கல்லை முத்தமிட
கண்ணாடி ஆசைப்பட
கல்லின் கைப்பட்டு
நொருங்கும் கண்ணாடி
சொல்லும் அதுபோலாம்
சொல்லும் இடமும்
சொல்லை கேட்ட
மனமும்
ஒற்றை இதழ்
தாமரைக்கு முத்தமிட
ஏரித்தாமரை
மேல் ஏனாசை வந்தது..?
பூரித்த மனதோடு
பூவென்ற நினைப்போடு
ஆழமறியா ஆசை
ஏன்..?
பூக்களின் கழுத்தில்
சுருக்கிட்டுத் தொங்கும்
நாறுக்குத்
தெரியுமா மலர்களின் மணம்..?
வேர்களின் கண்ணீர்
வெளியே தெரியாது
ஊரார் முன்
மரமாக…!
கொலை ஆயுதம்
செய்பவன் இதயமறியாது
கொல்லப்படுவது
இன்னொரு இதயம் என்று..!
அள்ளக்குறையா
அமுதம் ஆறாய் ஓடினாலும்
முகரத் தெரியாதவள்
குடம்காலி…!
ஆசை ஒழுகும்
ஓட்டை பாத்திரம்
ஆயுளுக்கும்
பழகினாலும் ஆசை நிரம்பாது…!
பாயில் படுத்தும்
புழங்காத இடத்துக்கு
அடங்காத மனதால்
உறக்கம்பாழ்…!
சிக்குண்ட வலைக்குள்
தான்சிலந்தி வாழ்கிறது
சிக்காமல் சிக்கவைக்கும்
கலையை கற்றதனால்…!
சிக்கிக்கொண்ட
சிற்றுயிர் கதறி அழுகிறது
சிக்கல் எடுக்கத்
தெரியாமல்…!
நாணல்கள் நதிக்குள்
மூழ்கியும் வாழும்
நாணமும் நளினமும்
பூசியப் பெண்போல்
அழகுக்கு ஆயுள்
குறைவென அறியாது
பழகும் மனதுக்கு
அறிவுப்பாழ்…!
கூண்டுக்குள்
புழுதான் பறக்கும் பட்டாம்பூச்சியும்
கண்டுகொள் நல்மனமே..!
மழைக்கால வானம்
கருப்புதான்..!
மனிதரின் மனமும் காண்..!!
ஆசைக்குள் ஆசையை
புதைத்துவிடு…!!
No comments:
Post a Comment