Sunday, August 16, 2026

”நீ எனும் நான்...!!”


நீ இட்டுப்போன இடங்களில் இருக்கிறேன்

நீ விட்டுப்போன பின்னும்......


நான் கட்டிவைத்த கனவுக்கோட்டைகள்

நான் காலங்கழிக்கும் கூடமானது

 

நீ மூட்டிவைத்த நெருப்பில் தான்

நீ ஆட்டிவைத்த ஆசைகள்......

 

நான் நானானதும் காலப்போக்கில்

நான் வீணானதும் உன் காலடியில்

 

நீ அசைத்த விழிகளின் வழிகளில்

நீ இசைத்த மொழிகளில்........

 

நான் இருக்கிறேனா என்ற தேடலில்

நான் தொலைந்துக் கொண்டிருக்கிறேன்

 

நீ வீசிப்போன ஒரப்பார்வை புயலில்

நீ மையம் கொள்கிறாய்......

 

நான் கரையோர கடலாய் தினம்

நான் உன் நினைவோடு மோதுகிறேன்

 

நீ கடந்துப்போன காற்றில் உன்வாசம்

நீ உணரவில்லையா என் நேசம்....?


 நான் வியப்பில் விழி உயர்த்தும் பேரரறிவு

நான் விக்கித்து வியர்க்கும் கூரரறிவு 


நீ உதடுச்சுழித்த சுழிப்பள்ளங்களில்

நீ உச்சரித்த சொற்ச்சுழல்கள்.....

 

நான் சிக்கிக்கொண்ட ஆழிவெள்ளம்

நான் மிதக்கிறேனா..? மூழ்குகிறேனா..?!

 

நீ பேசிவிட்டா போனாய்..? என்னில்

நீ விட்ட மூச்சுக்காற்று........

 

நான் உயிர் சுமக்க ஏதுவாகிறது

நான் மொழியும் மொழியானாய்

 

நீ எதையும் பேசியதே இல்லை

நீ எதுவும் கற்றுத்தரவில்லை

 

நான் கவிதைகள் பேசுகிறேன்

நான் பாடல் பாடுகிறேன்

 

நீ சிரித்தப் போதும் சிந்தித்தப் போதும்

நீ சிலிர்த்த போதும்.....

 

நான் உடைந்தழும் மேகமாகிறேன்

நான் உன்மீதே மோகமாகிறேன்

 

நீ என் காலம் விழுங்கும் கருந்துளை

நீ என் காதல் முழங்கும் எரிமலை

 

நான் கற்றதெதும் நீ சொல்லவில்லை

நான் கற்றதென்னவோ உனக்காகத்தான்

 

நீ எனக்கு பிறப்பு தரவில்லை

நீ பிறவி தந்த பிரம்மா..!!

 

நான் உருவானபோது உனக்கானவன் இல்லை

நான் உயிர்ப்பெற்ற போது உனக்கு மட்டும்தான்

 

நீ தொட்டதுமில்லை என்னைத் தொடர்ந்ததுமில்லை

நீ தொப்புள்கொடி உறவுமில்லை....

 

நான் விட்டதுமில்லை உன்னை விலகியதுமில்லை

நான் அடியொற்றி நடக்கிறேன்...

 

நீ என் இரவுகளின் நண்பகல்

நீ உறங்கும் என் இரவுகள்

 

நான் உறக்கம் தொலைத்த நாட்களில்

நான் உறங்க மறந்தேனா..!! மறுத்தேனா..??

 

நீ எத்திநடக்கும் ஆடைகளின் அலைகளில்

நீ ஏந்திப் பிடிக்கும் முந்தியின் மடிப்புகளில்

 

நான் வாழ்க்கை தொலைத்து அலைகிறேன்

நான் வாழ்ந்துவிட ஏங்கித் தவிக்கிறேன்

 

நீ முற்பிறவி பேசியதில்லை

நீ மறுபிறவி நம்பியதில்லை

 

நான் முற்பிறவி மறுபிறவியும் சேர்த்து

நான் இப்பிறவி வாழ்கிறேன் – நானற்று...

 

நீ கற்சிலையாய் இருந்திருக்கலாம்

நீ கடவுள் சிலையாக கூட இருக்கலாம்

 

நான் ஆராதனை செய்கிறேன்

நான் கவிதைகள் அர்ச்சிக்கிறேன்

 

நீ எப்படி என் உலகம் ஆனாய்..?

நீ எப்படி எனக்கு உலகம் ஆனாய்..!!

 

நான் உன் பின்னே சுற்றுகிறேன்

நான் உன்னை மட்டுமே சுற்றுகிறேன்

 

நீ கலங்கரை விளக்காகிப் போனாய்

நீ களங்கம் விலக்கும் விளக்குமானாய்

 

நான் கரையேறுவேனா..!! காதல் மீறுவேனா..??

நான் கறைபடியாத காவியமாகிறேன்..!!

 

நீ நெருங்கி வரவே இல்லைதான்

நீ நெருஞ்சி முள்ளா..? நெஞ்சு முள்ளா..??

 

நான் கள்ளியின் பெயரெழுதும் கள்ளி

நான் அரும்பிய ஆசைகளை அடைக்காக்கிறேன்


நீ குற்றங்குறை கூறவில்லை தான்

நீ குணம்நாடிய குணக்குன்று

 

நான் விட்டகுறை தொட்டகுறை தான்

நான் விடாமல் தொடரும் குணம்

 

நீ பளிங்கு அழகுதான் என் பள்ளியில்

நீ பளீரென சிரித்த எதிரொளி

 

நான் பார்த்து இரசித்த சுடரொளி

நான் வேர்த்து விதிர்த்த அருளொளி

 

நீ ஆயுத எழுத்தாய் ஆனபோது

நீ ஆபத்தான அழகாகிறாய்

 

நான் உயிரும் மெய்யும் உருகுகிறேன்

நான் ஆச்சரியக் குறியாகிறேன்

 

நீ முன்வளைந்து முழங்கால் முகம்பதிக்க

நீ முன்வந்து பின்தேங்கும் முகக்குறிப்பில்

 

நான் கேள்விக்குறியாகிறேன் வியப்பில்

நான் பலகற்றும் கல்லாதவனாகிறேன்

 

நீ ஓங்கி விளித்த விளிச்சொற்கள்

நீ ”உம்”மென்றிருந்த பொழுதுகள்

 

நான் கேட்கும் ரீங்கார இராகங்கள் இப்பொழுதும்

நான் மௌனத்தின் மொழிப்பெயர்ப்பாளன்

 

நீ உணர்த்தியது ஏராளம் தான் எனக்கு

நீ உணர்ந்ததுதான் தெரியாது எனக்கு

 

நான் பிழைப்புக்குப் பெரும் புலவன்

நான் பேரரசின் பேரன்

 

நீ வசந்தகாலத்தின் வாரிசு

நீ வாலிபத்தின் போர்முரசு

 

நான் இலையுதிர்காலத்தின் எதிர்வீடு

நான் இளமையின் எக்களிப்பு...

 

நீ கைவராக் கவிதையின் ஏகாந்தம்

நீ மையெழுதா சித்திரம்

 

நான் கவித்தேன் குடிக்கும் பித்தன்

நான் பொய்யெழுதா காலச்சுவடு

 

நீ உயிர் எழுதிய உயில்

நீ ஒய்யாரத்தில் மயில்

 

நான் காலமெழுதும் ஓலைச்சுவடு

நான் பஞ்சாரத்தின் குயில்

 

நீ கவிதையின் உயிர் வடிவம்

நீ நாடகத்தின் தலைமகள்

 

நான் நடிக்கத் தெரியாமல் துடிக்கிறேன்

நான் முடிக்க முடியாமல் முடிக்கிறேன்.

Saturday, August 15, 2026

”விளை வித்தை...!!”



விதைக்கும் புட்டிக்கும் விதைக்கும் நிலத்துக்கும்

விதைப்பவன் கைவீசும் வித்தையில் இருக்கும்

விஞ்ஞானம் உணரும் தருணம் உள்ளம்

வியக்கும் கடிகார ஊசலின் கணக்கில்

 

அடிவைக்கும் அளவுக்கு காலடி கணக்கு

அளந்துவீசும் பரப்புக்கு கைகள் பொறுப்பு

நிலம் விழும் விதையுடன் விழிகள்

கலமுடன் கைகளுடன் பின் தொடரும்

 

மனக்கணக்கில் ஓடும் காலக்கணக்கு சொல்லும்

மண்ணில் விழும் விதைகளின் வாழ்வியல்

பயிரோடு உயிரோடு உயிராக உறவாடும்

ஓருயிர் பார்த்துப் பார்த்து இரசிக்கும்

 

விளைதலும் விளைதலுக்கு முன் வளைதலும்

பசுமைப் போர்த்திப் பின்பட்டு முதுமை

பொன்னிறம் போர்த்தும் புல்லின் புதுமை

தன்னிற மாற்றம் உழவன் உவகை

 

உழைப்புடன் உயிர் மூச்சும் கலந்தது

அறுவடை எனும் ஆனந்தம் கனிந்தது

பருவம் பார்த்து தன்னுருவம் மெலிந்து

பட்டப்பாடு படும்பாடு மறக்கும் மனதில்

 

கலத்தில் கலம்கலமாய் குவியும் நெல்மணிகள்

உயரம் காணும் ஒவ்வொரு நொடியும்

அடிவயிறு நனையும் பேரின்பம் யாரறிவார்

ஆடிக்கும் தைக்கும் அள்ளாடும் வாழ்க்கை

 

பிறப்பொக்கும் எவ்வுயிருக்கும் இந்நிலத்து யாண்டும்  

பசியறுக்கும் இவ்வுயிரின் உழைப்பு,- பல்லுயிர்

பல்கிப்பெருக பாரினில் புசித்திட நல்வயல்

படைத்திடும் பண்பாளன் உலகின் அன்பாளன்

 

முத்துகள் முளைத்திடும் வித்துகள் யாவையும்

சத்துகள் முழுமையும் சேமிக்கும் கலன்கள்

கொத்துகள் குலைகள் யாவிலும் பலன்கள்

மொத்தமும் மன்னுயிர் உண்டிக்கு உண்டியாம் 

Tuesday, August 04, 2026

”அன்பெனும்..!!”


இதுவென புரியாத இப்பிறவி இங்கே

எதுவென தெரியாத தேடல் எங்கே..??

உடலுக்கா? உணர்வுக்கா? உணர்ச்சிக்கா? உயிருக்கா..?

வாழ்க்கை எதற்கானது? எதற்காக வாழ்வது?

 

ஈன்றவர் கையில் ஏந்திய காலமும்

ஈந்தவர் தோளில் வாங்கிய கடனும்

ஈடுகொடுத்து உழைக்கவா இப்பிறவி?,- அன்றி

ஈடேற்ற முயல்வதா? காடேற்ற உழல்வதா?

 

ஊனுடல் தாங்கும் உயிர்கடன் வாங்கும்

உணர்வும் அது உந்தும் உணர்ச்சியும்

பெருகப் பெருகும் உடலின் வளர்ச்சியும்

ஒன்றில் ஒன்று ஒன்றை சார்ந்து

 

பால் கொடுத்த தோலும் பற்றி

பால் குடித்த வாயும் ஒற்றி

பாலகம் தாண்டும் பருவம் தூண்டும்

பண்புகள் நீண்டும் உருவம் தாங்கும்

 

தேவையின் பிடியில் பற்றும் பற்றுகள்

ஆசையின் வலையில் சுற்றும் சுற்றம்

பாசம் என்பது பிணைப்பா? இணைப்பா?

பல்லுயிர் தோறும் பாசத்தின் தேவை..!!

 

அன்பென படுவது யாதெனின் இதில்

அகப்படா அகப்பொருள் அப்பொருள் இங்கே

அகமுடன் அதுதரும் இன்பதுன்ப மெய்யுள்

அரவமிலா ஆருயிர் சுரக்கும் நீர்..!!

 

ஈர்ப்பதும் ஈர்க்கப் படுவதும் ஈர்ப்பியல்

ஈர்ப்பில் இருப்பது எதுவென ஈர்க்க..!!

காரண காரணம் கண்டுணர காணும்

உணர்வின் புதிருக்கு உணர்சிகள் பதிலாய்..!!

 

உயிரின் உயிர் தீண்டல் அது

மெய்வழி மெய்யாகி உணர்வில் உணர்வாகி

உணர்ச்சியில் உணர்ச்சி கலக்கும் பாற்கடல்

அதுஅது அதைஅதை அடையும் அற்புதம்..!!

 

அணுவாகி கணுவாகி அணுக்கமாகி அண்டமாகி

தாதுள் தானாகி தானேதன் உணவாகி

தையுள் பையாகி பைக்குள் உயிராகி

மையல் மையம் மயக்கும் துடிப்பாகி

 

ஆட்படுதலும் ஆளப்படுதலும் ஆருயிர் தொழிலாக

உட்படுதலும் உடன்படுதலும் ஊனுயிர் வழியாக

மெய்ப்பொருள் காட்டும் மெய்ப்பொருள் காண

மெய்ப்பொருள் பெற்ற பேரண்ட பெருவெளி

 

குமிழுக்குள் அடைபட்ட குமிழென வாழ்க்கை

ஒன்றை ஒன்று ஒன்றில் ஒன்றாய்

எதிரொளித்து எதிரொளித்து எதிரில் இருப்பதை

மெய்யென நம்ப வைக்கும் காலக்கண்ணாடி..!!

 

பொய்யென புட்டுப்புட்டு வைக்கும் உண்மை

குமிழ்கள் உடைந்து மறையும் பொழுதுகள்

நீடிக்க செய்வதா..? நிலைபெற செய்வதா..??

வாழ்வின் அமிழ்தம் என்பது எது..??

 

அத்தனை எளிதல்ல அன்பென படுவதும்

ஆருயிர் வாழ்வில் அன்பில் படுவதும்

அத்தனை எளிதல்ல அன்பை அன்பால்

அன்பில் தீண்டல் ஓருயிர் ஒருபிறவி. 

Sunday, August 02, 2026

”நம்பிக்கை..!!”


மனிதத்தின் மீதான மதிப்பும் நம்பிக்கையும்

மரணித்துக் கொண்டிருக்கிறது மெல்லமெல்ல – இந்த

மாலைப்பொழுதின் கதிரவன் நிலையாக,- சுடர்வீசும்

மலையுச்சி கீற்றாக மனதில் ஏக்கம்

 

தனித்து விடப்பட்ட குழந்தையின் தேடலில்

மானுடத்தின் விழிகளில் விழுந்துக் கொண்டிருக்கிறது

உதிரத்தின் உறவு அருவிகள்..!! பெரும்வரைக்கும்

பெற்றவர்கள் துணையாக – தனக்கொரு துணை

 

தொட்டபின் பெருஞ்சுமை பெற்றோர் பிள்ளைக்கு

தொட்டவள் தொட்டுத்தொடரும் தொப்புள்கொடி உறவால்

பிள்ளைகள் பெற்றோராகும் பேறுகாலம்,- பின்வரும்

பிள்ளைக்கு பெருஞ்சுமை தானே வினையாக..!!

 

ஒற்றை பிள்ளை ஊராகாது – தனிமரம்

தோப்பாகாது – பொருள் மட்டும் வாழ்வாகாது..?!

பனைமரங்கள் நிழலில் இளைப்பாற இயலாது

பாழும் மானுடம் இயல்புகள் புரியாது

 

வாழும் கலை மறந்த மானுடம்

தாழும் நிலை தானே தேடியது

விழும் முன் விழிக்க வேண்டி

எழும் எந்தன் குர;லும் எழுத்தும்

 

உலையுள் இட்ட இரும்பென உலகம்

தகிக்க தகிக்க ஆழியும் ஆவியாகும்

நிற்கும் மரங்கள் நெடுதழல் பற்ற

முழுக்காடும் தீயில் முக்காடு மூட

 

எக்காலமிடும் காலத்தின் கொக்கரிப்பு கூட

நிலமும் நீரும் நிலைமாறி உருகும்

வளமும் வனப்பும் இழந்து அழிந்து

குளம் வற்றி குடிநீரும் வற்றி

 

ஓரினம் செய்த பெருந்தவறில் உலகில்

பேரினம் யாவும் பேதலிக்கும் வாழ்வில்

மாறிவரும் சூழலை மாற்ற தேவை

மானுடம் பிழை நிறுத்தல் மட்டுமே

 

நுண்ணுயிர் கற்றுத்தந்த காலப்பாடம் நமக்கு

மண்ணுயிர் யாவும் பிழைக்க தழைக்க

புடம்போட்டு புரட்டிபுரட்டி அடிக்கும் உண்மை

வடம்போட்டு நம்வரம்பு காட்டும் தன்மை

 

மலைகள் மடுக்கள் ஆகும் தலைகீழ்

மாற்றம் மானுடத்தின் ஏற்றம் ஆகாது

பனிச்சிகரம் பல்லிலிக்கும் உச்சி முகடுகள்

பலகால மாற்றத்தின் பளிங்குச் சுவடுகள்

 

பூகம்பப் பெருவெடிப்பு ஆழ்கடல் துளைக்க

பெருவெள்ளம் பிளந்து நிலமதை அடைக்க

கருமேகம் கலைந்து வெண்மேகம் மிதக்க

கரும்புகை கக்கும் மானுடத்தின் வளர்ச்சி

 

செறுபகை வேரறுக்கும் செயல் செய்யும்

இயற்கை,- உயிர்களின் உருவழியச் சீற்றம்

செயற்கை செய்கைகள் செய்யாமை ஏற்றம்

முயன்று காத்தல் முடிவின் மாற்றம்.