மயம்.
எங்கள் உறைவிடம் கண்ணீர் மயம்....


வெள்ளைச் சட்டைப் போட்டவன் எல்லாம்
உதவி செய்வான் என்கிற நம்பிக்கை
எப்படியோ விதைக்கப்பட்டிருக்கிறது
எங்கள் மனங்களில்....


ஏங்கி ஏங்கி விக்கித்து கையேந்துகிறோம்
கடந்து போகும் வாகனங்களில் இருந்து
வெளியே ஏதேனும் வீசியெறியப் படுகிறதா..?
என்ற ஏக்கப் பெருமூச்சுடன்...


பின்னே ஓடி ஓடி முழங்கால் மூட்டு தேய்ந்தது
அலைகழிக்கும் காற்றுக்கு எங்கள் 

ஆடையை சரிசெய்வதா..? 
அலைகழிக்கும் வாகனங்களில் 
உணவுக்கு கையேந்துவதா..?
கரங்களின் போராட்டம்........


விடாது கொட்டித் தீர்க்கிறது மழை
விடாது மிரட்டிப் பார்க்கிறது பசி
நாங்களும் விடாது விரட்டுகிறோம்
வாகனங்களை....
எப்போது பசி தீரும்.


புறம்போக்குகளுக்கு நிவாரணம் இல்லையாம்
சொல்லுகிறான் ஒரு புறம்போக்கு.
ஊரே இல்லை என்ற உண்மையை
அவனுக்கு இடித்துரைக்க தெம்பு இல்லை
நாவறட்சியோடு நாங்கள்.....


முகத்தில் ஓங்கி ஓங்கி அடிக்கிறது மழை
என்ன பாவம் செய்தோம் நாங்கள்...
எவனோ செய்த குற்றத்துக்கு
தண்டனை பெறுகிறோம் நாங்கள்


நாங்கள் இழந்ததை பட்டியல் கேட்காதீர்கள்
நாங்கள் நாடிழந்தவர்கள்....
கடல் கரை மீறினால்......
சிங்களன் கொடி எங்கள்
கூரைகளில் பறக்கும்...

கட்டுமரம் நாங்கள் ஏறினால்
கடலுக்குள் சமாதி கட்டுவார்கள்


ஒட்டுக்கூரைக்கும் உலைவைக்க
அரிசிக்கும் இடமில்லாத எங்களிடம்
ஏகவசனம் பேசும் “அதிகாரமே”

உன்னை கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும்தான்
உதவி செய்ய வேண்டாம்...-
உபத்திரவம் செய்யாதே. 


எங்களைத் தேடி வரும்
எங்கள் உறவுகளின் நெற்றியில்
உங்கள் எச்சில்களை தடவி
எதையும் ஒட்டாதீர்கள்.


அவர்களோடு நாங்களும்
எங்களோடு அவர்களும்
இருப்பதை பகிர்ந்து

இன்புற்று வாழ்வோம்.

Wednesday, December 10, 2014

நெற்கதிர்..!


கணினி வரையும் நெல்மணிக் கதிர்
கண்ணுக்கு விருந்தா கடும்பசிக்கு விருந்தா
புண்ணுக்கு மருந்து புனையலாம் கணினி
மண்ணுக்கு விருந்து விளைதல்

கணினித் திரையிலா..? எருது பூட்டும்
ஏர்முனைக் கிழிக்கும் நிலத்தின் மட்டும்
கூர்முனை அமிழ்ந்தும் குளம்படி பட்டும்
சேர்தனை அடிக்கும் உழவர்தம்

கூட்டம் எதிர்கொள் இயற்கைத் தாக்கம்
கூடுமோ ஒருவரி மேற்கோள் இட்டும்
காடும் கழனியும் கணினியில் போற்றி
ஆவதென்ன ஆனதென்ன நாட்டில்

உழவர் வர்க்கம் பிழைக்க வைக்கும்
உண்மை நிலைதான் உருவாகா வரைக்கும்
உனக்கும் எனக்கும் உயிர்நடுக்கம் பெருக்கம்
வயிற்றுச் சுருக்கம் காணா

வரைக்கும் வாழ்வின் அடிப்படை புரியா
நிலைக்கும் தாழ்மை அடைந்தே கற்கும்
கடைநிலை அறிவை கழற்றி வைப்போம்
உழவர் வாழ்க்கை உயர்த்துவோம்.

Thursday, March 13, 2014

”வெளிப்பயணம்...!”


நிலையான இருளின் மடியில் என்றும்
நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற
கோளமாய் கோணமாய் உருளும் காலமாய்
வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய்

ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும்
ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும்
அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும்
கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும்

கருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம்
காலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம்
ஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும்
மயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும்

ஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில்
வண்ணம் பிறந்து வாரிஅணைக்க மேனியெலாம்
எழில்கோலம் காந்தர்வ மணம் கொள்ள
காத்திருக்கும் உயிர்க்கோளம் பூத்திருக்கும் விடியலாய்

நிலமென நீண்ட பருவுடல் தாங்கும்
உயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும்
உதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும்
புதியன புகுவன இழைந்திட தோன்றும்

ஆதிவேக தாகம் அடங்கா பயணம்
பாழ்வெளி தாண்டும் ஊழியின் நடனம்
காரிருள் காட்டும் வழியில் தொடரும்
காந்தபுல கண்கள் இருளைப் பார்க்கும்

அடரொளிப் பிழம்பும் ஆழிருள் வெளியும்
சுடரொளி ஏந்தி சுழலும் கோளம்
அலைந்திட வளைந்திட ஆகிய களம்
கட்டுறை கலங்களில் பொதிந்த ஆற்றல்

விட்டன தொட்டன விழுந்தவை எழுந்தவை
முட்டியும் மோதியும் முகவரி மாற்றியும்
இருள்வரி ஒளிவரி இடையினில் மிளிர்ந்திடும்
விடியல்கள் ஒளிமோதும் ஒரு கோணம்

தத்துவ உயிர்ப்புகள் தனித்துவ முகிழ்ப்புகள்
தானாகி வேறாகி தம்முள்ளே மூன்றாகி
வானாகி வழியாகி விளங்கும் பொருளாகி
வந்ததுவே வான்பொருள் வீடாம்.

Tuesday, March 11, 2014

”எரிதல்...!”


எரிதழல் கனன்று எரிகிறது என்னுள்
எரிதலுக்கும் எரித்தலுக்கும் இடையேதான் இருக்கிறேன்
எரிவதில் எரிதலை இரசித்தபடி - என்னை
எறிகிறேன் எரிதலில் எரியவே...

எரிதல் எரித்தலை விழுங்கி எரிதலும்
எரித்தல் எரிதலை பிண்ணி அணைத்தலும்
கூடலின் சாட்சியாய் இருக்கும் இரகசியம்
வாடலில் தொடங்கி வதங்கலில்

தொடர்ந்து காய்தலில் புகுந்து எரிதல்
தழலாய் உருமாறி கனலாய் மெருகேறி
தன்னைப் பற்றியதும் தான் பற்றியதும்
முற்றி முடியும்வரை எரிதல்

பற்றின் பால்மேவும் பற்றினை எறிய
பற்றி எரிந்து காட்டும் யுத்தம்
பலகாலம் நிகழ்ந்தும் புரிதலில் பிழையாய்
புனிதம் மட்டும் பேசியபடி...

கண்முன்னே கரைத்துக் காட்டும் அற்புதம்
ஆதாரம் அடையாளம் தொலைதலும் தொலைத்தலும்
அணுவில் பிரிதலும் கலத்தலும் இயல்பாய்
எரிதல் புரியும் அழகு

மனதை கரைக்க கற்கிறேன் எரிந்து
மாயை பொசுக்க கற்கிறேன் எரித்து
மமதை நசுக்க எரிகிறேன் மரித்து
மண்ணில் கரைக்க விழைகிறேன்

கறைகள் இல்லாத காவியம் எரிதல்
கரைகள் இல்லாத ஓவியம் எரித்தல்
முறைகள் சொல்லாத சீவிதம் எரிதழல்
மூப்பும் பிணியும் சாக்காடும்

முற்றும் தவிர்க்கும் பேரின்பம் எரிதல்
பிழையே இல்லா பெருந்தீ கொள்ளல்
பிழைத்தல் செய்யா ஆன்மா செய்தல்
பிழம்பாய் பிறவி எடுத்தல்

புழக்கம் புழுக்கம் புறத்தே எறிந்து
பழக்கம் வழக்கம் அகத்தே எரித்து
நடுக்கம் ஒடுக்கம் சகத்தே துறந்து
பற்றி எரிகிறேன் பரம்பொருளாய்

பற்றிலா பற்றில் எரிதலும் எரித்தலும்
பருப்பொருள் கருப்பொருள் கலத்தலும் பிளத்தலும்
எரிப்பொருள் கொண்டே இயக்கமும் இருத்தலும்
எரிவதே வாழ்வு எரிப்பதே வாழ்க்கை.
 

”உயிரெழுத்து...!”


இளந்தளி ரெனத்துளிர் நுண்ணுணர் மென்மன
இளமையின் இதழ்களில் பனித்துளிக் காதல்
பளிங்கென அமர அழகான மோதல்
பரவசம் காட்டும் செல்களின் இயக்கம்

சிலைக்கு சிலிர்த்து மலைக்கு வியர்த்து
மழைக்கு குளிரும் மகத்தான உணர்வில்
இழையோடும் இன்பம்தான் எத்தனை எத்தனையோ..?
கனவெது? நினைவெது? கண்முன்னே சுழல்வது

தலைநிமிர் தனித்திமிர் துளிர்த்திடும் மனத்தினில்
முட்டிவெடிக்கும் எண்ணங்கள் முத்துச்சிரிக்கும் கன்னங்கள்
கட்டி அணைக்கத் தூண்டும் கரங்களில்
கவிதைப் பூக்கும் விரல்களில் - உயிர்

ததும்பும் இதழ்களில் புன்னகைப் பூக்கும்
கதம்ப உணர்வுகள் கவின்மிகு மாலையாய்
நிரம்ப வழியும் இதயத்துள்ளே எங்கும்
நிரம்பிக் கிடக்கும் இன்ப நுகர்வுகள்

மின்னல் பிடித்து ஊஞ்சல் ஆடும்
மின்மினி பூக்கள் வாழ்த்து பாடும்
கண்மணி அவளைக் கண்டு விட்டால்
காட்டாறு கட்டவிழ்ந்த நிலையில் மனம்

மூவாறு பருவத்து முகிழ்ப்பில் திளைக்கும்
இருநான்கோடு ஒன்றும் சேருணர்வு களிக்கும்
ஒருகூட்டில் இருகிளிகள் வசிக்குமென் உயிர்க்கூட்டில்
பெருவெளியில் என்வீடு பால்வெளியில் தேன்கூடு

ஒளிமழையில் ஓரியாடி ஒலிமுகையில் தலைதுவட்டும்
ஒய்யாரம் என்வாழ்வு மெய்யாரம் என்னழகு
கண்ணுக்கு விருந்தாக கண்ணாமூச்சி கோளாட்டம்
கைக்கெட்டும் தூரத்தில் அடர்பிழம்பு சுழன்றாடும்

எக்கால மிடுகிற இடியெல்லாம் என்னெழுத்து
முக்கால முமிருந்து  முடிசூடும் பொன்னெழுத்து
கற்கால மும்மனிதப் பொற்காலமும் வடிக்குமென் எழுத்து
புவியென்ற நூலில் புகுந்தேன் தலையெழுத்து.

Monday, March 10, 2014

”புரிதல்...!”

வசந்தங்களை வாரிச்சுமந்து உன்னில்
வாரியிறைக்கும் இன்பச் சுரங்கம்
நானென்று இறுமாந்திருந்தேன்
இத்தனை காலமும்....

பொல்லாத பிள்ளையாய்
பொக்கிச புருசனாய் - என்
பெண்மைக்கு அரசனாய்
என்னகம் புகுந்தாய்....

இதயத்தின் உணர்வுகள் யாவுமூற்றி
இச்சைகள் தீர கச்சைகள் கலைந்து
மூச்சடைத்த வேளைகளில் - உன்
முத்துக் குளியல்களில்...

பொங்கும் இன்பக்கடல் உணர்வலைகள்
முத்தமாய் மாறிமாறி உன்மீதான - என்
முத்தமாரி பொழிந்தேன் வழிந்தேன்
மனதால் மொழிந்தேன்...

இடையூரும் உன் விரல்களில்தான்
இன்பத்தின் ஊற்றுகள் இருக்குமிடம்
அறிந்தேன் - என் பெண்மைக்குள்
பேரின்பம் கண்டவன் நீ...

எத்தனை நடந்தும் எத்தனைக் கடந்தும்
இத்தனை அரிய இரகசியம் உன்னில்
இருப்பது அறியாது போனேனே..!
இங்குதான் நான் மடந்தையோ...?!

நடந்த கொடுமைக்கு நான் உடந்தையோ...?
இதயம் சுமந்த சீவனின் இடம்தான் எனதோ..?!
இரண்டற கலந்தவளும் இரண்டாவதாய் கலந்தவளும்
இவளுக்கான சந்தர்ப்பமோ...?! சமூகத்தின் சடங்கில்

இழைக்கப்படும் கொடுமைக்கு நானும் இலக்கோ..?!
இதயம் கவருதல் இயற்கையா..? கலையா..?
இடவலம் அமர்ந்தவள்தான் நானா...?! - உன்
இதயம் அமர்ந்தவள் ஆவேனோ...?!

கடைவழித் தெருமுனைக் கடக்க முனைந்த
ஒருநொடிப் பொழுதுதான் உன்னில் உறைந்தவள்
என் கண்ணில் விழுந்தாள் எதேச்சையாய்...
என்னவன் சுமந்து திரியும் எழிலோவியம்..!

அன்பிலும் அழகிலும் பண்பிலும் பாசத்திலும்
இருவரும் பெண்கள்தான் அத்தான்... - உன்
ஆத்மாவை சுண்டி இழுத்தவள் அவளா...? நானா..?
பட்டிமன்றம் தவிர்க்கவே விரும்புகிறேன்

இத்தனைநாள் வாழ்க்கை சொல்லிக் கொடுத்த
இதமான உன்னிதயச் சுகமும்...
இன்னும் பிறவும் அனுபவித்தவள் ஆயிற்றே..?!
இறுக்கம் நெருக்கம் புரியாதவளா நான்...

மொட்டாய் அரும்பிய ஆசைகள்
கொத்தாய் எழும்பிய உணர்வுகள்
அவளின் சொத்தாய் சேமித்த உன் ”காதல்”
அறிந்தேன் என் அகமுடையவனே...

என்னை சுமந்தபடியே இதையும் சுமந்து
எத்தனை நாள் திரிந்தாயோ...? ஏக்கம் தளர்ந்தாயோ...?
பிள்ளைகள் பிறந்தாலும் நமக்கு - உன்
பிழியும் மனதின் ஆசைகளை என்ன செய்தாயோ...?

என் மன்னவா..! உன்னை உடுத்தினேனா...?
உன் உயிரைப் பிழிந்து படுத்தினேனா...?
என்றேனும் என் வாழ்வின் அர்த்தம் சொல்,
அன்றேனும் என்பாரம் இறங்கட்டும்...

அன்பில் அலைமோதும் இதயம் கண்டேன்
அவளும் உன்னைச் சுமந்தே அலைகிறாள்
இதயப்பிழை செய்யா இளம் பூங்கொடியாள்
இலையுதிர் காலத்து கொடியாய்...
என்செய்வேன்...! என்னிதயமே..!! சொல்.

அன்பனே எனக்காக உன்னாசைகள் துறந்தாயோ...?!
அன்புடன் எனக்கான ஆசைகள் சுமந்தாயா...?!
உன் விருப்பு வெறுப்பு விளம்புகிறாள்
விழிகள் விரிய வியக்கிறேன் நான்...

மொழிகள் கடந்த புரிதல் எங்களுக்குள்
மொழியும்போதே புரிய முடிந்தது
வழியே வந்தவள்தான் உன்வாழ்வாய்
வந்தவளென்று விழிகளால் வீசி மொழிந்தாள்...

உன் ஆண்மை ததும்பும் உணர்வுகள் அவளுள்
அவள் பெண்மை தழுவும் இன்பம் உன்னுள்
இவள் கண்டுகொண்ட உணர்வு வெடிப்பை
எப்படி எழுதுவேன் எனக்கானவனே...!

மனிதம் உரிமை கொண்டாடுதல் பிழையோ..?!
மனிதரை உரிமைக்கோரல் பெரும் பிழையோ...?!
உன் மனம் புரிந்த என் மனிதம் கேட்கிறது..?
மாமா..., என்ன செய்வேன் நான்...!

அன்பில் என்னை அணைத்து வென்றவனே..!
உனக்கான அன்பு இதோ துவளுகிறது...
வாழ்க்கை தொலைத்து வசந்தம் இழந்து
பிணம் போலும் நாட்கள் கழிக்கிறாள்...

பின்னும் யோசிக்கிறேன் அவளை பிரிந்த
பின்னும் யோசிக்கிறேன் இன்னும் இதயம்
இதற்கொரு விடைப்பகர வில்லையே...?
பெண்மை புரிந்தவன் நீ - பெண்ணாய்

உன்னை பெற்றவள் நான்....
கேட்கிறேன் என் கம்பீரமே...! ஒப்புவாயா..?
என்ன செய்யப் போகிறாய்...?
என்னையும் அவளையும்...?

வாழ்தல் என்பது என்ன மாமா...?
வாழ்ந்தவள் கேட்கிறேன் உன்னை
என்னை என்சுகங்களை இத்தனை பத்திரமாய்
என்றும் காத்தவன் என் காதலனே...!

உன்னை உன்சுகங்களை நான் என்ன செய்தேன்...?
ஒப்புக்கும் ஊருக்கும் உன்னோடு ஒட்டிக்கொண்டேனா...?
ஒரு பழக்க வழக்கமாய் உன்னைக் கட்டிக்கொண்டேனா?
உன்னில் என்னைக் கலந்தவள் கேட்கிறேன்...

உன் சுகங்கள் விரும்பும் நான்
உன்னில் வாழ்தலும் உன்னால் வாழ்தலும்
உன்னோடு வாழ்தலும் உனக்காக வாழ்தலும்
உனக்காக செய்தேனா...? எனக்காக செய்தேனா...?

என்னால் நீ எங்கேனும் வாழ்ந்தாயா சொல்
என் சுவாசங்களில் குடியிருப்பவனே..!
என் நலன்களில் உன்சுகங்கள் கண்டவன் நீ
என்னை சுகப்படுத்தி தன்னை முறைப்படுத்தியவன்

உன்னை சிறைப்படுத்தி விட்டேனோ என்னில்...?!
உன் சிறகுகள் வெட்டிய கரங்களில் என்கரங்களுமா..?!
எத்தனை மென்மையானவன் நீ...! உன்னை
இத்தனை வன்மையாய் காலம் தண்டித்ததோ...?!

இல்லை உன்காதல் துண்டித்த
இரும்புச் சூழல் எதுவாயினும்
உடைத்தெறியும் பேராண்மை உண்டேடா உனக்கு..
அன்பில் இடப்பட்ட அணையில் சிறைப்பட்டாயோ..?!

உன்காதல் வாழவிரும்பும் பேதைதான் நான்...!
ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்னைச் செம்மையாக்கி செழுமையாக்கி
உண்மையாய் வாழ்வித்தவன் நீ வாழணும்டா...

என்றும் காதலுடன்,
இல்லாள்.

Sunday, March 09, 2014

”இதயத் தூறல்...!”


இனியென்ன இரவையும் - என்
இனிய கனவையும் துரத்தி விட்டாய்
எந்த நொடியும் இரத்தப் பிரவாகம்
எனக்குள்ளே நின்று போகலாம்...

அந்த நொடிவரை இன்பம் பாய்ச்சும்
ஆனந்தம் தந்து கொண்டிரு...
ஆலாபனைகள் செய்யும் என்
ஆசைகளுக்கு எப்போதும்...

என்னை இயக்கும் இசையாயிரு
எப்போதும் உள் இரசிக்கும்
இதய கானங்களை என்னருகே
பாடிக்கொண்டிரு....

உணர்வுகள் குவித்த இதழ்களில்
உன்னை கொடுத்து என்னை
உனக்குள் இட்டு நிரப்ப இதயம் தா..!
இதழ்களின் வழியே....

புவியென்ன கவியென்ன
இதயமாற்ற தேடலுக்கு
அனிச்சையான ஆரம்பம்
அச்சாணியாகி கிடக்கிறது....

சில்லுகள் எத்தி விளையாடுகிறாய்
என் இதயத் தடாகத்தில்
உணர்ச்சி அலைகளில்
உயிர்த் தெறிக்கும் அழகை இரசிக்கிறாய்...

பிம்பங்கள் காட்டி நிசங்களை
மறைத்து கண்ணாமூச்சி காட்டுகிறாய்
கண்களும் மனமும் ஒருகாட்சி காண
கதவுகள் திறந்து காத்திருக்கிறேன்...

இமைகளில் வழங்கப்படும்
முத்தமாய் கண்களை அறியாமல்
கனவுகள் காட்டும் இரவினை
கவிதையின் காதலியாக்குகிறேன்...

இந்த இரவுகளிலும் - எனக்கான
இந்த கனவுகளிலும் எழுதப்படும்
உணர்வுக் குவியல்களை
உனக்கென்றே எழுதி வைக்கிறேன்...

இதுவும் கவிதை என்று...
இரசித்துவிட்டு போகாதே.

Friday, March 07, 2014

”நினைவுச் சுருக்கு....!”

வேறென்ன....
நீயும் நானும் வேறு வேறு
என்றானபின்.........

வேறென்ன......
நீரும் நிலமும் ஒட்டாது
என்ற உன் நியாயங்களுக்கு முன்...

வேறென்ன....
நிழலும் நிசமும்
முரண்பாடான உன் வாதங்களில்...

வேறென்ன....
விருப்பும் வெறுப்பும்
விடாப்பிடியாய் துரத்துகையில்....

வேறென்ன....
இருப்பு கொள்ளா உன்
நினைவுகள் சுமந்து திரிகையில்....

வேறென்ன....
தாயும் நீயும் எனக்கு
வேறில்லை என்றானபின்....

வேறென்ன....
தனித்தனியான எண்ணங்கள்
தவிடிபொடியான வாழ்வில்....

வேறென்ன.....
பிரிதொரு நாளில் - ஏன்
பிரிந்தோமென நினைக்ககூடுமெனில்...

வேறென்ன.....
இலைமறை காயாய்
உன்னாலும் இருக்க முடியுமெனில்...

வேறென்ன....
மனதில் மதில்சுவர் எழுப்பும்
மகத்தான உன் சிந்தனைகளில்....

வேறென்ன....
ஒட்டும் உறவும்
ஒட்டியும் ஒட்டாத உறவுக்குள்...

வேறென்ன.....
எங்கோ வெறிக்கும் பார்வைகள்
நிலம் நோக்காது எனில்....

வேறென்ன....
நீயேனும் நலமாக
நானற்று போவதில்.....

வேறென்ன....
பெரிதாய் இங்கே
நினைவுகள் தாண்டி......

Thursday, March 06, 2014

”தகிப்பு....”

கொந்தளிக்கும் உணர்வுகளில்
கொப்பளிக்கும் நினைவுகள்
சப்தமிட்டு வெடிக்கின்றன
குமிழ்களாய்.....

இறப்புக்கும் பிறப்புக்குமான
நீண்ட இடைவெளியை
இட்டு நிரப்பத் தெரியாமல்
மனத் தடுமாற்றம்....

குண்டும் குழியுமான
மனித உறவுகளில்
மடிந்து போகிறது என்னிடம்
மிச்சமிருக்கும் மனிதம்.....

புத்திக்கும் தேடலுக்குமான
நீண்ட போராட்டத்தில்
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது அனுபவம்....

நிகழ்வுகளின் நிசங்களில்
கோரைப்பற்கள் ஈட்டிகளாய்
கிழித்து எறிகிறது
உள்ளிருக்கும் துணிச்சலை....

பரிசுத்தமான மனதில்
பலகார பட்டிமன்றம்
நடத்துகிற காலம்
சிலந்தி வலையாய்....

ஆயுதம் பிடித்தக்கைகள்
அமைதியின் அடையாளம்
பெருவெளி வெடிப்பாய்
சிரிக்கிற மனசாட்சி....

கொலையும் புனிதம்
கொல்வதும் புனிதம்
சத்தமாய் இல்லாமல்
சாட்சியும் இல்லாமல்....

சைவவிரத அரிமாக்கள்
சதைதின்ன காத்திருக்கும்
சந்தர்ப்ப அவகாசத்தில்
இழுபறியாய் வாழ்தல்....

துப்பாக்கியை முத்தமிட
இதழ்களை பழக்கப்படுத்த
ஈரமும் இரத்தமும்
காய்ந்த மனங்களில்....

கண்ணீர் ஆவியாகும்
கன்னத்தின் தகிப்பில்
எண்ணமும் எரிகிறது
ஏக்கப் பெருமூச்சாய்....

Sunday, March 02, 2014

”முழங்கு தமிழ்...!”

எட்டுக எட்டுக வையகம் எட்டுக
கொட்டுக கொட்டுக வானுர கொட்டுக
மானுடம் பிறந்த மண்கதை கொட்டுக
மாந்தர் குழாம் காதில் உறைக்கவே

தட்டுக தட்டுக பண்ணிசை தட்டுக
பைந்தமிழ் பாடியே நல்லிசை தட்டுக
வாய்மொழி யாம்தமிழ் வையகத் துதித்த
தொன்மொழி யாம்புகழ் கொண்டிட கொட்டுக

இலக்கண மரபுகள் பிறந்ததும் தமிழிலே
இசையியல் மரபதன் ஊற்றாம் தமிழ்
இன்பத்தை பகிரவே இயல் இசைத்தமிழ்
உணர்வெலாம் ஊற்றாக பொங்கிடும் தமிழ்

பன்னெடுங் காலமாய் பாடிய தமிழ்
தன்னெடுங் காவியம் மேவிய தமிழ்
பொன்னேடு பொதிந்த பொக்கிசத் தமிழ்
என்னாடு தந்த உயருயிர் தமிழ்

பன்னாடுங் கடந்தே பல்கிய தமிழ்
பன்னாடும் கலந்தே ஒல்கிய தமிழ்
உள்ளாடும் உணர்வென ஓதிய தமிழ்
உன்னுள்ளே ஊணிலே ஊறிய தமிழ்

கசையடி பட்டும் இசையடி சொட்டும்
கவின்மிகு கவிதைகள் இதழ்வழி கொட்டும்
புவின்மிகு காதலும் புண்ணிய சாதலும்
தன்னுடன் பிறந்த காப்பென கொட்டும்

வானிசை வயலிசை வயங்கு கொல்லிசை
தேனிசை பூவிசை புயலிசைப் பூட்டியே
பொற்சபை சிற்சபை பொன்னொளி வீசியே
எண்ணருங் காப்பியம் தன்னுலே கொண்டிடும்

தமிழ்மறை ஓங்கிய தனித்தமிழ் நாடே
தமிழரை சுமந்தே தமிழை வளர்த்த
தமிழர்தம் பூமியில் அமிழ்தம் தமிழே
தான்சென்ற திசையெங்கும் தழைத்திடு தமிழே

Saturday, March 01, 2014

”தமிழின் தாகம்...!”

என்னை நீ கொன்றதும்
என்னுடல் சதை நீ தின்றதும்
எலும்புகள் உடைத்து மென்றதும்

புத்தியில் உறைந்தே கிடக்கிறது
புழுக்களென எண்ணி நசுக்கியதும்
புன்னகை வீசி மறைத்ததும்

புதைந்தா போய்விடும் பூமியில்....

உன் தாகத்துக்கு
என் கண்ணீரை குடித்தாய்
உன் தேகச்சத்துக்கு

என் குருதி உறிஞ்சினாய்
எத்தனை அவலம் உண்டோ
அத்தனையும் நிகழ்த்தி காட்டியது

நிழற்படமாய் இருக்கிறது
நினைவுகளில் என்றும் அழியாது...
நீ என்னை கொன்றது

உன் விழிகளின் இமைகளில்
உறுத்தும் சிறுதூசு நான்
உன் உள்மனம் எழுப்பும்

கேள்விகளில் என் வேள்விகள்...

பிணம் தின்ன நீ
பழகிய நாட்களில் தான்
சதை இழந்தேன் என்பதை மறவாதே...

பின்னிய சதிவலைகளில் தான்
பின்னும் உயிர் இழந்தேன்
பிழைகளின் பிறப்பிடமே - என்

வரலாற்று பிழைகளின்
பிறப்பிடமாய் நீ மாறிப்போவாய்
தகப்பன் கறிதின்று உயிர்வாழும்

பிள்ளை நீயென்று அறியாது போனேனே...

தவறாது உன் தவறுகள்
தப்பாது என் வரலாற்றில்
தடங்கள் பதிக்கும் மறவாதே....

இதழ்களில் முத்தமிட்டு
இடையில் கத்தி சொருக கற்றதெங்கே...?
இன்னும் பிழை செய்....

குற்றுயிராய் இருந்த என்னை
குலைநடுங்க கொல்லும் வித்தை
குழிகளில் போட்டு புதைத்து

விளம்பரங்களில் அமைதியை
வீசி சென்ற புதிய யுக்தி
பூசிமறைக்க முடியாத உண்மைகளை...

நாசிமுழுக்க சுமந்து திரிகிறேன்
நாடு நாடாய் அலைந்து கழிகிறேன்
நாற்நாறாய் கிழிந்து மடிகிறேன்

விழுந்து கிடக்கிறேன் விடியலுக்காய்...

பிறந்த மேனியாய்
பிணம் தின்ன விரும்பிய
தினங்களில் தான் புதைக்குழிகள்

பிறந்தன என்பதை மறவாதே..!
பிழைகளில் எழுதிய பிழையான
உன் வரலாறுகள் திருத்துவேன்

ஆணிவேரிலா ஆலமரம் நீ...
ஆழ்மனம் கொன்ற மானுடம் நீ...
பாழும் உலகில் பழிசுமக்க போகிறாய்

கற்பை சூறையாடி உனக்கொரு
கல்லறை கட்டிக்கொண்டாய்
கடவுளை கொன்று விட்டு...