Monday, September 20, 2010

"தொடர்கிறது காதல்....!!


பனிப் போர்த்திய பூமிப் பெண்ணை
பகலவன் விழித் தீண்டும் விடியல் அது.

பச்சைப் பசேல் தாவரவெளி....பூமியின்
பட்டுப் புடவையாய்....
கொஞ்சம் கலைந்து, அலைந்து
அழகு காட்டியது.

பச்சைப் புல்வெளியில்
படுத்திருக்கும் "அனகோண்டா"
வரப்புகள்.

சிறுமழையாய்...
பனிச்சாரல் சில்லென்று
முகம் தழுவ...
உயிர்ப்பு வந்து உயிர்ப்பூ ஒன்று...
பூத்து நிற்கும் வேளை அது.

மொட்டவிழவா, மொட்டவிழ்க்கவா...
காத்துக் கிடக்கும் சில்வண்டுகள்... செடிக்
காதில் அடிக்கும் "அலாரம்"
எந்தக் கைப்பேசியிலும்
கேட்காத "ரிங்க் டோன்".

கட்டணம் வசூலிக்காத "பூங்காக்கள்"
விவசாயி வீட்டு வயல்கள்.

தன் ஒற்றை இதழில்....புற்கள்
தாங்கி நிற்கும் "இளவட்டக் கல்"
பனித் துளி..!!.

விண்ணில் வெடித்த "சோளப் பொரி"
விண்மீன்கள்.

வான்சிந்தும் "ஒளிமழை"
எரிக் கற்கள்...!!.

மூங்கில் அமரும் முகில் கூட்டம்...
தாங்கி வலையும் தலை மட்டும்..!

பூமியின் மேகக் கூந்தல் உலர்த்தும்
"பொன்னிற ஒளிக்குச்சி"
சூரியக் கதிர்.

இத்தனை அழகும்....
மொத்தமாய் கட்டவிழும் அதிகாலை அது.
தனித்த பயணத்தில்
சன்னலோர இருக்கையில்,
சாலையோர குண்டும் குழியும்
பல்லக்கு பயணத்தை தந்தது.
நகரப் பேருந்தில் நானே "ராஜா".

குலுக்கி குலுக்கி நகர்ந்த பேருந்து
வழுக்கி வழுக்கி பாட்டி இடுப்பில்
நடைபாதைப் பயணம் செய்த
நாட்களை ஞாபகப் படுத்திற்று.

குன்றுகள் தோரும் கவிந்துப் போம்
கார்முகில் தூறல் தோரணங் கட்டித்
தொங்க விடும் காட்சியில் தொலைத்த
மனம் தேடும் நூலறுந்தப் பட்டம்.

சிற்றுயிர் சிலாகிக்கும் நற்றொலியில்
சிக்குண்டுப் போகும் உள்மனம்.

பிளவுண்ட வாய்க்குள் இட்டு வைக்கும்
சிறுதானியம் சில நாள் பிழைக்க வைக்கும்.
சிறகு முளைத்த குஞ்சுக்கு கூடு...
வீடல்ல சிறைச்சாலை...!!

காடும் கானாது, நாடும் போதாது
"சுதந்திரம்" சொல்லித் தரும் பறவைகள்
விண்வெளிக்கு சொந்தக் காரர்கள்.

அத்தனை உயிரனைத் தேகும் சீவ
காருண்ய கருணைத் தாய் பூமி.
எண்ணும் தோறும் சிலிர்க்கும் மெய்..
மெய்யன்றி பொய்யில்லை உன் பொறுமை
எண்ணிப் போற்றாத நாளில்லை.

இத்தனை உயிர்க்கும் நீயே "மூலம்"
"மூலப் பொருள்" முப்பரிமாணத்தில்....
"நான்" என்பது துகள்.
"நாம்" என்பது தூசு.

உள்ளது கடந்தால் இல்லது தோன்றும்.
இல்லது கடந்தால் "உள் அது" தோன்றும்
"கடவுள்".

4 comments:

வினோ said...

/ குலுக்கி குலுக்கி நகர்ந்த பேருந்து
வழுக்கி வழுக்கி பாட்டி இடுப்பில்
நடைபாதைப் பயணம் செய்த
நாட்களை ஞாபகப் படுத்திற்று. /

பழைய நினைவுகள்.. கவிதை கொஞ்சம் நீளம்...

தமிழ்க்காதலன் said...

என்ன செய்வது நண்பா, வாழ்க்கையும் நீளமாத்தானே இருக்கு. ஒரு நெடிய பயணத்தின் சுருக்கம்தான் அது. மிக்க நன்றி வினோத் நிலா....

'பரிவை' சே.குமார் said...

நண்பா....

உங்கள் தளம் வந்து படித்து வாக்கும் அளித்தாச்சு...

நீளமான கவிதைகளை தவிருங்கள்....

நல்லாயிருக்கு.... நிறைய எழுதுங்கள்.

உங்கள் பின் நானும் தொடர்கிறேன்...

நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க சேகர்.., வணக்கம். உங்களின் ஆதரவிற்கும் அன்புக்கும் நன்றி. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.