Friday, September 03, 2010

பிரபஞ்சத் தமிழ்...!?


அரிதுயில் ஆழ்வதரிது...வரினும்
மீள்துயில் மீண்டெழும் மானிடர்க்கே,
மீளாதுயில் மாண்டவர்க்கே
மண்ணில் வாய்க்கும்.

பாழ்வெளித் தொட்டு...
பால்வெளி வரை,
நீண்ட என் உதிர உறவே..!
உனைத் தேடுகிறேன்.

ஆதியி
லண்ட மகன்ற துதான்
ஆயினும் நம்பிண்ட முகந்தது காண்.
வெற்று வெளி யொட்டிக் கற்கோள்
கண்ட தும்வெட்டிக் கொண்டோ முறவை.

பிண்டம் பிளந்த பிரிவை உற
வென்றோம் உயிர் கொண்டோம் நாற்றிசை
மேவி நற்றமிழ்ப் பாடும் உற்றத்துணை
யுனை தேடுவேன் ஊழிக்காலம் வரை.

கற்றமிழ் கமழும் காற்றைத் துழாஉம்
நாசித் துளை யெங்கும் நச்சுத்துகள்.
காற்றை, கடலை, நீடுநல்நிலம் யாவும்
மாந்தர்க் குழாம் நிறைத்து நிறைத்து....,

"மகாமானிட வெடிப்பு" நிகழுங்கால்...., மனித
குலம் அகண்டப் பெருவெளி கலமேறி,
கரைநீந்தி குடியேறக் கோள்த் தேடும்
காலம் வெகுதொலை வல்லக் காண்.

முற்றத்தில் நின்று முகம் காட்டி
எம் சுற்றத்தை அகம்குளிர வரவேற்கும்
உதிரத்து உறவே...!!, என் பிரபஞ்ச பிரிவே...!!
உம்மொடு கைக்கோர்த்து..,நிலவில்

நின்று நிலாச்சோறுத் தின்று,கொட்டும்
மழையில்....சொட்டச் சொட்ட நனைந்து....
வான்புக்கு வண்டமிழ் தேங்கவி சிந்தும்
நாளில் கல் தோன்றாக் காலத்தே முன்

தோன்றி மூத்தத் தனிப் பெருங்குடி
நம் தமிழ்க் குடியென்ப துணரும்
பெருகி வரும் இப்பிரபஞ்சம்.
************************************

2 comments:

சிவாஜி சங்கர் said...

//பிண்டம் பிளந்த பிரிவை உற
வென்றோம் உயிர் கொண்டோம் நாற்றிசை
மேவி நற்றமிழ்ப் பாடும் உற்றத்துணை
யுனை தேடுவேன் ஊழிக்காலம் வரை.//

நல்ல உணர்ச்சி தெறிப்பு இங்கே..
வார்த்தை கோர்த்த சரம் சாரம்..

நீளட்டும் பயணம் வாழ்த்துகள்

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றி சிவா.,