Monday, September 30, 2019

"குறிஞ்சி..!" (பாகம் -6)

குறிஞ்சி (பாகம் -6)
பழங்களும் காய்களும் கிடைக்கா விடத்து
கொட்டைகள் காய்ந்த வித்துகள் கூலங்கள்
கிழங்குகள் தண்டுகள் தவிரவும் தாமுண்ண
முட்டைகள் விலங்குக் குட்டிகள்

பறவைகள் பலவும் தேடியோடி களைத்து
பசிக்காக பலகாதம் நடந்தும் ஓடியும்
புசிக்கக் கிடைக்காத காலமும் உண்டு
இரைக்க இரைக்க இரைத்தேடி

உழலும் கோடையில் தாகமும் வறட்சியும்
துரத்தும் கொடுந்துயர் வருத்தப் போராடும்
ஊணுயிர் நெடுவழி ஊடறுத்து ஒற்றைவழி
நடக்க நோவும் கால்கள்…!!

சுழலும் காலம் நகர நிகழும்
உயிர் சுழற்சித் தூண்டல் பலவும்
பதியும் நினைவகச் செல்களில் நிகழும்
தொடர் பதிவுகளில் தோன்றும்

உயிரின மரபணுத் தோற்றமும் மாற்றமும்
காலத்தில் நீடித்து நிலைக்கத் தூண்டும்
உடலியல் மாற்றம் நிகழ்ந்து நிகழ்ந்து
உடல்கள் மாற்றி மாற்றி

நீளும் உயிரியல் நீட்சியில் நாளும்
காலம் வளர்த்த உயிர்கள் பலகோடி
சிறியன முதல் பெரியன வரையில்
வகையாக தனித்தனித் தொகுப்புகள்

ஒவ்வொரு உயிர்த் தொகுப்பும் ”குடும்பம்”
இனவாரி உயிர் குடும்பம் யாவிலும்
ஒத்தப் பண்புகள் ஓங்கி இருக்கும்
சிறியனப் பெரியன ஓரினமாக..!

இடை வந்தன மரித்துச் செரித்தன
மண்ணில்..! தொடர்நிலை விட்ட உயிர்
தொடரில் தோற்றதுப் போகவும் எஞ்சிய
உயிர்கள் இடரில் மிஞ்சியவை..!!

உயிர்ப் பிழைத்தல் எளிதல்ல இயற்கையில்
உண்ண உயிர்க் குடிக்கும் சூழலியல்
செதுக்கிச் செதுக்கி உருவான மாற்றங்கள்
உருவங்கள் தாங்கும் உயிர்கள்..!!

மரபியல் பிழைகள் நிகழ்ந்த உயிரியல்
செல்களில் தாங்கிப் பிழைக்கும் தகுதி
இழந்து காலத்தால் நிற்காது அழிந்து
ஒழிந்தன உயிரியல் தொடரில்

பருவங்கள் இசைத்தப் பக்கத் தாளங்கள்
கலவியல் கருவியல் உடலியல் மாற்ற
காரணக் கருவியாம்..! தாவரம் விலங்கு
யாவிலும் மரபியல் பதிவுகள்

தொகுதிகள் தோறும் தோன்றும் விலங்குகள்
தாங்கிப் பிடிக்கும் தனித்தன்மை ஓங்கும்
ஓரின ஒற்றுமை ஒவ்வொன்றின் வேற்றுமைப்
பண்பில் உருவில் நிலவும்

உணவுச் சார்ந்து உருவாகும் உடல்
உறுப்புகள் தற்காப்பு அவையங்கள் தோன்றும்
உள்ளும் புறமும் காலத்தால் மாற்றம்
உறுதியாய் நிகழும் புவியுள்

பலமுள்ளது வாழும் பலமற்றது வீழும்
உடல் உறுதியே நிலைக்க வழியாகும்
பலம் காட்டத் தயங்கும் எதுவும்
பலியாகும் பலத்துக்கு விருந்தாக…!

தப்பித்தல் பிழைத்தல் மறைதல் மறைத்தல்
தந்திரம் கற்றலே பலவீனத்தின் வாழ்வு
தன்திறன் இல்லா உயிர்கள் தந்திரம்
செய்தே தப்பிப் பிழைக்கும். 



Friday, September 27, 2019

"குறிஞ்சி..!" (பாகம் –5)




"குறிஞ்சி" (பாகம் –5)
பூத்தனப் புகுந்துப் பூந்தேன் குடித்து
முரலும் வண்டுகள் மயங்கி மதர்த்து
உருளும் உள்மடல் உறங்கும் பொழுது
பகலும் உருண்டு இருளாகும்

பால்நிலவு உலவும் பால்வீதி ஒளிரும்
சுடர்மீன்கள் பலவும் பார்த்து நகைக்க
மடல்மூடும் மலரில் மல்லாந்து கிடக்க
பனிப்பொழிந்து மொட்டு முனகி

இதழ் வெடிக்கும் இன்னிசைக்கு வண்டுகள்
இமை திறக்கும் விடியலில் கதிரவன்
ஒளித் தீண்டும் மடல்விரிய விட்டு
விடுதலை வானில் பறக்கும்

கள்குடித்த கருவண்டுகள்..! காடுகள் வளர்க்கும்
மந்தை மான்கள் ஆடுகள்மேயு முகடுகள்
கற்றைப்புல் மேல்கவனம் வைத்து எதிரிகள்
மீதிருக் கண்ணும் வைத்து

அச்சம் ஒழுகும் பார்வையில் நாளும்
மிச்சமாய் ஒழுகும் உயிர்…! தவிப்புடன்
தாவித்தாவி உயிர்ப்புடன் இருக்க புல்லுடன்
போராடும் கொடுந்துயர் வாழ்க்கை…!

அரியும் நரியும் அத்தொடு சேர்பகையும்
புலியும் பெரும்பூனை இனங்களும் வலிய
வழிமறிக்கும் உயிர்குடிக்கும் இடர்களில்,- ஒன்றை
இழந்து மற்றவை தப்பும்

தந்திரம் மரபெனக் கொண்டன மந்தைகள்..!
உயிர் வாழ்தலின் உன்னதம் புரிந்தே
ஒற்றுமை கற்றன அஃறிணை அவைகள்…?!
குற்றுயிர் நடுங்க குட்டிகள்

ஈனும்..! போராடிப் போராடிக் குட்டிகள்
பேணும்…!! ஒன்றுடன் ஒன்று ஒற்றுமை
கண்டு,- ஓரினம் காக்கும் வேறினம்
கண்டு நட்புப் பாராட்டும்

தகைமையும் உண்டு,- எவை எவை
எவற்றுக்கு உதவும் அவை அவை
அடையாளம் கண்டு ஒத்து வாழும்
வாழ்க்கைப் பழகியும் வாழ்ந்தன..!

கரியும் பரியும் கூட்டமாய் குடும்பமாய்
எதிரியும் வியக்க வாழ்ந்துக் காட்டின…!
கருதிய எதிரியை காலால் மிதித்தே
தப்பித்துக் காக்கும் தலைமை…!

ஒப்பிலாப் பண்புகள் ஒவ்வொன்றும் கற்றன..!!
கற்றவைச் சேர்ந்து மரபுகள் ஆயின.!
மற்றவை யாவும் மடிந்தே போயின
உற்றது உரைத்தேன் காண்..!

பல்லுயிர் பெருக்கமும் நெருக்கமும் பன்முகத்
தேவைகள் சார்ந்தே இயல்பாய் நடந்தன..!
தப்பிப்பிழைத்து தன்னினம் பேணல் எப்படி..?
கற்றது நின்றது காலத்தில்…!

அச்சுறுத்து மச்சங்க ளாயிரம் ஆயிரம்
அண்டவும் ஒண்டவும் இடம் தேடும்
அத்தேவை கொண்டவை தங்கும் இடம்
தான்தேடிக் கொண்டன வெற்பில்..!!

விலங்கொடு விலங்காகி விலங்குடன் பழகி
விளங்கிக் கொள்ள வேண்டியது ஏராளம்..!
முதுமயிர் பூத்த முரட்டுடல் பலம்
உதவாத விடத்தே கற்றல்

தொடங்கிய காலம் மந்திப் போல்
குந்தியும் தாவியும் குதித்தும் எஞ்சியப்
பண்புகள் யாவிலும் கற்றலும் தெளிதலும்
மானுட மரபுகள் ஆனது. (தொடரும்)

"குறிஞ்சி..!" (பாகம் - 4)



குறிஞ்சி – (பாகம் - 4)
இளவேனிற் காலத்துக் குறிஞ்சி நிலமகள்
குமரிக்கோல அழகியல் காட்டும் பருவம்
குளிர்காற்றும் கொஞ்சும் முகிலும் உலவும்
பஞ்சுநிகர் பனித்தூவல் மிதந்து

நெஞ்சம் உறையும் குளிரை வீசும்
புலரும் பொழுதுகள் நடுங்கும் குளிர்
மலரும் குறிஞ்சி தன்னழகு மிளிர
தாகம் தணியும் அழகு..!

காடுகள் கொடிகள் குறுஞ்செடிகள் புற்கள்
குட்டைப் புதர்கள் முட்செடிகள் இன்னபிற
தாவரம் துளிர்த்துச் செழித்து பசுந்தளிர்
பரப்பும் பச்சைப் பட்டழகு..!

பார்ப்பவர் இச்சைத் தூண்டும் எழில்
பூண்டு உயிர்களை உசுப்பும் உந்தம்
காந்தம் போல் கவரும் கவர்ச்சியில்
புணர்ச்சி நிகழும் காலம்..!

முடங்கிக் கிடந்த சோம்பல் விலக்கி
முயன்று வாழும் வேகம் கொடுக்கும்
சூடும் குளிரும் சூழும் உடல்கள்
வாழும் நிலை வசந்தம்…!

தூறலும் சாரலும் கலந்து தூவும்
பனியும் குளிரும் கவிழ்ந்து சூழும்
கதகதப் பூட்டும் காடுகள்..! முழைக்குள்
முடங்கிய உயிர்கள் சிலிர்த்தெழும்…!

தன்னைத்தான் வளம் கூட்டும் தற்சார்பு
நிகழ்த்தும் தாவர மட்கும்,- மட்கும்
தானுண்ண வலிந்து மேல்வந்து நெளியும்
புழுக்கள் பூச்சிகள் வண்டுகள்..!

கூட்டுப்புழுக்கள் கூடுடைத்து உலகம் உலாவ
முட்டைகள் உடைக்கும் மூக்குள்ள உயிர்கள்…!
பறக்கும் சிற்றுயிர் பல்லாயிரம் சிறகடிக்கும்
குறிஞ்சியின் கூந்தல் மலர்கள்…!

தாவர உண்ணிகள் தாண்டவம் காணும்
தழைத்த இலைகள் செழித்த உணவாகும்
கொழுத்த உடல்கள் பருத்துத் திமிரும்
கோலாகல விழாவில் குறிஞ்சி…!

கொழுத்த உடல்கள் பார்த்து ஏங்கும்
ஊண் உண்ணி விருந்தாக்கும் களம்..!
உணவுப் பஞ்சம் நீங்கும் உயிர்கள்
உயிர்ப்புடன் பல்கிப் பெருகும்

காலையும் மாலையும் பூத்துக் குலுங்கும்
குறிஞ்சியும் கட்டழகு சுமந்து நிற்கும்
வண்டுகள் வலம் வரும் – பொன்
வண்டுகள் ஒளிரும் பொழுது…!

இரீங்கார இசையுடன் கலந்து பாடும்
பல்வகை பறவைகள்..! பிளிறல் அலறல்
குமுறல் கதறல் கொஞ்சல் மிஞ்சும்
ஒலிகள் விஞ்சும் குறிஞ்சி…!

கூட்டுப் பூக்கள் தாங்கும் காம்புகள்
ஒற்றை மலர் தாங்கும் தண்டுகள்
சரமெனத் தொங்கும் கொத்து மலர்கள்
தென்றல் தலை துவட்டித்

தாலாட்டும் கொள்ளை அழகில் மகரந்தம்
மணக்க விருந்துப் படைக்கும் காடுகள்
உயிர்களின் உணவு மாநாட்டுத் திடல்…!
கொஞ்சும் அழகில் குறிஞ்சி….!  (தொடரும்)



Wednesday, September 25, 2019

குறிஞ்சி – (பாகம் –3)




குறிஞ்சி – (பாகம் –3)
அடர்மழைத் தொடரும் காலங்கள் – மின்னல்
இடிமழைத் தருமச்ச முடன்கொடு மிருள்
மிரட்டும் வெள்ளம் வழுக்கும் பாறைகள்
உருளும் பள்ளம் தொட்டுத்

தொடரும் முன்பனிச் சாரலும் தூரலும்
மூடுப்பனி பின்வரும் காலமும் – தனக்கு
கொடுமைத் தொடரும் வேளைகள் என்றாக
தப்பிக்கும் தருணம் தேடியப்

பொழுதுகள் கடும்பசி விரட்டக் காத்திருக்கும்
கொடுமிருகத் தொல்லை எட்டும் எல்லை
உயிரின் வேரில் ஊற்றிய அமிலம்..!
நெடுங்காலப் போராட்ட தொடர்ச்சியில்

நல்லனத் தீயன வகைப் பிரித்தான்
அஃறிணை யாவிலும் நன்மை தீமை
கண்டான் – புரிதல் கொண்டான் வாழ்வில்
வரும் இடர் களைய

வழியும் தற்காப்பு முறையும் தெளிந்தான்
மிருக என்பும் கல்லும் கைத்தடியும்
காப்புக் கருவிகள் கொண்டான் – இன்னும்
இடர்கள் தோறும் கற்றான்

தோற்றும் இழந்தும் கொடும் தாக்குற்று
இயற்கைத் தருமிடர் மிருகத் தொல்லை
மீண்டான் மரபுவழி இனம் காத்து
நீண்டான் உயிர்வாழும் பேரினமாக..!

ஓடியும் ஒளிந்தும் வாழ்ந்தவன் வழியில்
கோடையும் கொடும் வேதனையும் வந்தன..!
ஒட்டும் பொடியும் உச்சிமேல் வெயிலும்
கொட்டும் தேளென கொடுமை..!

ஒட்டிய வயிரும் காய்ந்த வாயும்
தள்ளிய நாக்குடன் தளர்ந்த நடையும்
நீருக்கும் உணவுக்கும் போட்டியும் வந்தது
உயிர்வாழப் போராடும் உயிர்கள்..! 

ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி – தற்காத்து
தம்தேவைக் காத்து பிழைத்தன…! ஒன்றை
ஒன்றுத் தாக்கியும் தப்பித்தும் போராடிப்
பதுங்கி வதங்கிப் பிழைத்தன..!

அருவிகள் காய்ந்து ஒழுகும் நீரில்
ஆங்காங்கு சேர்ந்தக் குட்டையும் குளமும்
சுனையும் மொத்த உயிர்களின் கூடாரம்..!
சொட்டும் நீரும் அமிழ்தம்..!!

சுடும் பாறைகள் காய்ந்த முட்கள்
முறிந்த மரங்கள் கூர்நுனிக் கிளைகள்
அடர்ந்த வனமும் அழிந்த நிலையில்
காய்ந்தப் புதர்கள் அண்டிய

உயிர்கள் அழிவதும் கருகும் வனத்தில்
போராடித் துளிர்க்கும் சிற்சில மரங்களும்
உயிரைப் பிடித்து நிற்கும் கள்ளிச்செடிகளும்
குடையாக நிழல்தரும் கோடை…!

மாண்ட உடல்கள் கிடக்கும் இடத்தில்
மீண்ட உயிர்கள் மோதும் களத்தில்
நீண்டப்பசி விரட்டும் வேகம் – பலம்
காட்டும் உணவுப் போர்…!!

இரசிக்கவோ உருசிக்கவோ இடமற்றக் காலம்
இரவோப் பகலோ வேட்டைகள் தொடரும்..!!
ஊணுண்ணி விரட்டும் உயிர்ப்பசிக் கொலைகள்
தானுண்ணத் தேடும் தவிப்புகள்…!

கடும்போர் நிகழ்த்தும் கோடையும் – அதனுடன்
கைக்கோர்த்த வாடையும் சுழற்றி அடிக்கும்
பெரும் கொடுமை நிகழ்த்தும் இயற்கை
கருகும் உயிர்கள் வீழும்…

குற்றுயிர் நடுங்கும் கொலைக் களம்
சிற்றுயிர் ஒதுங்க இடம் தேடும்
பாறையில் பூத்தக் கள்ளியில் தேனூரும்
கொல்லும் கோடையில் உயிர்வாடும்…! (தொடரும்)



Monday, September 23, 2019

"குறிஞ்சி..!" – (பாகம்-2)

              குறிஞ்சி – (பாகம்-2)
காட்டை ஆள்வதும் அதிலூரும் மிருகங்களை
வேட்டை ஆடுவதும் கல்லில் கருவிகள்
கட்டுவதும் மரங்கள் வெட்டுவதும் – பற்றும்
பசித்தீரப் பெரும் பாடாகும்..!

விலங்குப் பழகி விளங்கிக் கொண்டு
பறவைகள் பார்த்து தீங்குகள் கண்டு
அஃறிணை கொடுத்த உயர்வினை கற்று
உயர்ந்து உயர்ந்து உயர்திணையாக

மானுடம் வளர்ந்த கதைகள் பேசும்
மலைகள் ஈன்ற குன்றுகள் தோறும்
மத்தளம் கொட்டும் அருவிகள் கூறும்
மாந்தர் இனத்தின் நிலைமாற்றம்

தான்தோன்றித் தாவர இனம் கண்டு
தான் உண்ணத் தகுந்தது தகாதது
சிற்றுயிர் கொண்டு சிறுதானியம் கண்டு
உணவின் வழியில் உணர்வு

ஊடாடும் உண்மை தெளிந்தான் – மனதால்
உடலால் உறுதியை பேணும் உன்னத
உணவுக் கொடுக்கும் காடுகள் காத்து
உடனுறை உயிர்கள் காத்து

அல்லும் பகலும் அலைந்த குன்றுகள்
மடுக்கள் சரிவுகள் எங்கும் - தங்கும்
இடம்தேடி தானுன்ன உணவும் தேடி
முடிவில் குறிஞ்சிப் பெண்ணோடு

முயங்கும் வாழ்க்கை தெவிட்டாத நல்லின்பம்
திணையோடுத் தேனும் தின்னக் கொடுத்த
துணையோடு தானும் கன்னம் கொடுத்துக்
காதல் விளையாடும் களம்

மாதர் மீதொரு மயக்கம் மீளாது
வேட்டை வழி வீரம் காட்டி
கயல்விழிக் காட்டும் மடந்தை மடித்தேடும்
காதல் பூத்த மனம்

தனக்கும் தன்னைச் சேரும் துணைக்கும்
தானே தேடித்தேடி தேவை தீர்க்கும்
தேவையே தனிமனிதன் ஏற்ற முதல்
பொறுப்பு இப்புவியுள் காண்

ஆடையற்ற ஆடவரும் பெண்டிரும் ஆங்கே
ஆர்வமும் ஆசையும் கொண்டுலாவ தன்னை
மூடிமறைத்த மயிர்ப் போர்வை உடுத்தி
கூடிநிதம் மகிழ்ந்த நிலம்

குளிரும் கோடையும் கூடிக்கூடி வாடையும்
வருத்தும் வாழ்க்கை ஓடியாடி பேடையொடு
தழைக்க இயற்கை விடுக்கும் இடர்களில்
பிழைத்தல் என்பதே பெரும்பாடு..!

மனிதன் இயற்கையை கற்றது,- குறிஞ்சியில்
தொடங்கி நீள்கிற மரபுத் தொடரில்
அடங்கிக் கிடக்கிற ஆற்றல் மூலங்கள்
எதிர்ப்பில் வாழ்விக்கும் ஏணிகள்…!

அஞ்சியஞ்சி நெஞ்சம் தவிக்கும் இடர்கள்
ஆயிரமுண்டு – விஞ்சும் வழிகள் கண்டு
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மரபின் நீட்சியில்
மானுடம் துளிர்த்த மலைக்காடு…!

உணவைச் சேமிக்கும் உன்னதப் பழக்கம்
உற்றதால் உற்ற இடர்களால் கற்றதே…!
உலர வைத்த உணவுச் சேமிப்பு
உணரத் தேவை உற்றக்காலை

பக்குவப் பகுமானம் பெற்றதே - மாந்தர்
பகிர்ந்து உண்ணும் இனமாக மாற
பசிப்பிணிக் கொல்லும் பருவங்கள் யாவும்
பாடங்கள் நடத்தும் காலம்..!   (தொடரும்)



Saturday, September 21, 2019

”குறிஞ்சி..!” (பாகம் –1)




      ”குறிஞ்சி..!”  (பாகம் –1)
நிலமடந்தை பருவம் எய்திய பருவம்
ஊண்பொதி கைப்பூப் பெய்திட உருவம்
உண்டான மாற்றம் கொண்ட கொங்கை
முகடுகள் முளைத்தக் காலம்

உயிர் வளர் வளம் யாவும்
உட்பொதி ஊணுள் தாங்கி – பயிர்
உலகாகு முகடுகள் தாங்கும் மயிர்
செறிந்த வளம் காடு

கார்முகில் உலாவும் கொங்கைக் காம்பில்
காமுற்றுப் பொழியும் வெள்ளம் வாங்கி
வழியும் அழகில் பிறக்கும் அருவிகள்
உயிர் செழிக்க ஓடிப்பாயும்

பள்ளங்கள் பக்கத்துப் புடைப்புகள் நடுவே
செல்வங்கள் சேருமிடம் செழிப்பில் – இயற்கை
நலம்பேண சிற்றுயிர் தோன்றிய இடம்தான்
”குறிஞ்சியாம்” கேள் குலமகளே..!

அருவியும் குருவியும் எழுப்பும் இசையில்
அகடும் முகடும் செழிக்கும் செழிப்பில்
பல்லுயிர்ப் பெருக்கம் பலகாலம் நடக்க
பரிணாமம் கண்டதுகாண் மானுடம்…!

மண்வரு முன்னே மானுடம் வந்தது
பொன்னெனத் திகழ்ப் புவியுள் உயிர்த்த
மாமகுடம் மானுடம்…! நிலத்துள் ஊர்ந்து
நடந்து நிமிர்ந்த பரிணாமம்

காடுகள் தோறும் காமுற்று காமுற்று
பண்பட்ட காலம் முளைத்த காதலில்
பருவம் பூத்துச் சிரித்தது குறிஞ்சி…!
மனிதம் பலகாலம் பண்பட்டது

உயிர் உடல் தேவை கடந்து
அறிவுத் தேடல் தொடங்கிய காலம்
உடல்மொழி பிறந்தது – ஊமைகள் ஓலமிட்ட
ஓசைகள் சுருங்கி விரிந்து

சொற்கள் ஒலிக்கப் பிறந்தது முதல்மொழி..!
கற்கால ஒலிகள் காலப்போக்கில் செதுக்கி
கவிப்பாடும் மொழியாகி இயலாய் இசையாய்
இயற்கை வழியில் வளர்ந்தது..!

ஒலிக்கும் ஒலிகள் உள்வாங்கி உள்வாங்கி
ஒலிக்கும் கருவிகள் உருவாக்கி உருவாக்கி
ஒலிக்கும் ஒலிகள் ஒலிக்கும் பொருள்வாங்கி
ஒலியை உயிரின் மொழியாக்கி

மொழிந்து மொழிந்து மொழியை வளர்த்து
அளந்து அளந்து காலம் கணித்து
உணர்வுக்கு உயிர்ச்சுவை ஊட்டும் திறம்
வளர்த்து உறவுக்கு பெயரிட்டான்

உணவுக்கு ஊரும் நிலத்துக்கு காணும்
வனத்துக்கு வானுக்கு – தாவரம் விலங்கு
தம்முடன் தொடர்புடை யாவுக்கும் தான்
வைத்தான் காரணமாய் பெயர்..!

உணவைத் தேடியவன் உள்ளுறை மருத்துவம்
உணவில் கண்டான் உற்றநோய் தீரவே…!
கற்றல் என்பது காலத்துடன் சேர்ந்தே
கற்றது மானுடம் கருத்தாக…!

உண்பதும் கற்பாறைக்குள் உறைவதும் தொடர
காண்பதை கோடிழுத்து காண்போர் காண
வரைந்த கிறுக்கல்கள் முதலெழுத்து,- ஆம்
கற்பாறைகளே மானுட கரும்பலகைகள்..!

குறியீடுகள் எண்ணக் குறியீடுகள் தாங்கும்
குறிப்பில் குறிப்பு உணர்த்தும் உணர்வுச்
செறிப்பில் சிறப்புற பழகும் பண்பும்
கற்றான் கற்றல் அறியாமலே…!   (தொடரும்)


Tuesday, September 17, 2019

”ஆசை....!”



கல்லை முத்தமிட கண்ணாடி ஆசைப்பட
கல்லின் கைப்பட்டு நொருங்கும் கண்ணாடி
சொல்லும் அதுபோலாம் சொல்லும் இடமும்
சொல்லை கேட்ட மனமும்

ஒற்றை இதழ் தாமரைக்கு முத்தமிட
ஏரித்தாமரை மேல் ஏனாசை வந்தது..?
பூரித்த மனதோடு பூவென்ற நினைப்போடு
ஆழமறியா ஆசை ஏன்..?

பூக்களின் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கும்
நாறுக்குத் தெரியுமா மலர்களின் மணம்..?
வேர்களின் கண்ணீர் வெளியே தெரியாது
ஊரார் முன் மரமாக…!

கொலை ஆயுதம் செய்பவன் இதயமறியாது
கொல்லப்படுவது இன்னொரு இதயம் என்று..!
அள்ளக்குறையா அமுதம் ஆறாய் ஓடினாலும்
முகரத் தெரியாதவள் குடம்காலி…!

ஆசை ஒழுகும் ஓட்டை பாத்திரம்
ஆயுளுக்கும் பழகினாலும் ஆசை நிரம்பாது…!
பாயில் படுத்தும் புழங்காத இடத்துக்கு
அடங்காத மனதால் உறக்கம்பாழ்…!

சிக்குண்ட வலைக்குள் தான்சிலந்தி வாழ்கிறது
சிக்காமல் சிக்கவைக்கும் கலையை கற்றதனால்…!
சிக்கிக்கொண்ட சிற்றுயிர் கதறி அழுகிறது
சிக்கல் எடுக்கத் தெரியாமல்…!

நாணல்கள் நதிக்குள் மூழ்கியும் வாழும்
நாணமும் நளினமும் பூசியப் பெண்போல்
அழகுக்கு ஆயுள் குறைவென அறியாது
பழகும் மனதுக்கு அறிவுப்பாழ்…!

கூண்டுக்குள் புழுதான் பறக்கும் பட்டாம்பூச்சியும்
கண்டுகொள் நல்மனமே..! மழைக்கால வானம்
கருப்புதான்..! மனிதரின் மனமும் காண்..!!
ஆசைக்குள் ஆசையை புதைத்துவிடு…!!

Sunday, September 15, 2019

”மூலம்...!”



ஊழியுல ஊழ்தனை உயிர்நாடி உற்றகால்
தாழியுள் சூழ்வினை தனைநாடி பெற்றதால்
ஆழ்நிலை உறக்க மேருமலை தண்டில்
தாழ்நிலை உய்யும் தருணம் கூண்டில்

தூசுகள் திரண்டுத் துலங்குத் தூலம்
ஆழியுள் அமிழ் துயில் கோலம்
நாழியால் அளந்து மோழியாய் பிளந்து
கோழியாய் கூவும் கூற்றத்து – கூடும்

மலம் மூன்றுள் மயங்கு நிலைகொள்
மனம் வந்துட் புகும் கலம்கொள்
நாளது சுழலும் கோளது ஆட்படும்
பூணது பூண்டுளம் உய்த்துத் துய்த்திட

திறவுகோள் தொலைத்து பூதத்துள் புகுந்த
அரவம் அலைந்து அமிழ்ந்து தொலைந்து
மறதியுட் புகுந்த மாய்மாலத் தொடர்ச்சி
உறவுள் பிணைந்து ஊராய் விரிந்து

தானாய் நிலத்துள் நீந்தும் மீனாய்
காடும் மேடும் கடந்து நாடாய்
ஓடும் ஆறாய் பெருகும் – ஊழின்
கூடும் கூடல் தேடும்.



Tuesday, September 10, 2019

”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…? (சந்திரயான்)




காரணப் படைப்பு நான் – புவியில்
காரணப் பெயர் பெற்றேன் வளர்ப்பில்
கண்ணும் கருத்துமாய் சிவனால் உயிர்த்து
கைகளில் தவழ்ந்த குழந்தை தான்

மண்ணும் மாந்தரும் பயனுற நான்
விண்ணில் பறக்க…! வியந்த விழிகளில்
கலந்த கனவு நான் – என்னோடு
கலந்தே பயணித்த உறவுகள் ஆயிரம்

சுற்று வட்டப் பாதையில் நான்
சுற்றி வந்த வேளையில் – இளையோர்
காதலில் சுற்றியது என் மீதுதான்
விட்டுவிலகி சற்றே நான் சந்திரன்

நோக்கி நகர்ந்தாலும் – உற்ற காதலோடு
விடை கொடுத்த உறவுகளின் கனவை
சுமந்தே திரிந்தேன் அவர்களின் கண்மணியாய்
விண்வெளியில் விடியல் தேடிய மின்மினியாய்

பிறந்தகம் விட்டுப் புகுந்தகம் புகுந்த
பருவப்பெண் போல்தான் நானும் இங்கே
சந்திரனை வந்து சேர்ந்தேன், - என்னுள்
உருவான கருவினைச் சுமந்து - அம்புலி

மடியில் அழகாய் இறக்கி வைக்க
இடம்தேடி இடவலம் அலைந்தேன் – நிலவின்
மடியில் கிடத்தி நெஞ்சம் நிமிர
கொஞ்சம் நேரமானது – இடுப்புவலி வந்தவளாய்

இங்கும் அங்கும் அலைந்தேன் முடிவில்
இதமாய் பதமாய் பெற்றேன் – பிரிந்தேன்
பிறந்தன ஒன்றுக்குள் ஒன்றாய் இரண்டு
பிள்ளைகள் - மூத்தவன் ”விக்ரம்” விழித்தான்

உள்ளுக்குள் உறங்கும் பிள்ளை ”பிரக்யான்”
உலகம் வியக்க சிறகு விரித்து
ஒய்யாரமாய் பறந்தான் பாரீர்…! பாரீர்…!!
தந்தை கைப்பிடித்து நடைப்பழகும் பிள்ளை

வலம்வரும் அறிவியல் எல்லை - சந்திரன்
மடியில் கிடத்தும் வழியில் பயணம்
முடிவில் முடிவை நோக்கிய வழியில்
சற்றே சறுக்கி விழுந்தான் நிலவில்..!

ஒட்டகச்சிவிங்கி பெற்ற பிள்ளையாய் - முடிவில்
மானுடம் தந்த மகனை மடியில்
தாங்கும் நிலவின் தாய்மை பெரிதே..!
ஏங்கும் இதயம் எத்தனை எத்தனையோ..?!

பெருமையும் பொறுமையும் சுமந்தபடி சுற்றுகிறேன்
நல்லோர் காதில் நற்செய்தி சொல்லவே..!
அழாதப் பிள்ளையை தலைகீழாய் தொங்கவிட்டு
தலையில் மார்பில் தட்டித்தட்டி உசுப்பும்

வித்தை ஒன்று நிகழ்ந்துக் கொண்டிக்கிறது
விடாது முயன்று மூச்சுவிட வைக்கும்
வித்தையில் உயிர்த்தெழ இன்னும் சிலநாள்…
”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…!?”.