Tuesday, May 31, 2011

"ஒளியும் இருள்"


வனத்திடை ஊடறுத்து வனப்புக் கூட்டும்
புனலின் புனலாட்டம் புகுந்து நலம்
கேட்கும் வேர்களின் விழியில் கசியும்
காதலை மூடி மறைக்கும் பொங்குநுரை

கங்கு கனலை எங்கும் படரவிட்டு
பச்சைத் தாவணியில் இச்சைக் கொண்டு
பற்றித் தழுவும் சூரியச் சுடரில்
படர்ந்திருக்கும் காதல் யாரறிவார் பாரில்...?

புனல் போர்த்தும் மலர்ப் போர்வை
புகுந்து விளையாடும் கயல் நீந்தி
கரைசேரும் புங்கமர பசும் நிழல்
புரியும் புன்னகை புதிரை யாரறிவார்..?

இருட்டுக்குள் இழையோடும் ஒளிக்கீற்றின் நேசம்
இன்னும் உயிர்ப்போடு இருக்கும் இரகசியம்
இப்புவியில் யாரறிவார் இருட்டைத் தவிர..!
ஒளியைப் உறவாக்கும் இருள்...

ஒளிந்துக் கிடக்கும் ஒளியின் வரவுக்காய்.        

Friday, May 06, 2011

”அன்றிலும் நானும்”



அன்றிலொன்று அலர் மலர் மேல்
அமர்ந்த வண்ணம் ஆடிப் பாடி
ஆழ்துயில் மேவும் அழகு காண
வான்முகில் வந்து சிவிகை வீசும்

நதிமுகம் காண நறுமுகைத் தாவும் 
நறுமுகை முந்த நதிப் பாயும் 
சலசலக்கும் நதியின் அழகில் சிலிர்த்து 
கலகலக்கும் மனம் பளப்பளக்கும் நீர்மேனியில்

மதி மயங்கும் மதி நிழல் 
வண்ணம் கண்டு அலையும் அதனுடன்
பின்னலிட்ட மின்னலில் பின்னிக் கிடக்கும்
பேரழகு மின்னிக் காட்டும் அன்றிலை

சொட்டும் சாரலில் கொட்டும் சுகம்
கொட்டமடிக்கும் இரவில் கொட்டும் பனியில்
வட்டமிடும் எண்ணம் தொட்டுவிடும் தூரம்
வானவில் வாழ்வில் அன்றிலும் நானும்.