Saturday, May 16, 2026

"நினைவலை..!!"


 நீந்தும் மீனை தாங்கும் நீராய்

ஏங்கும் இதயம் ஏந்தும் பூவாய்

துள்ளும் கயல்கள் தெறிக்கும் துளிகள்

நினைவுக் குவியல் நெறிக்கும் வலிகள்

 

அடைகாத்த உணர்வு முடிச்சவிழ சிதறும்

அத்தனையும் நாற்புறம் நகர – நிகழும்

அத்தனையும் நீயாக,- தனிமை நானாக

தத்துவமாய் தனித்துவமாய் தனித்துமாய் பொழுதுகள்

 

மூடியிலா சோற்றுப் பானையாய் சிந்தும்

நினைவுப் பருக்கைகள் பொருக்க மனமின்றி

முடியிலா தலையென மொத்தமும் தெரிய

மூடவோ ஓடவோ வழியறியா வாழ்வியல்

 

குளத்தில் இருந்தா லென்ன? அன்றி

குடத்தில் இருந்தா லென்ன? நீரின்

குணமா மாறும்? புதுமணமா சேரும்?

குடையும் கேள்விகளில் உடையும் மௌனம்

 

விடியவிடிய வினாக்களை எழுதுகிறேன் விடைதாளில்

விடைகளை அறியாமலே விடிகிறது என்பொழுதுகள்

உள்ளிருந்து குடைவதில் உளியும் தோற்கும்

உன்னோடு,- அகம் குடையும் அழகியல்

 

இடைச்செருக்கு உடையாளோடு இணக்கம் தேடும்

இடையிடையே செருக்கு உடையவன் நிலையில்

இணக்கமும் சுணக்கமும் இன்பம் துன்பமாய்

இக்கட்டில் நிற்க வைத்தாய் இக்காட்டில்

 

சொக்கட்டான் ஆடும் சொற்களை வைத்து

சொல்ல எத்தனிக்கும் எந்தன் ஆசைகள்

அடுக்கப்பட்டு அப்படியே சரியும் சீட்டுக்களென

ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒற்றை அடையாளமாய்..!!

 

அன்றுபழுத்த பழத்துக் கலையும் கிளியென

இன்றுதின்று செறிக்கும் நினைவுகள் என்னில்

கொன்றுகொழுக்கும் உந்தன் உணர்வுகள் தன்னில்

மெல்ல கழியும் இந்தநாளும் பொழுதும்.