Wednesday, October 12, 2011

”உள் ஒளி”






செதுக்கும் வரை பொருத்துக் கொள்
சற்றே பிணமாய் உணர்வற்று இரு
சாந்தம் கொண்ட கல்லென சாய்ந்து கிட
மனிதம் உன் புனிதம் உணரும்.....


மொழிகளை விழுங்கும் மௌனத்தை விழுங்கு
வார்த்தைகளின் சூட்சுமம் உணர்ந்து பேசு
பேச்சைக் குறைத்து மூச்சை நிறை
பேதங்கள் யாவும் புரிந்து விடும்....


அறிவற்ற அறிவை அறி அறிந்தபின்
அதிலேயே நிலைத்து நில் அறிவின்
அறியாமை புலப்பட சிறுமைகள் விலகும்
ஆழ்ந்த உணர்வில் அறிவு புலப்படும்...


குழைந்த மனம் குழைந்தபின் இறுகட்டும்
குறைமதி கொண்ட வாழ்வுக்காய் உருகட்டும்
வளர்மதி வளர வளரும் மதியை கவனி
அறிவெது ஆணவமெது இனம் காண்


உணர்வது யாவும் உண்மை என்றறி
உண்மைகள் தவிர்த்த யாவும் எறி
உள்ளுக்குள் உன்னை உனக்குள் எரி
உயர்ந்த பொருளாய் உலகில் திரி

Monday, September 26, 2011

”நந்தவனம்...”




காத்திருக்கும் நந்தவனத்தில் 
கவிஞனின் கால்தடம் பதிகிறது.
பூத்திருக்கும் பூக்களெல்லாம்
புன்னகைத் தூவி வாழ்த்துது.


கவிதைக்கு மடல் தீட்டும் மலர்கள்
கவிஞனுக்கு இதழ்க் காட்டி சிரிக்கிறது
கவிதைக்கு பரிசாக தேன்மாரிச் சொரிகிறது
கருவண்டின் ரீங்காரம் இசைமழைப் பொழிகிறது


தூரல்களாய் விழும் கவிதைச் சாரலில்
தூங்கும் மொட்டுக்கள் படிக்கும் மெட்டுக்கள்
துள்ளிவரும் சந்தங்கள் கவிஞனுக்கு சொந்தங்கள்
மடல் மத்தளத்தில் மழைத்துளி சத்தங்கள்


பூக்களின் குழல்களில் வண்டுகளின் நாதசுரம்
புல்லாங்குழலில் ஒடிவரும் கவிஞனின் ஏழுசுரம்
இலைகளைக் கட்டிக் கொண்ட வேர்களில்
இன்பத்தின் சாரங்கள் துளிர்க்கும் துளிராய்


மின்னும் இலைகளில் பொன்னும் குறையும்
மிடுக்கு காட்டிச் சிரிக்கும் அழகில்
இருக்கும் கவலை மறந்துப் போகும்
இதம் தரும் இனிய வேளை


தண்டுகளில் தாவும் கரங்களை தழுவும்
சில்லிட்ட சிலிர்ப்பான தருணங்களில் மனம்
இலைகளை முத்தமிட்டு இதழ்களை ஈரமாக்கும்
மலர்களின் நாணத்தில் மௌனம் ஆடையாகும்


புதியப் பாதைக்கு புறப்படும் கவிஞனை
பொன்வண்டும் பூச்செண்டும் தந்து வழியனுப்பும்
அன்பான அந்தவனம் எப்போதும் சொந்தவனம்
உனக்காக வாழ்ந்துப் பார்க்க ஒவ்வொருநாளும்


உயிர்ப்போடு வந்துப் போகிறான் கவிஞன்.