Sunday, December 29, 2019

”எண்ணங்கள்...!!”



உதிக்கும் எண்ணம் உதிக்கும் மூலம்
உணரத் தேடுகிறேன் – ஒருதலை சுமக்கும்
ஓட்டில் உறையும் மூளையிலா? மூளையின்
மூலைகளில் ஒன்றிலா?? மாய

மனமெனும் குடுவையோ? ஓயாதுத் துடிக்கும்
இதயத்தின் இருப்பிலா? உதிக்கும் எண்ணம்
உதிப்ப தெங்கே? உறைவ தெங்கே?
வேரில் தொட்டு தொடரவோ...!

நுனியில் தொடங்கி வேரில் முடிக்கவோ..?!
நுட்பம் நுணுகி அணுகி அருகில்
நுணுக்கப் பயணம் தொடர்கிறேன் – நீளும்
பரவெளிப் பயணம் நிற்காது...!!

உயிரென உணரப்படா உட்பொருளிலா? – எதில்
தொடங்கி? எதில் தொடர்ந்து? எப்படி
இடைவெளி இல்லாப் பயணம் நடத்தும்
எண்ணங்களின் மூலம் தேடுகிறேன்....

ஊண்பொதி சூட்சுமங்கள் உணரும் தருணம்
மூலங்களால் மூண்டு மூண்டு மூலங்கள்
தூண்டும் தூண்டல் தொடர்பில் துடிக்கும்
தூலங்கள் தாம்பொதி ஊண்...!!

காலங்கள் கடந்து ஞாலங்கள் உருளும்
கோளங்கள் யாவிலும் வண்ணக் கலவை
ஒளியுள் ஒளிந்தும் ஒலிக்குள் கலந்தும்
அண்டம் அண்டமாய் பேரண்டத்

தொப்புள்கொடி விரிந்து பரந்து விழுதாய்
வேர்விடும் மூலங்களே,- காணும் தூலங்கள்..!
கண்ணற்றக் கண்ணில் காணும் எண்ணற்ற
எண்ணங்கள் அலைமோதும் குவியல்

வலம்வரும் வளையங்கள் விண்ணின்று சுழலும்
கோளங்கள் யாவிலும் ஊடறுத்துப் பாயும்
உள்வெளி மாற்றங்கள் பால்வெளிப் பயணத்தில்
கோள்நிலை காட்டும் கண்ணாடி

தறிக்குள் ஊடும் தாரதுவாக இழைவீசும்
காந்தம் கவரும் ஒளிவீசும் எண்ணங்கள்
கலந்துக் கலந்துக் காந்தப் பொதிக்குள்
சுமந்துத் திரியும் விண்துகள்

விந்துகள் தாம்பொழி யாற்றல் பொதிந்து
ஊண்பொதி உள்வாங்கும் நுண்ணுணர் பொறிகளில்
பிரிந்துப் பிரிந்துப் போய்சேரும் வெவ்வேறு
அலைகளில் அமிழ்ந்து உமிழும்

புறப்புறத் தூண்டல்கள் நிகழ்த்தும் தொடர்வினை
அகத்துள் அடர்ந்து எழும்பும் அதிர்வுத்தொகுதி
தொகைத்தொகை பிரிவுகள் தொடர்வது பிரித்து
உணர்ந்ததை உணர்த்தும் உட்பொறிகள்

எழுந்த எண்ணங்கள் யாவும் புறத்தே
விழுந்த தொகைத் தொகுதி விந்துகள்
தாமென உணர்வார் உணர்வில் உள்ளும்
புறமும் ஒன்றே ஆகும்.


Wednesday, December 25, 2019

”உள்ளத் தீ...!!”



உள்ளம் அகலாக எண்ணம் திரியாக
அன்பு நெய்யூற்றி இதயத்தில் தீபம்
ஏற்றும் கண்களில் ஒளிரும் காதல்
சுடரில் எழுதும் கடிதம்....!!

சிந்தனைச் சிறையில் தனிமை தவம்
தன்னை இழந்து தன்மை மறந்து
உண்மை அன்பில் உருகும் மனதை
தேற்றுவதோ? தூற்றுவதோ? நானறியேன்...!!

அண்மை சேய்மை இடைவெளி மறந்து
ஆண்மை பெண்மை பாலினம் கடந்து
அவள் அவனாக அவன் அவளாக
அனுபவ மாற்றம் ஆருயிரில்....!!

கற்சிலை மாறும் கடவுள் நிலை
பொற்சிலை பூணும் பூவின் மணம்
உற்சவ சிலை ஊர்கோலம் காணும்
அன்பில் தேடல் அதிசயம்...!!

உருவம் கடந்து உருகும் உள்ளம்
அருவம் கொண்டு அருகில் செல்லும்
கனவென காணும் நினைவில் நிற்கும்
காதல் காலம் கடக்கும்...!!

கன்னம் சிவக்க கனியும் இதழில்
எண்ணம் எழுதும் முத்த மையில்
பூத்துச் சிரிக்கும் காதல் மயில்
காத்துக் கிடக்கு ஒயிலாக...!!

உருண்டும் புரண்டும் உருவம் தேடும்
அருகில் இருக்கும் அருவம் கண்டு
அரண்டும் மிரண்டும் ஆசைத் திரண்டு
விழிகளில் சிந்தும் காதல்...!!

மொழிகள் மறந்து மொழியவும் மறந்து
வியந்து வியந்து விரியும் விழிகள்
உளரும் உளறல் உள்ளக் கதறல்
ஊமையின் கனவாய் நெஞ்சில்...!!

நெஞ்சம் சுமக்கும் நேசம் கனக்கும்
கொஞ்சம் இறக்கி கொஞ்சும் சிறுக்கி
அஞ்சும் அழகில் தஞ்சம் அடைந்த
உயிரில் உயிர்த்த காதல்...!!  

Tuesday, December 24, 2019

உயிரின் நேசம்...!!



முன்னொரு சென்மம் முளைத்த காதல்
பின்னிப் பிணைந்து பின்னும் நீளும்
எண்ணத் தொடர்பில் எழுதும் விதி
எண்ணவோ எழுதவோ வியப்பில்...!!

கண்ணின் மணிக்குள் விழுந்த ஒளிக்குள்
கலந்தே நுழைந்த காந்தக் காதல்
உள்ளும் புறமும் ஓடும் மூச்சில்
உயிரின் உயிரை தீண்டும்

அண்டம் பிறந்து பிண்டம் நுழைந்த
பரவெளிப் பாய்ச்சல் அடர்ந்த அன்பில்
அகமும் புறமும் ஊட்டம் காணும்
வளர்ந்து மலர்ந்து செழிக்க

தூண்டும் தூண்டல் தூண்டில் போடும்
வேண்டும் மனதின் வேண்டல் யாவும்
தாண்டவம் ஆடும் தன்னொரு பாதிக்கு
ஆழ்மன ஆசைகள் துளிர்விட

பாதியாய் ஆதியில் பிரிந்த பாதியாய்
பாதிக்கும் பாதியின் ஆதிக்கும் பாதியாய்
பாதியைப் பிடிக்கப் பாதைத் தேடும்
பாதியில் இணையும் பாதிக்காய்...!!

வாதிக்கும் உள்ளுள் தன்னை சோதிக்கும்
வருத்தம் வந்து வருத்த வருந்தும்
பெருத்த ஏமாற்றம் பிணியாய் துரத்த
கருத்த மனம் கன்னும்

தேடும் நாளும் தேடாமல் ஓயாது
பாடும் உறவின் பாசம் தேயாது
நாடும் மனம் நன்மை தீராது
வாடும் உயிரின் வேரில்

கண்ணீர் சொரியும் காதல் துளிர்க்க
பன்னீர் பூக்கள் பார்த்துப் பேசும்
பால்நிலவு மதி மயக்கும் பால்வீதி
பயணத்தில் பருவப்பால் தேடும்

உயிரின் துருவங்கள் ஒன்றை ஒன்று
தொட்டுத் தொடரும் பிறவிப் பேசும்
கட்டுக்கடங்கா காதல் ஊறும் – மூலம்
உணர்ந்து மோகம் மூளும்

பாகம் பிரிந்த தேகம் தன்னில்
பாகம் பிணைய பாதை வகுக்கும்
மேகம் மிதக்கும் நீரில் கலக்கும்
ஆவிக்குள் ஆவி சுரக்கும்

ஐந்தாற்றல் அடங்கி எழும் ஐம்பொறி
பைக்குள் பொதிந்த பாசப் பொறிக்குள்
நைந்து நைந்து நாட்கள் கழியும்
பேராற்றல் பெரு வெள்ளம்

அகம் நோக்கி முகம் நோக்கி
ஆழ்ந்து அமிழ்ந்து உயிர் நோக்கும்
வாழ்க்கை வாழவே மனம் ஒப்பும்
வாழாது வீழ்ந்துப் போவதோ..!!

நிலம் மோதும் கடலாக நீயும்
கடல் தாங்கும் நிலமாக நானும்
அலை மோதும் கரைமீது ஆசைகள்
எழுதும் விழியின் மொழிகள்..!!

நிலவின் தீண்டல் நீயென காட்டும்
இரவின் அழகில் இளமை கூட்டும்
உறவின் உரிமை உயிலாய் தீட்டும்
காதல் பட்டயக் கவிதை..!!

கனவில் வந்த நினைவில் வந்து
உணர்வில் ஒன்றி உயிரில் கலந்து
புணர்வில் பொங்கி பொதுவில் தங்கி
அழியா அன்பில் ஆழ்ந்த

நொடிகள் பொழுதாய் நீளும் அழகில்
விழிகள் மொய்த்து விழிகள் மொழிந்த
முத்தச் சுடர்கள் பால்வீதி எங்கும்
பருவத் துகளாய் மின்னும்

இடையொரு பாகம் இழையோடு தாகம்
மடையேறு மோகம் கடைவாய் மீறும்
மனம் தின்னும் எண்ணம் தாங்கும்
மதுக்கிண்ணம் தேகம் ஆகும்

நினைவுகள் ஊற்றி நிறைக்க நிறைக்க
நிறைவுப் பெறாத பிண்டப் பாத்திரம்
கனவுகள் ஊற்றியும் காலியாகும் குடம்
உணர்வுகள் ததும்பத் ததும்ப

ஆசைகள் ஊற்றும் அட்சயப் பாத்திரம்
மாதொரு பாகம் மீதொரு காதல்
மீளாது சொல்லி மாளாது என்றும்
தீராது இன்பச் சுரங்கம்..!!

சிந்தும் மொழிகளில் சிணுங்கள் கொஞ்சும்
சந்தம் வழியும் சந்தனக் கிண்ணம்
சொந்தம் சொந்தம் என்றொரு சந்தம்
பண்ணில் பொழியும் உறவின்

இசையில் இசையும் இன்பக் கசிவில்
கனிந்து கனிந்து உயிரின் சுடரில்
காதல் மிளிரும் கவித்துவ அடர்வில்
பொழியும் அன்பே பூவுலகாம்.


Monday, December 23, 2019

விசும்பு...!!




பேரன்பு ஒழுகும் பேரண்டம் ஒன்றில்
கூரலகு ஓடுடைத்து வெளிவரும் குஞ்சென
மனம் உடைத்துப் பெருகும் அன்பு
பரிசளித்த நாள் ஒன்றை

மார்கழி மாதத்துக் கோல அழகாய்
மறுமுறை சொல்ல முயலும் மனம்
கார்முகில் சிந்தும் சாரல் பனியாக
தூவும் நினைவுகள் சிலிர்க்க...!!

அடர்ந்து பரவும் இரவில் தனிமை
அரசு நடத்தும் நிலவென நானும்
உலவும் உலகம் ஒன்று கேளீர்..!!
அம்புலி தானும் கதிராக

சுடர்விடும் மதிநாள் மனம் ஒளிரும்
படர் எண்ணம் தொடர் சிந்தையுள்
மூழ்கும் வண்ணம் கவின்பொழி காதல்
முகிழ்த்த நாணம் மொட்டாகி

நினைவு வெடிக்கும் சிந்தைக்குள் மலரும்
கனவுகள் ஆயிரம் காண்பது கண்ணல்ல..!!
உணர்வுகள் ஒருகோடி ஓரிடத்து ஒன்றாகி
திணறும் அண்டப் புரட்சியாக..!!

புலப்படாத உணர்வுக்கு புலன்தாமே ஆதாரம்
புரியாத மொழியாக புலன்கள் பேசும்
அறியாதப் பொருள்கள் ஆயிரம் உண்டிங்கு
உயிர் போடும் முடிச்சிக்கு..!!

விளங்காத விளக்கம் விளங்க விளக்கும்
விண்ணும் மண்ணும் பெருக வியக்கும்
அன்பும் அருளும் துளிர்க்க..! உயிர்க்கும்
பரண் துகள் பாரில்..!!

கழுமுனை காட்டும் சுழுமுனை கயிற்றில்
ஒருமுறை ஆடி அமரும் அடிமுனை
தாங்கும் நாடி மலரும் நான்கில்
தூங்கும் இடம் மெய்யாய்...!!

வாங்கும் தூண் தாங்கும் - பரண்
தான் தங்க பரண் தேடும்
பரம் ஆடும் பரமபதம் பாரீர்..!!
பரணும் பரமும் பம்பரமாய்

சுழன்றாட உழலும் கோலத் துகள்கள்
கழன்றாட கதிர்வீசும் காந்தம் பரல்கள்..!!
ஓடியோடி ஒளிவீசி வலைவீசும் சுடர்கள்
ஆதிசூழ் இருள் விழுங்க...!!

பாதியும் ஆதியும் கலந்த சோதியுள்
நாதம் நுழைந்த நளினம் விசும்பும்
விசும்பில் விசும்பல் ஒலிக்க – அசையும்
அண்டம் ஆடும் விளிம்பில்...!!

அடரிருள் அடர்ந்த பரவெளி சூழ்நிலை
ஊடறுத்துப் பாயும் ஊமை விந்தும்
அண்டத்துள் அடங்கும் தூலங்களில் துலங்கும்
ஒளியென விரிந்து காட்டும்

களிப்பில் களிக்கும் ககனம் காணும்
சுழிப்பில் சுழலும் புவனம் தானும்
விழிப்பில் விளங்கும் விசும்பின் கோணம்
பசும்புல் பனியில் பாரீர்...!!
  


Monday, September 30, 2019

"குறிஞ்சி..!" (பாகம் -6)

குறிஞ்சி (பாகம் -6)
பழங்களும் காய்களும் கிடைக்கா விடத்து
கொட்டைகள் காய்ந்த வித்துகள் கூலங்கள்
கிழங்குகள் தண்டுகள் தவிரவும் தாமுண்ண
முட்டைகள் விலங்குக் குட்டிகள்

பறவைகள் பலவும் தேடியோடி களைத்து
பசிக்காக பலகாதம் நடந்தும் ஓடியும்
புசிக்கக் கிடைக்காத காலமும் உண்டு
இரைக்க இரைக்க இரைத்தேடி

உழலும் கோடையில் தாகமும் வறட்சியும்
துரத்தும் கொடுந்துயர் வருத்தப் போராடும்
ஊணுயிர் நெடுவழி ஊடறுத்து ஒற்றைவழி
நடக்க நோவும் கால்கள்…!!

சுழலும் காலம் நகர நிகழும்
உயிர் சுழற்சித் தூண்டல் பலவும்
பதியும் நினைவகச் செல்களில் நிகழும்
தொடர் பதிவுகளில் தோன்றும்

உயிரின மரபணுத் தோற்றமும் மாற்றமும்
காலத்தில் நீடித்து நிலைக்கத் தூண்டும்
உடலியல் மாற்றம் நிகழ்ந்து நிகழ்ந்து
உடல்கள் மாற்றி மாற்றி

நீளும் உயிரியல் நீட்சியில் நாளும்
காலம் வளர்த்த உயிர்கள் பலகோடி
சிறியன முதல் பெரியன வரையில்
வகையாக தனித்தனித் தொகுப்புகள்

ஒவ்வொரு உயிர்த் தொகுப்பும் ”குடும்பம்”
இனவாரி உயிர் குடும்பம் யாவிலும்
ஒத்தப் பண்புகள் ஓங்கி இருக்கும்
சிறியனப் பெரியன ஓரினமாக..!

இடை வந்தன மரித்துச் செரித்தன
மண்ணில்..! தொடர்நிலை விட்ட உயிர்
தொடரில் தோற்றதுப் போகவும் எஞ்சிய
உயிர்கள் இடரில் மிஞ்சியவை..!!

உயிர்ப் பிழைத்தல் எளிதல்ல இயற்கையில்
உண்ண உயிர்க் குடிக்கும் சூழலியல்
செதுக்கிச் செதுக்கி உருவான மாற்றங்கள்
உருவங்கள் தாங்கும் உயிர்கள்..!!

மரபியல் பிழைகள் நிகழ்ந்த உயிரியல்
செல்களில் தாங்கிப் பிழைக்கும் தகுதி
இழந்து காலத்தால் நிற்காது அழிந்து
ஒழிந்தன உயிரியல் தொடரில்

பருவங்கள் இசைத்தப் பக்கத் தாளங்கள்
கலவியல் கருவியல் உடலியல் மாற்ற
காரணக் கருவியாம்..! தாவரம் விலங்கு
யாவிலும் மரபியல் பதிவுகள்

தொகுதிகள் தோறும் தோன்றும் விலங்குகள்
தாங்கிப் பிடிக்கும் தனித்தன்மை ஓங்கும்
ஓரின ஒற்றுமை ஒவ்வொன்றின் வேற்றுமைப்
பண்பில் உருவில் நிலவும்

உணவுச் சார்ந்து உருவாகும் உடல்
உறுப்புகள் தற்காப்பு அவையங்கள் தோன்றும்
உள்ளும் புறமும் காலத்தால் மாற்றம்
உறுதியாய் நிகழும் புவியுள்

பலமுள்ளது வாழும் பலமற்றது வீழும்
உடல் உறுதியே நிலைக்க வழியாகும்
பலம் காட்டத் தயங்கும் எதுவும்
பலியாகும் பலத்துக்கு விருந்தாக…!

தப்பித்தல் பிழைத்தல் மறைதல் மறைத்தல்
தந்திரம் கற்றலே பலவீனத்தின் வாழ்வு
தன்திறன் இல்லா உயிர்கள் தந்திரம்
செய்தே தப்பிப் பிழைக்கும். 



Friday, September 27, 2019

"குறிஞ்சி..!" (பாகம் –5)




"குறிஞ்சி" (பாகம் –5)
பூத்தனப் புகுந்துப் பூந்தேன் குடித்து
முரலும் வண்டுகள் மயங்கி மதர்த்து
உருளும் உள்மடல் உறங்கும் பொழுது
பகலும் உருண்டு இருளாகும்

பால்நிலவு உலவும் பால்வீதி ஒளிரும்
சுடர்மீன்கள் பலவும் பார்த்து நகைக்க
மடல்மூடும் மலரில் மல்லாந்து கிடக்க
பனிப்பொழிந்து மொட்டு முனகி

இதழ் வெடிக்கும் இன்னிசைக்கு வண்டுகள்
இமை திறக்கும் விடியலில் கதிரவன்
ஒளித் தீண்டும் மடல்விரிய விட்டு
விடுதலை வானில் பறக்கும்

கள்குடித்த கருவண்டுகள்..! காடுகள் வளர்க்கும்
மந்தை மான்கள் ஆடுகள்மேயு முகடுகள்
கற்றைப்புல் மேல்கவனம் வைத்து எதிரிகள்
மீதிருக் கண்ணும் வைத்து

அச்சம் ஒழுகும் பார்வையில் நாளும்
மிச்சமாய் ஒழுகும் உயிர்…! தவிப்புடன்
தாவித்தாவி உயிர்ப்புடன் இருக்க புல்லுடன்
போராடும் கொடுந்துயர் வாழ்க்கை…!

அரியும் நரியும் அத்தொடு சேர்பகையும்
புலியும் பெரும்பூனை இனங்களும் வலிய
வழிமறிக்கும் உயிர்குடிக்கும் இடர்களில்,- ஒன்றை
இழந்து மற்றவை தப்பும்

தந்திரம் மரபெனக் கொண்டன மந்தைகள்..!
உயிர் வாழ்தலின் உன்னதம் புரிந்தே
ஒற்றுமை கற்றன அஃறிணை அவைகள்…?!
குற்றுயிர் நடுங்க குட்டிகள்

ஈனும்..! போராடிப் போராடிக் குட்டிகள்
பேணும்…!! ஒன்றுடன் ஒன்று ஒற்றுமை
கண்டு,- ஓரினம் காக்கும் வேறினம்
கண்டு நட்புப் பாராட்டும்

தகைமையும் உண்டு,- எவை எவை
எவற்றுக்கு உதவும் அவை அவை
அடையாளம் கண்டு ஒத்து வாழும்
வாழ்க்கைப் பழகியும் வாழ்ந்தன..!

கரியும் பரியும் கூட்டமாய் குடும்பமாய்
எதிரியும் வியக்க வாழ்ந்துக் காட்டின…!
கருதிய எதிரியை காலால் மிதித்தே
தப்பித்துக் காக்கும் தலைமை…!

ஒப்பிலாப் பண்புகள் ஒவ்வொன்றும் கற்றன..!!
கற்றவைச் சேர்ந்து மரபுகள் ஆயின.!
மற்றவை யாவும் மடிந்தே போயின
உற்றது உரைத்தேன் காண்..!

பல்லுயிர் பெருக்கமும் நெருக்கமும் பன்முகத்
தேவைகள் சார்ந்தே இயல்பாய் நடந்தன..!
தப்பிப்பிழைத்து தன்னினம் பேணல் எப்படி..?
கற்றது நின்றது காலத்தில்…!

அச்சுறுத்து மச்சங்க ளாயிரம் ஆயிரம்
அண்டவும் ஒண்டவும் இடம் தேடும்
அத்தேவை கொண்டவை தங்கும் இடம்
தான்தேடிக் கொண்டன வெற்பில்..!!

விலங்கொடு விலங்காகி விலங்குடன் பழகி
விளங்கிக் கொள்ள வேண்டியது ஏராளம்..!
முதுமயிர் பூத்த முரட்டுடல் பலம்
உதவாத விடத்தே கற்றல்

தொடங்கிய காலம் மந்திப் போல்
குந்தியும் தாவியும் குதித்தும் எஞ்சியப்
பண்புகள் யாவிலும் கற்றலும் தெளிதலும்
மானுட மரபுகள் ஆனது. (தொடரும்)

"குறிஞ்சி..!" (பாகம் - 4)



குறிஞ்சி – (பாகம் - 4)
இளவேனிற் காலத்துக் குறிஞ்சி நிலமகள்
குமரிக்கோல அழகியல் காட்டும் பருவம்
குளிர்காற்றும் கொஞ்சும் முகிலும் உலவும்
பஞ்சுநிகர் பனித்தூவல் மிதந்து

நெஞ்சம் உறையும் குளிரை வீசும்
புலரும் பொழுதுகள் நடுங்கும் குளிர்
மலரும் குறிஞ்சி தன்னழகு மிளிர
தாகம் தணியும் அழகு..!

காடுகள் கொடிகள் குறுஞ்செடிகள் புற்கள்
குட்டைப் புதர்கள் முட்செடிகள் இன்னபிற
தாவரம் துளிர்த்துச் செழித்து பசுந்தளிர்
பரப்பும் பச்சைப் பட்டழகு..!

பார்ப்பவர் இச்சைத் தூண்டும் எழில்
பூண்டு உயிர்களை உசுப்பும் உந்தம்
காந்தம் போல் கவரும் கவர்ச்சியில்
புணர்ச்சி நிகழும் காலம்..!

முடங்கிக் கிடந்த சோம்பல் விலக்கி
முயன்று வாழும் வேகம் கொடுக்கும்
சூடும் குளிரும் சூழும் உடல்கள்
வாழும் நிலை வசந்தம்…!

தூறலும் சாரலும் கலந்து தூவும்
பனியும் குளிரும் கவிழ்ந்து சூழும்
கதகதப் பூட்டும் காடுகள்..! முழைக்குள்
முடங்கிய உயிர்கள் சிலிர்த்தெழும்…!

தன்னைத்தான் வளம் கூட்டும் தற்சார்பு
நிகழ்த்தும் தாவர மட்கும்,- மட்கும்
தானுண்ண வலிந்து மேல்வந்து நெளியும்
புழுக்கள் பூச்சிகள் வண்டுகள்..!

கூட்டுப்புழுக்கள் கூடுடைத்து உலகம் உலாவ
முட்டைகள் உடைக்கும் மூக்குள்ள உயிர்கள்…!
பறக்கும் சிற்றுயிர் பல்லாயிரம் சிறகடிக்கும்
குறிஞ்சியின் கூந்தல் மலர்கள்…!

தாவர உண்ணிகள் தாண்டவம் காணும்
தழைத்த இலைகள் செழித்த உணவாகும்
கொழுத்த உடல்கள் பருத்துத் திமிரும்
கோலாகல விழாவில் குறிஞ்சி…!

கொழுத்த உடல்கள் பார்த்து ஏங்கும்
ஊண் உண்ணி விருந்தாக்கும் களம்..!
உணவுப் பஞ்சம் நீங்கும் உயிர்கள்
உயிர்ப்புடன் பல்கிப் பெருகும்

காலையும் மாலையும் பூத்துக் குலுங்கும்
குறிஞ்சியும் கட்டழகு சுமந்து நிற்கும்
வண்டுகள் வலம் வரும் – பொன்
வண்டுகள் ஒளிரும் பொழுது…!

இரீங்கார இசையுடன் கலந்து பாடும்
பல்வகை பறவைகள்..! பிளிறல் அலறல்
குமுறல் கதறல் கொஞ்சல் மிஞ்சும்
ஒலிகள் விஞ்சும் குறிஞ்சி…!

கூட்டுப் பூக்கள் தாங்கும் காம்புகள்
ஒற்றை மலர் தாங்கும் தண்டுகள்
சரமெனத் தொங்கும் கொத்து மலர்கள்
தென்றல் தலை துவட்டித்

தாலாட்டும் கொள்ளை அழகில் மகரந்தம்
மணக்க விருந்துப் படைக்கும் காடுகள்
உயிர்களின் உணவு மாநாட்டுத் திடல்…!
கொஞ்சும் அழகில் குறிஞ்சி….!  (தொடரும்)



Wednesday, September 25, 2019

குறிஞ்சி – (பாகம் –3)




குறிஞ்சி – (பாகம் –3)
அடர்மழைத் தொடரும் காலங்கள் – மின்னல்
இடிமழைத் தருமச்ச முடன்கொடு மிருள்
மிரட்டும் வெள்ளம் வழுக்கும் பாறைகள்
உருளும் பள்ளம் தொட்டுத்

தொடரும் முன்பனிச் சாரலும் தூரலும்
மூடுப்பனி பின்வரும் காலமும் – தனக்கு
கொடுமைத் தொடரும் வேளைகள் என்றாக
தப்பிக்கும் தருணம் தேடியப்

பொழுதுகள் கடும்பசி விரட்டக் காத்திருக்கும்
கொடுமிருகத் தொல்லை எட்டும் எல்லை
உயிரின் வேரில் ஊற்றிய அமிலம்..!
நெடுங்காலப் போராட்ட தொடர்ச்சியில்

நல்லனத் தீயன வகைப் பிரித்தான்
அஃறிணை யாவிலும் நன்மை தீமை
கண்டான் – புரிதல் கொண்டான் வாழ்வில்
வரும் இடர் களைய

வழியும் தற்காப்பு முறையும் தெளிந்தான்
மிருக என்பும் கல்லும் கைத்தடியும்
காப்புக் கருவிகள் கொண்டான் – இன்னும்
இடர்கள் தோறும் கற்றான்

தோற்றும் இழந்தும் கொடும் தாக்குற்று
இயற்கைத் தருமிடர் மிருகத் தொல்லை
மீண்டான் மரபுவழி இனம் காத்து
நீண்டான் உயிர்வாழும் பேரினமாக..!

ஓடியும் ஒளிந்தும் வாழ்ந்தவன் வழியில்
கோடையும் கொடும் வேதனையும் வந்தன..!
ஒட்டும் பொடியும் உச்சிமேல் வெயிலும்
கொட்டும் தேளென கொடுமை..!

ஒட்டிய வயிரும் காய்ந்த வாயும்
தள்ளிய நாக்குடன் தளர்ந்த நடையும்
நீருக்கும் உணவுக்கும் போட்டியும் வந்தது
உயிர்வாழப் போராடும் உயிர்கள்..! 

ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி – தற்காத்து
தம்தேவைக் காத்து பிழைத்தன…! ஒன்றை
ஒன்றுத் தாக்கியும் தப்பித்தும் போராடிப்
பதுங்கி வதங்கிப் பிழைத்தன..!

அருவிகள் காய்ந்து ஒழுகும் நீரில்
ஆங்காங்கு சேர்ந்தக் குட்டையும் குளமும்
சுனையும் மொத்த உயிர்களின் கூடாரம்..!
சொட்டும் நீரும் அமிழ்தம்..!!

சுடும் பாறைகள் காய்ந்த முட்கள்
முறிந்த மரங்கள் கூர்நுனிக் கிளைகள்
அடர்ந்த வனமும் அழிந்த நிலையில்
காய்ந்தப் புதர்கள் அண்டிய

உயிர்கள் அழிவதும் கருகும் வனத்தில்
போராடித் துளிர்க்கும் சிற்சில மரங்களும்
உயிரைப் பிடித்து நிற்கும் கள்ளிச்செடிகளும்
குடையாக நிழல்தரும் கோடை…!

மாண்ட உடல்கள் கிடக்கும் இடத்தில்
மீண்ட உயிர்கள் மோதும் களத்தில்
நீண்டப்பசி விரட்டும் வேகம் – பலம்
காட்டும் உணவுப் போர்…!!

இரசிக்கவோ உருசிக்கவோ இடமற்றக் காலம்
இரவோப் பகலோ வேட்டைகள் தொடரும்..!!
ஊணுண்ணி விரட்டும் உயிர்ப்பசிக் கொலைகள்
தானுண்ணத் தேடும் தவிப்புகள்…!

கடும்போர் நிகழ்த்தும் கோடையும் – அதனுடன்
கைக்கோர்த்த வாடையும் சுழற்றி அடிக்கும்
பெரும் கொடுமை நிகழ்த்தும் இயற்கை
கருகும் உயிர்கள் வீழும்…

குற்றுயிர் நடுங்கும் கொலைக் களம்
சிற்றுயிர் ஒதுங்க இடம் தேடும்
பாறையில் பூத்தக் கள்ளியில் தேனூரும்
கொல்லும் கோடையில் உயிர்வாடும்…! (தொடரும்)