Tuesday, September 21, 2010
"காதல் சித்தன்...!!"
இப்போதெல்லாம் எனக்கு
உன்னிடம் பேச ஒன்றுமில்லை.
என்னிடம் பேசவும் எதுவும் இல்லை.
பேச்சென்பது உள்மூச்சின் செலவு.
சுவாசம் என்பது உயிர்மூச்சின் வரவு.
சுவாசம் புரிந்ததால் சப்தம் நிசப்தமாகிறது.
என்னைப் புரியாத வரை....
உன்னை நேசித்தேன்.
உன்னை நேசிக்க போய்...
என்னை நேசிக்க முடிகிறது.
நேசம் புரிந்ததால் ....
உள்ளுக்குள்ளேயே நேசிக்க முடிகிறது.
உருவம் தேவையற்றதாகிறது.
உயிர் பேசும் போது ...
மனம் அடங்குகிறது.
மனம் அடங்க...
மற்றெல்லாம் துலங்குகிறது.
மறைத்து நின்ற "மாயா"
மனம்தான் என்பது புரிகிறது.
சித்தம் "சுத்தவெளியாக"
சித்தனாகிறேன்.
பொய்யுரைத்தல், புகழுரைத்தல்
மெய்மறத்தல், பொருள் கவர்தல்....
தேவையற்றதாகிறது.
தெளிந்த சிந்தனைக்குப் பின்
என்னை "மனிதனாய்" உணர்கிறேன்.
சமூகம் என்னை "பித்தன்" என்கிறது.
நீ, நான் அகவேற்றுமை.
உடல், பொருள் புறவேற்றுமை.
தனிமை தவம்.
தவம் என்பது தனிமையில் நுகர்வது.
இடையூறில்லா தொடர்பு.
இருப்பதை இருப்பதாய்...
பார்க்கத் தெரிவது.
ஒன்றை இன்னொன்றாய்
திரிக்காதிருத்தல்.
உயிர் தீண்டும் இன்பம்
உணர்வது உயர்வு.
யாவும் நீயாய்,
நீயும் நானாய்....
பிரிவற்ற அபேதம்.
புரியும் போது...புரியும்..
"காதல்".
****************************
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
/ என்னைப் புரியாத வரை....
உன்னை நேசித்தேன்.
உன்னை நேசிக்க போய்...
என்னை நேசிக்க முடிகிறது.
நேசம் புரிந்ததால் ....
உள்ளுக்குள்ளேயே நேசிக்க முடிகிறது.
உருவம் தேவையற்றதாகிறது. /
arumai...
புரியும் போது...புரியும்..
ம்... :)
நன்றி தோழா....தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
மிக்க நன்றி சிவா... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Post a Comment