Wednesday, September 01, 2010

கோகுல கண்ணனுக்கு.....!!!


நிசமோகற் பனையோ நீலவண்ண மோமிது
எவன் எண்ணமோ கண்ணா நானறியேன்,
கறுப்பென்றார் பச்சையென்றார் சிலர் மயில்
கழுத்து வண்ணமென்றார் கண்ணா உன்
எண்ணமென்ன? வண்ண மென்ன? நானறியேன்.

யாது சொல்வேன் யாதவ மாதவா..?.
யதுகுல மென்றார் கண்ணா நீ
கடவுள் என்றால் ஏது குலம்..?.
யாதுமாகி நிற்க்கு முனக்கு குலம்
பார்க்கும் குண முண்டோ நானறியேன்.

அவதார மென்றார் ஆநிரை மேய்ப்பன்
நின்னை ஆயர்பாடி கோமான் தன்னை
கம்சனை இம்சிக்கும் கடவுள் என்றார்.
வம்சம் காக்கும் குலவிளக் கென்றார்
கடவுளா..? காவலா..? மேய்ப்பனா..? நானறியேன்.

தீராத விளையாட்டுப் பிள்ளை யென்றார்.
ஆராவமுத வெண்ணெய் திருட னென்றார்.
ஆழிசூழ் உலகுனக்கு விளையாட்டு பொருளென்றார்.
மலைக்குடை பிடிக்கும் மாவீர னென்றார்
பிள்ளையா..? வீரனா..? திருடனா..? நானறியேன்.

நிசமெதுவோ இருந்துவிட்டுப் போகட்டும் நீ
கேட்டது கொடுக்கும் கடவுளென்பது செல்வம்
சேர் செட்டியார் வணங்க காரணமாம்.
சிறுவயது முதல் உன் புல்லாங்குழல்
ஓசைக்கேட்க ஆசை...! வாசிப்பாயா? நானறியேன்.

நர்த்தன மிட்டபடி ஊதும் உன் புல்லாங்குழலில்
உலகு மயங்குங்கால் நான் எம்மாத்திரம்...?!
மாடுகளுக்கு மட்டுமான மயக்க வோசையோ
நாடுகளும் மயங்கியதாமே...! இசைக் கிசையும்
இரகசியம் எதுவென மதுசூதனா நானறியேன்.

புல் செழிக்கவைத்த புனித நின்
பாதச் சுவடுகள் தங்கள் இல்லில்
பதியாதோ...! வென ஏங்கும் பெண்கள்
இட்டுவைப்பார் நின் பாதம் போல் தொட்டு
வைப்பார் மாக்கோல மந்திரம் நானறியேன்.

மன்மத அழகென்ப மயங்கும் மாதென்ப
மாகாபாரத தூதென்ப குசேல நட்பென்ப
குந்தியின் உறவென்ப மருமகள் மானமென்ப
பரிப்பூட்டிய தேரோட்டிப் பார்த்தனுக் கென்ப
உண்மை நிலவரம் உன்மத்தன் நானறியேன்.

தன்பிள்ளை பிறந்த நாள் தெரியாத
ஏழை வீட்டில்கூட பலகார பட்சனங்களோடு
உன் பிறந்தநாள் கொண்டாட்டம்...இன்றேனும்
கிட்டியதே யென்றெண்ணி குதூகளிக்கும் சிறுவர்க்
குழாம் வாயொழுகும் பட்சனசுவை எச்சில்...!!!

இந்த ஒரு நன்மைக்காகவேனும் இறைவா
உன் பிறந்தநாள் கொண்டாடப் படட்டும்.
இதோ உனக்கு இவ்வெளியேன் படைக்கும்
இன்சுவை "தமிழ்விருந்து" அருந்தவா...!! கண்ணா
இனிய நல்பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!.
=====================================

2 comments:

வினோ said...

அருமையாக இருக்குங்க..

தமிழ்க்காதலன் said...

மிக்க நன்றி வினொத்..