Thursday, March 13, 2014

”வெளிப்பயணம்...!”


நிலையான இருளின் மடியில் என்றும்
நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற
கோளமாய் கோணமாய் உருளும் காலமாய்
வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய்

ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும்
ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும்
அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும்
கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும்

கருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம்
காலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம்
ஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும்
மயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும்

ஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில்
வண்ணம் பிறந்து வாரிஅணைக்க மேனியெலாம்
எழில்கோலம் காந்தர்வ மணம் கொள்ள
காத்திருக்கும் உயிர்க்கோளம் பூத்திருக்கும் விடியலாய்

நிலமென நீண்ட பருவுடல் தாங்கும்
உயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும்
உதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும்
புதியன புகுவன இழைந்திட தோன்றும்

ஆதிவேக தாகம் அடங்கா பயணம்
பாழ்வெளி தாண்டும் ஊழியின் நடனம்
காரிருள் காட்டும் வழியில் தொடரும்
காந்தபுல கண்கள் இருளைப் பார்க்கும்

அடரொளிப் பிழம்பும் ஆழிருள் வெளியும்
சுடரொளி ஏந்தி சுழலும் கோளம்
அலைந்திட வளைந்திட ஆகிய களம்
கட்டுறை கலங்களில் பொதிந்த ஆற்றல்

விட்டன தொட்டன விழுந்தவை எழுந்தவை
முட்டியும் மோதியும் முகவரி மாற்றியும்
இருள்வரி ஒளிவரி இடையினில் மிளிர்ந்திடும்
விடியல்கள் ஒளிமோதும் ஒரு கோணம்

தத்துவ உயிர்ப்புகள் தனித்துவ முகிழ்ப்புகள்
தானாகி வேறாகி தம்முள்ளே மூன்றாகி
வானாகி வழியாகி விளங்கும் பொருளாகி
வந்ததுவே வான்பொருள் வீடாம்.

Tuesday, March 11, 2014

”எரிதல்...!”


எரிதழல் கனன்று எரிகிறது என்னுள்
எரிதலுக்கும் எரித்தலுக்கும் இடையேதான் இருக்கிறேன்
எரிவதில் எரிதலை இரசித்தபடி - என்னை
எறிகிறேன் எரிதலில் எரியவே...

எரிதல் எரித்தலை விழுங்கி எரிதலும்
எரித்தல் எரிதலை பிண்ணி அணைத்தலும்
கூடலின் சாட்சியாய் இருக்கும் இரகசியம்
வாடலில் தொடங்கி வதங்கலில்

தொடர்ந்து காய்தலில் புகுந்து எரிதல்
தழலாய் உருமாறி கனலாய் மெருகேறி
தன்னைப் பற்றியதும் தான் பற்றியதும்
முற்றி முடியும்வரை எரிதல்

பற்றின் பால்மேவும் பற்றினை எறிய
பற்றி எரிந்து காட்டும் யுத்தம்
பலகாலம் நிகழ்ந்தும் புரிதலில் பிழையாய்
புனிதம் மட்டும் பேசியபடி...

கண்முன்னே கரைத்துக் காட்டும் அற்புதம்
ஆதாரம் அடையாளம் தொலைதலும் தொலைத்தலும்
அணுவில் பிரிதலும் கலத்தலும் இயல்பாய்
எரிதல் புரியும் அழகு

மனதை கரைக்க கற்கிறேன் எரிந்து
மாயை பொசுக்க கற்கிறேன் எரித்து
மமதை நசுக்க எரிகிறேன் மரித்து
மண்ணில் கரைக்க விழைகிறேன்

கறைகள் இல்லாத காவியம் எரிதல்
கரைகள் இல்லாத ஓவியம் எரித்தல்
முறைகள் சொல்லாத சீவிதம் எரிதழல்
மூப்பும் பிணியும் சாக்காடும்

முற்றும் தவிர்க்கும் பேரின்பம் எரிதல்
பிழையே இல்லா பெருந்தீ கொள்ளல்
பிழைத்தல் செய்யா ஆன்மா செய்தல்
பிழம்பாய் பிறவி எடுத்தல்

புழக்கம் புழுக்கம் புறத்தே எறிந்து
பழக்கம் வழக்கம் அகத்தே எரித்து
நடுக்கம் ஒடுக்கம் சகத்தே துறந்து
பற்றி எரிகிறேன் பரம்பொருளாய்

பற்றிலா பற்றில் எரிதலும் எரித்தலும்
பருப்பொருள் கருப்பொருள் கலத்தலும் பிளத்தலும்
எரிப்பொருள் கொண்டே இயக்கமும் இருத்தலும்
எரிவதே வாழ்வு எரிப்பதே வாழ்க்கை.
 

”உயிரெழுத்து...!”


இளந்தளி ரெனத்துளிர் நுண்ணுணர் மென்மன
இளமையின் இதழ்களில் பனித்துளிக் காதல்
பளிங்கென அமர அழகான மோதல்
பரவசம் காட்டும் செல்களின் இயக்கம்

சிலைக்கு சிலிர்த்து மலைக்கு வியர்த்து
மழைக்கு குளிரும் மகத்தான உணர்வில்
இழையோடும் இன்பம்தான் எத்தனை எத்தனையோ..?
கனவெது? நினைவெது? கண்முன்னே சுழல்வது

தலைநிமிர் தனித்திமிர் துளிர்த்திடும் மனத்தினில்
முட்டிவெடிக்கும் எண்ணங்கள் முத்துச்சிரிக்கும் கன்னங்கள்
கட்டி அணைக்கத் தூண்டும் கரங்களில்
கவிதைப் பூக்கும் விரல்களில் - உயிர்

ததும்பும் இதழ்களில் புன்னகைப் பூக்கும்
கதம்ப உணர்வுகள் கவின்மிகு மாலையாய்
நிரம்ப வழியும் இதயத்துள்ளே எங்கும்
நிரம்பிக் கிடக்கும் இன்ப நுகர்வுகள்

மின்னல் பிடித்து ஊஞ்சல் ஆடும்
மின்மினி பூக்கள் வாழ்த்து பாடும்
கண்மணி அவளைக் கண்டு விட்டால்
காட்டாறு கட்டவிழ்ந்த நிலையில் மனம்

மூவாறு பருவத்து முகிழ்ப்பில் திளைக்கும்
இருநான்கோடு ஒன்றும் சேருணர்வு களிக்கும்
ஒருகூட்டில் இருகிளிகள் வசிக்குமென் உயிர்க்கூட்டில்
பெருவெளியில் என்வீடு பால்வெளியில் தேன்கூடு

ஒளிமழையில் ஓரியாடி ஒலிமுகையில் தலைதுவட்டும்
ஒய்யாரம் என்வாழ்வு மெய்யாரம் என்னழகு
கண்ணுக்கு விருந்தாக கண்ணாமூச்சி கோளாட்டம்
கைக்கெட்டும் தூரத்தில் அடர்பிழம்பு சுழன்றாடும்

எக்கால மிடுகிற இடியெல்லாம் என்னெழுத்து
முக்கால முமிருந்து  முடிசூடும் பொன்னெழுத்து
கற்கால மும்மனிதப் பொற்காலமும் வடிக்குமென் எழுத்து
புவியென்ற நூலில் புகுந்தேன் தலையெழுத்து.

Monday, March 10, 2014

”புரிதல்...!”

வசந்தங்களை வாரிச்சுமந்து உன்னில்
வாரியிறைக்கும் இன்பச் சுரங்கம்
நானென்று இறுமாந்திருந்தேன்
இத்தனை காலமும்....

பொல்லாத பிள்ளையாய்
பொக்கிச புருசனாய் - என்
பெண்மைக்கு அரசனாய்
என்னகம் புகுந்தாய்....

இதயத்தின் உணர்வுகள் யாவுமூற்றி
இச்சைகள் தீர கச்சைகள் கலைந்து
மூச்சடைத்த வேளைகளில் - உன்
முத்துக் குளியல்களில்...

பொங்கும் இன்பக்கடல் உணர்வலைகள்
முத்தமாய் மாறிமாறி உன்மீதான - என்
முத்தமாரி பொழிந்தேன் வழிந்தேன்
மனதால் மொழிந்தேன்...

இடையூரும் உன் விரல்களில்தான்
இன்பத்தின் ஊற்றுகள் இருக்குமிடம்
அறிந்தேன் - என் பெண்மைக்குள்
பேரின்பம் கண்டவன் நீ...

எத்தனை நடந்தும் எத்தனைக் கடந்தும்
இத்தனை அரிய இரகசியம் உன்னில்
இருப்பது அறியாது போனேனே..!
இங்குதான் நான் மடந்தையோ...?!

நடந்த கொடுமைக்கு நான் உடந்தையோ...?
இதயம் சுமந்த சீவனின் இடம்தான் எனதோ..?!
இரண்டற கலந்தவளும் இரண்டாவதாய் கலந்தவளும்
இவளுக்கான சந்தர்ப்பமோ...?! சமூகத்தின் சடங்கில்

இழைக்கப்படும் கொடுமைக்கு நானும் இலக்கோ..?!
இதயம் கவருதல் இயற்கையா..? கலையா..?
இடவலம் அமர்ந்தவள்தான் நானா...?! - உன்
இதயம் அமர்ந்தவள் ஆவேனோ...?!

கடைவழித் தெருமுனைக் கடக்க முனைந்த
ஒருநொடிப் பொழுதுதான் உன்னில் உறைந்தவள்
என் கண்ணில் விழுந்தாள் எதேச்சையாய்...
என்னவன் சுமந்து திரியும் எழிலோவியம்..!

அன்பிலும் அழகிலும் பண்பிலும் பாசத்திலும்
இருவரும் பெண்கள்தான் அத்தான்... - உன்
ஆத்மாவை சுண்டி இழுத்தவள் அவளா...? நானா..?
பட்டிமன்றம் தவிர்க்கவே விரும்புகிறேன்

இத்தனைநாள் வாழ்க்கை சொல்லிக் கொடுத்த
இதமான உன்னிதயச் சுகமும்...
இன்னும் பிறவும் அனுபவித்தவள் ஆயிற்றே..?!
இறுக்கம் நெருக்கம் புரியாதவளா நான்...

மொட்டாய் அரும்பிய ஆசைகள்
கொத்தாய் எழும்பிய உணர்வுகள்
அவளின் சொத்தாய் சேமித்த உன் ”காதல்”
அறிந்தேன் என் அகமுடையவனே...

என்னை சுமந்தபடியே இதையும் சுமந்து
எத்தனை நாள் திரிந்தாயோ...? ஏக்கம் தளர்ந்தாயோ...?
பிள்ளைகள் பிறந்தாலும் நமக்கு - உன்
பிழியும் மனதின் ஆசைகளை என்ன செய்தாயோ...?

என் மன்னவா..! உன்னை உடுத்தினேனா...?
உன் உயிரைப் பிழிந்து படுத்தினேனா...?
என்றேனும் என் வாழ்வின் அர்த்தம் சொல்,
அன்றேனும் என்பாரம் இறங்கட்டும்...

அன்பில் அலைமோதும் இதயம் கண்டேன்
அவளும் உன்னைச் சுமந்தே அலைகிறாள்
இதயப்பிழை செய்யா இளம் பூங்கொடியாள்
இலையுதிர் காலத்து கொடியாய்...
என்செய்வேன்...! என்னிதயமே..!! சொல்.

அன்பனே எனக்காக உன்னாசைகள் துறந்தாயோ...?!
அன்புடன் எனக்கான ஆசைகள் சுமந்தாயா...?!
உன் விருப்பு வெறுப்பு விளம்புகிறாள்
விழிகள் விரிய வியக்கிறேன் நான்...

மொழிகள் கடந்த புரிதல் எங்களுக்குள்
மொழியும்போதே புரிய முடிந்தது
வழியே வந்தவள்தான் உன்வாழ்வாய்
வந்தவளென்று விழிகளால் வீசி மொழிந்தாள்...

உன் ஆண்மை ததும்பும் உணர்வுகள் அவளுள்
அவள் பெண்மை தழுவும் இன்பம் உன்னுள்
இவள் கண்டுகொண்ட உணர்வு வெடிப்பை
எப்படி எழுதுவேன் எனக்கானவனே...!

மனிதம் உரிமை கொண்டாடுதல் பிழையோ..?!
மனிதரை உரிமைக்கோரல் பெரும் பிழையோ...?!
உன் மனம் புரிந்த என் மனிதம் கேட்கிறது..?
மாமா..., என்ன செய்வேன் நான்...!

அன்பில் என்னை அணைத்து வென்றவனே..!
உனக்கான அன்பு இதோ துவளுகிறது...
வாழ்க்கை தொலைத்து வசந்தம் இழந்து
பிணம் போலும் நாட்கள் கழிக்கிறாள்...

பின்னும் யோசிக்கிறேன் அவளை பிரிந்த
பின்னும் யோசிக்கிறேன் இன்னும் இதயம்
இதற்கொரு விடைப்பகர வில்லையே...?
பெண்மை புரிந்தவன் நீ - பெண்ணாய்

உன்னை பெற்றவள் நான்....
கேட்கிறேன் என் கம்பீரமே...! ஒப்புவாயா..?
என்ன செய்யப் போகிறாய்...?
என்னையும் அவளையும்...?

வாழ்தல் என்பது என்ன மாமா...?
வாழ்ந்தவள் கேட்கிறேன் உன்னை
என்னை என்சுகங்களை இத்தனை பத்திரமாய்
என்றும் காத்தவன் என் காதலனே...!

உன்னை உன்சுகங்களை நான் என்ன செய்தேன்...?
ஒப்புக்கும் ஊருக்கும் உன்னோடு ஒட்டிக்கொண்டேனா...?
ஒரு பழக்க வழக்கமாய் உன்னைக் கட்டிக்கொண்டேனா?
உன்னில் என்னைக் கலந்தவள் கேட்கிறேன்...

உன் சுகங்கள் விரும்பும் நான்
உன்னில் வாழ்தலும் உன்னால் வாழ்தலும்
உன்னோடு வாழ்தலும் உனக்காக வாழ்தலும்
உனக்காக செய்தேனா...? எனக்காக செய்தேனா...?

என்னால் நீ எங்கேனும் வாழ்ந்தாயா சொல்
என் சுவாசங்களில் குடியிருப்பவனே..!
என் நலன்களில் உன்சுகங்கள் கண்டவன் நீ
என்னை சுகப்படுத்தி தன்னை முறைப்படுத்தியவன்

உன்னை சிறைப்படுத்தி விட்டேனோ என்னில்...?!
உன் சிறகுகள் வெட்டிய கரங்களில் என்கரங்களுமா..?!
எத்தனை மென்மையானவன் நீ...! உன்னை
இத்தனை வன்மையாய் காலம் தண்டித்ததோ...?!

இல்லை உன்காதல் துண்டித்த
இரும்புச் சூழல் எதுவாயினும்
உடைத்தெறியும் பேராண்மை உண்டேடா உனக்கு..
அன்பில் இடப்பட்ட அணையில் சிறைப்பட்டாயோ..?!

உன்காதல் வாழவிரும்பும் பேதைதான் நான்...!
ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்னைச் செம்மையாக்கி செழுமையாக்கி
உண்மையாய் வாழ்வித்தவன் நீ வாழணும்டா...

என்றும் காதலுடன்,
இல்லாள்.

Sunday, March 09, 2014

”இதயத் தூறல்...!”


இனியென்ன இரவையும் - என்
இனிய கனவையும் துரத்தி விட்டாய்
எந்த நொடியும் இரத்தப் பிரவாகம்
எனக்குள்ளே நின்று போகலாம்...

அந்த நொடிவரை இன்பம் பாய்ச்சும்
ஆனந்தம் தந்து கொண்டிரு...
ஆலாபனைகள் செய்யும் என்
ஆசைகளுக்கு எப்போதும்...

என்னை இயக்கும் இசையாயிரு
எப்போதும் உள் இரசிக்கும்
இதய கானங்களை என்னருகே
பாடிக்கொண்டிரு....

உணர்வுகள் குவித்த இதழ்களில்
உன்னை கொடுத்து என்னை
உனக்குள் இட்டு நிரப்ப இதயம் தா..!
இதழ்களின் வழியே....

புவியென்ன கவியென்ன
இதயமாற்ற தேடலுக்கு
அனிச்சையான ஆரம்பம்
அச்சாணியாகி கிடக்கிறது....

சில்லுகள் எத்தி விளையாடுகிறாய்
என் இதயத் தடாகத்தில்
உணர்ச்சி அலைகளில்
உயிர்த் தெறிக்கும் அழகை இரசிக்கிறாய்...

பிம்பங்கள் காட்டி நிசங்களை
மறைத்து கண்ணாமூச்சி காட்டுகிறாய்
கண்களும் மனமும் ஒருகாட்சி காண
கதவுகள் திறந்து காத்திருக்கிறேன்...

இமைகளில் வழங்கப்படும்
முத்தமாய் கண்களை அறியாமல்
கனவுகள் காட்டும் இரவினை
கவிதையின் காதலியாக்குகிறேன்...

இந்த இரவுகளிலும் - எனக்கான
இந்த கனவுகளிலும் எழுதப்படும்
உணர்வுக் குவியல்களை
உனக்கென்றே எழுதி வைக்கிறேன்...

இதுவும் கவிதை என்று...
இரசித்துவிட்டு போகாதே.

Friday, March 07, 2014

”நினைவுச் சுருக்கு....!”

வேறென்ன....
நீயும் நானும் வேறு வேறு
என்றானபின்.........

வேறென்ன......
நீரும் நிலமும் ஒட்டாது
என்ற உன் நியாயங்களுக்கு முன்...

வேறென்ன....
நிழலும் நிசமும்
முரண்பாடான உன் வாதங்களில்...

வேறென்ன....
விருப்பும் வெறுப்பும்
விடாப்பிடியாய் துரத்துகையில்....

வேறென்ன....
இருப்பு கொள்ளா உன்
நினைவுகள் சுமந்து திரிகையில்....

வேறென்ன....
தாயும் நீயும் எனக்கு
வேறில்லை என்றானபின்....

வேறென்ன....
தனித்தனியான எண்ணங்கள்
தவிடிபொடியான வாழ்வில்....

வேறென்ன.....
பிரிதொரு நாளில் - ஏன்
பிரிந்தோமென நினைக்ககூடுமெனில்...

வேறென்ன.....
இலைமறை காயாய்
உன்னாலும் இருக்க முடியுமெனில்...

வேறென்ன....
மனதில் மதில்சுவர் எழுப்பும்
மகத்தான உன் சிந்தனைகளில்....

வேறென்ன....
ஒட்டும் உறவும்
ஒட்டியும் ஒட்டாத உறவுக்குள்...

வேறென்ன.....
எங்கோ வெறிக்கும் பார்வைகள்
நிலம் நோக்காது எனில்....

வேறென்ன....
நீயேனும் நலமாக
நானற்று போவதில்.....

வேறென்ன....
பெரிதாய் இங்கே
நினைவுகள் தாண்டி......

Thursday, March 06, 2014

”தகிப்பு....”

கொந்தளிக்கும் உணர்வுகளில்
கொப்பளிக்கும் நினைவுகள்
சப்தமிட்டு வெடிக்கின்றன
குமிழ்களாய்.....

இறப்புக்கும் பிறப்புக்குமான
நீண்ட இடைவெளியை
இட்டு நிரப்பத் தெரியாமல்
மனத் தடுமாற்றம்....

குண்டும் குழியுமான
மனித உறவுகளில்
மடிந்து போகிறது என்னிடம்
மிச்சமிருக்கும் மனிதம்.....

புத்திக்கும் தேடலுக்குமான
நீண்ட போராட்டத்தில்
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது அனுபவம்....

நிகழ்வுகளின் நிசங்களில்
கோரைப்பற்கள் ஈட்டிகளாய்
கிழித்து எறிகிறது
உள்ளிருக்கும் துணிச்சலை....

பரிசுத்தமான மனதில்
பலகார பட்டிமன்றம்
நடத்துகிற காலம்
சிலந்தி வலையாய்....

ஆயுதம் பிடித்தக்கைகள்
அமைதியின் அடையாளம்
பெருவெளி வெடிப்பாய்
சிரிக்கிற மனசாட்சி....

கொலையும் புனிதம்
கொல்வதும் புனிதம்
சத்தமாய் இல்லாமல்
சாட்சியும் இல்லாமல்....

சைவவிரத அரிமாக்கள்
சதைதின்ன காத்திருக்கும்
சந்தர்ப்ப அவகாசத்தில்
இழுபறியாய் வாழ்தல்....

துப்பாக்கியை முத்தமிட
இதழ்களை பழக்கப்படுத்த
ஈரமும் இரத்தமும்
காய்ந்த மனங்களில்....

கண்ணீர் ஆவியாகும்
கன்னத்தின் தகிப்பில்
எண்ணமும் எரிகிறது
ஏக்கப் பெருமூச்சாய்....

Sunday, March 02, 2014

”முழங்கு தமிழ்...!”

எட்டுக எட்டுக வையகம் எட்டுக
கொட்டுக கொட்டுக வானுர கொட்டுக
மானுடம் பிறந்த மண்கதை கொட்டுக
மாந்தர் குழாம் காதில் உறைக்கவே

தட்டுக தட்டுக பண்ணிசை தட்டுக
பைந்தமிழ் பாடியே நல்லிசை தட்டுக
வாய்மொழி யாம்தமிழ் வையகத் துதித்த
தொன்மொழி யாம்புகழ் கொண்டிட கொட்டுக

இலக்கண மரபுகள் பிறந்ததும் தமிழிலே
இசையியல் மரபதன் ஊற்றாம் தமிழ்
இன்பத்தை பகிரவே இயல் இசைத்தமிழ்
உணர்வெலாம் ஊற்றாக பொங்கிடும் தமிழ்

பன்னெடுங் காலமாய் பாடிய தமிழ்
தன்னெடுங் காவியம் மேவிய தமிழ்
பொன்னேடு பொதிந்த பொக்கிசத் தமிழ்
என்னாடு தந்த உயருயிர் தமிழ்

பன்னாடுங் கடந்தே பல்கிய தமிழ்
பன்னாடும் கலந்தே ஒல்கிய தமிழ்
உள்ளாடும் உணர்வென ஓதிய தமிழ்
உன்னுள்ளே ஊணிலே ஊறிய தமிழ்

கசையடி பட்டும் இசையடி சொட்டும்
கவின்மிகு கவிதைகள் இதழ்வழி கொட்டும்
புவின்மிகு காதலும் புண்ணிய சாதலும்
தன்னுடன் பிறந்த காப்பென கொட்டும்

வானிசை வயலிசை வயங்கு கொல்லிசை
தேனிசை பூவிசை புயலிசைப் பூட்டியே
பொற்சபை சிற்சபை பொன்னொளி வீசியே
எண்ணருங் காப்பியம் தன்னுலே கொண்டிடும்

தமிழ்மறை ஓங்கிய தனித்தமிழ் நாடே
தமிழரை சுமந்தே தமிழை வளர்த்த
தமிழர்தம் பூமியில் அமிழ்தம் தமிழே
தான்சென்ற திசையெங்கும் தழைத்திடு தமிழே

Saturday, March 01, 2014

”தமிழின் தாகம்...!”

என்னை நீ கொன்றதும்
என்னுடல் சதை நீ தின்றதும்
எலும்புகள் உடைத்து மென்றதும்

புத்தியில் உறைந்தே கிடக்கிறது
புழுக்களென எண்ணி நசுக்கியதும்
புன்னகை வீசி மறைத்ததும்

புதைந்தா போய்விடும் பூமியில்....

உன் தாகத்துக்கு
என் கண்ணீரை குடித்தாய்
உன் தேகச்சத்துக்கு

என் குருதி உறிஞ்சினாய்
எத்தனை அவலம் உண்டோ
அத்தனையும் நிகழ்த்தி காட்டியது

நிழற்படமாய் இருக்கிறது
நினைவுகளில் என்றும் அழியாது...
நீ என்னை கொன்றது

உன் விழிகளின் இமைகளில்
உறுத்தும் சிறுதூசு நான்
உன் உள்மனம் எழுப்பும்

கேள்விகளில் என் வேள்விகள்...

பிணம் தின்ன நீ
பழகிய நாட்களில் தான்
சதை இழந்தேன் என்பதை மறவாதே...

பின்னிய சதிவலைகளில் தான்
பின்னும் உயிர் இழந்தேன்
பிழைகளின் பிறப்பிடமே - என்

வரலாற்று பிழைகளின்
பிறப்பிடமாய் நீ மாறிப்போவாய்
தகப்பன் கறிதின்று உயிர்வாழும்

பிள்ளை நீயென்று அறியாது போனேனே...

தவறாது உன் தவறுகள்
தப்பாது என் வரலாற்றில்
தடங்கள் பதிக்கும் மறவாதே....

இதழ்களில் முத்தமிட்டு
இடையில் கத்தி சொருக கற்றதெங்கே...?
இன்னும் பிழை செய்....

குற்றுயிராய் இருந்த என்னை
குலைநடுங்க கொல்லும் வித்தை
குழிகளில் போட்டு புதைத்து

விளம்பரங்களில் அமைதியை
வீசி சென்ற புதிய யுக்தி
பூசிமறைக்க முடியாத உண்மைகளை...

நாசிமுழுக்க சுமந்து திரிகிறேன்
நாடு நாடாய் அலைந்து கழிகிறேன்
நாற்நாறாய் கிழிந்து மடிகிறேன்

விழுந்து கிடக்கிறேன் விடியலுக்காய்...

பிறந்த மேனியாய்
பிணம் தின்ன விரும்பிய
தினங்களில் தான் புதைக்குழிகள்

பிறந்தன என்பதை மறவாதே..!
பிழைகளில் எழுதிய பிழையான
உன் வரலாறுகள் திருத்துவேன்

ஆணிவேரிலா ஆலமரம் நீ...
ஆழ்மனம் கொன்ற மானுடம் நீ...
பாழும் உலகில் பழிசுமக்க போகிறாய்

கற்பை சூறையாடி உனக்கொரு
கல்லறை கட்டிக்கொண்டாய்
கடவுளை கொன்று விட்டு...