முன்னொரு சென்மம் முளைத்த காதல்
பின்னிப் பிணைந்து
பின்னும் நீளும்
எண்ணத் தொடர்பில்
எழுதும் விதி
எண்ணவோ எழுதவோ
வியப்பில்...!!
கண்ணின் மணிக்குள்
விழுந்த ஒளிக்குள்
கலந்தே நுழைந்த
காந்தக் காதல்
உள்ளும் புறமும்
ஓடும் மூச்சில்
உயிரின் உயிரை
தீண்டும்
அண்டம் பிறந்து
பிண்டம் நுழைந்த
பரவெளிப் பாய்ச்சல்
அடர்ந்த அன்பில்
அகமும் புறமும்
ஊட்டம் காணும்
வளர்ந்து மலர்ந்து
செழிக்க
தூண்டும் தூண்டல்
தூண்டில் போடும்
வேண்டும் மனதின்
வேண்டல் யாவும்
தாண்டவம் ஆடும்
தன்னொரு பாதிக்கு
ஆழ்மன ஆசைகள்
துளிர்விட
பாதியாய் ஆதியில்
பிரிந்த பாதியாய்
பாதிக்கும்
பாதியின் ஆதிக்கும் பாதியாய்
பாதியைப் பிடிக்கப்
பாதைத் தேடும்
பாதியில் இணையும்
பாதிக்காய்...!!
வாதிக்கும்
உள்ளுள் தன்னை சோதிக்கும்
வருத்தம் வந்து
வருத்த வருந்தும்
பெருத்த ஏமாற்றம்
பிணியாய் துரத்த
கருத்த மனம்
கன்னும்
தேடும் நாளும்
தேடாமல் ஓயாது
பாடும் உறவின்
பாசம் தேயாது
நாடும் மனம்
நன்மை தீராது
வாடும் உயிரின்
வேரில்
கண்ணீர் சொரியும்
காதல் துளிர்க்க
பன்னீர் பூக்கள்
பார்த்துப் பேசும்
பால்நிலவு மதி
மயக்கும் பால்வீதி
பயணத்தில் பருவப்பால்
தேடும்
உயிரின் துருவங்கள்
ஒன்றை ஒன்று
தொட்டுத் தொடரும்
பிறவிப் பேசும்
கட்டுக்கடங்கா
காதல் ஊறும் – மூலம்
உணர்ந்து மோகம்
மூளும்
பாகம் பிரிந்த
தேகம் தன்னில்
பாகம் பிணைய
பாதை வகுக்கும்
மேகம் மிதக்கும்
நீரில் கலக்கும்
ஆவிக்குள் ஆவி
சுரக்கும்
ஐந்தாற்றல்
அடங்கி எழும் ஐம்பொறி
பைக்குள் பொதிந்த
பாசப் பொறிக்குள்
நைந்து நைந்து
நாட்கள் கழியும்
பேராற்றல் பெரு
வெள்ளம்
அகம் நோக்கி
முகம் நோக்கி
ஆழ்ந்து அமிழ்ந்து
உயிர் நோக்கும்
வாழ்க்கை வாழவே
மனம் ஒப்பும்
வாழாது வீழ்ந்துப்
போவதோ..!!
நிலம் மோதும்
கடலாக நீயும்
கடல் தாங்கும்
நிலமாக நானும்
அலை மோதும்
கரைமீது ஆசைகள்
எழுதும் விழியின்
மொழிகள்..!!
நிலவின் தீண்டல்
நீயென காட்டும்
இரவின் அழகில்
இளமை கூட்டும்
உறவின் உரிமை
உயிலாய் தீட்டும்
காதல் பட்டயக்
கவிதை..!!
கனவில் வந்த
நினைவில் வந்து
உணர்வில் ஒன்றி
உயிரில் கலந்து
புணர்வில் பொங்கி
பொதுவில் தங்கி
அழியா அன்பில்
ஆழ்ந்த
நொடிகள் பொழுதாய்
நீளும் அழகில்
விழிகள் மொய்த்து
விழிகள் மொழிந்த
முத்தச் சுடர்கள்
பால்வீதி எங்கும்
பருவத் துகளாய்
மின்னும்
இடையொரு பாகம்
இழையோடு தாகம்
மடையேறு மோகம்
கடைவாய் மீறும்
மனம் தின்னும்
எண்ணம் தாங்கும்
மதுக்கிண்ணம்
தேகம் ஆகும்
நினைவுகள் ஊற்றி
நிறைக்க நிறைக்க
நிறைவுப் பெறாத
பிண்டப் பாத்திரம்
கனவுகள் ஊற்றியும்
காலியாகும் குடம்
உணர்வுகள் ததும்பத்
ததும்ப
ஆசைகள் ஊற்றும்
அட்சயப் பாத்திரம்
மாதொரு பாகம்
மீதொரு காதல்
மீளாது சொல்லி
மாளாது என்றும்
தீராது இன்பச்
சுரங்கம்..!!
சிந்தும் மொழிகளில்
சிணுங்கள் கொஞ்சும்
சந்தம் வழியும்
சந்தனக் கிண்ணம்
சொந்தம் சொந்தம்
என்றொரு சந்தம்
பண்ணில் பொழியும்
உறவின்
இசையில் இசையும்
இன்பக் கசிவில்
கனிந்து கனிந்து
உயிரின் சுடரில்
காதல் மிளிரும்
கவித்துவ அடர்வில்
பொழியும் அன்பே
பூவுலகாம்.
1 comment:
மிக நன்று....ஒவ்வொரு பத்தியும் ஓராயிரம் உணர்வுப் பேழைகளின் வண்ணக் கலவையாய் மிளிரும் அழகு,இதம்..இனிமை...அபாரம்...அற்புதம்.உணர்வுகளின் வேர்நுனிபின் வெளிச்சப் பொட்டும்..உம் கவிதைத் துடிப்பில் மழலையின் பூஞ்சிப்பாய்...நெகிழச் செய்கிறது. வாழ்த்துக்கள்.
Post a Comment